செவ்வாய், 26 ஏப்ரல், 2016

அண்ணலைப் போற்றுக

                        அண்ணலைப் போற்றுக
                         கட்டளைக் கலித்துறை


கொல்யானை கூற்றுவன் தக்கன் குணவில்லன் மாற்றினானை
வல்லரக்கன் தொல்மலை தூக்க வளமழி வல்லானை
கல்லால நீழலில் கற்றார் கடைஞானம் காட்டுவானை,
அல்லல் அகற்றும் அருங்கன்னிஅண்ணலைப் போற்றிடுக.

                                  பொருள்
தாருகாவனத்து முனிவர்கள் சிவனைக் கொல்லுமாறு அனுப்பிய யானை,தன்னையும்,
தன் பக்தனையும்,பாசக் கையிற்றால் பற்ற முனைந்த இயமன்,முறை தவிர்த்து,தன்னை
அழைக்காமலும்,அலட்சியப் படுத்தியும், வேள்வி ஆற்றிய தக்கன்,தவநிலையைச் சிதைக்க
முனைந்த மன்மதன்,ஆகியோரை,அழித்துப் பின்,அருள்பொழிந்தானை,
 இராவணன் கைலை மலையையே தூக்க முற்பட்ட பொழுது,தனது கால் கட்டை விரலால்
மலை முகட்டை அழுத்தி,அரக்கனின்வலிமையைக் குலைத்தவனை,
கல்லால மரத்தடி அமர்ந்து,சனகாதி முனிவர்களுக்கு உயர் ஞானம் வழங்கிய ஆசானை,
கன்னியாகுடியில் வீற்றிருக்கும் கைலாசநாதனைப்போற்றி வணங்கினால் துன்பமெல்லாம்
நம்மை விட்டு அகலும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக