புதன், 27 ஏப்ரல், 2016

இளவேனில்

                                 இளவேனில்
                 எண்சீர் ஆசிரிய விருத்தம்

போற்றும் ஒலிபோல் பொங்கிடும் சோலை
       பொன்னிறப் பறவைகள் போட்டிடும் கூச்சல்
நாற்ற மலரும்,நறுவில் மதனும்,
       நன்னிலாக் கருமேக நடுவாம் இளவேனில்
ஏற்றேன் இதயம் இனிமைப் பொழுதே
     என்றே பசப்பிய மொழியை மறந்து
ஆற்றாமை ஆற்ற வைத்த ஆற்றலை
      அறிந்தே இழிந்தேன் அங்கன்னி இறைவா!
               
                                பொருள்
  இளவேனில் காலத்து இனிய மகிழ்வை எண்ணிப் புலம்பும் தலைவி.
இறைவனைப் பல்லோரும் போற்றுகின்ற ஒலிபோல ,வளமை நிறைந்த சோலையிலே
பல்வேறு பறவைகள் கூச்சலிடுகின்றன.சோலையிலே பூத்துக் குலுங்கும் மலர்கள்:வானில்
கருமேகக் கூட்டத்து நடுவே முகம் காட்டும் நிலவு:நடுவே நின்று கணை தொடுக்கும்
மன்மதன்:இத்தகைய இளவேனில் பருவத்தே,வந்து,அணைத்து,என் மனம் இயைந்தது உன்னோடு,
இனிமைப் பொழுதை இணைந்து கழிப்போம்"என்றெல்லாம் பசப்பு மொழிகளைப் பேசியவன்,
அம்மொழிகளை,என்னை,மறந்தான்:அவனது பிரிவால் என்னை வாட வைத்தான்;அவனது
நடிப்பாற்றலை எண்ணி,எண்ணி,,அவன் பிரிவைத் தாங்க முடியாது,நொந்து போனேன் நான்.
உன் பிரிவால் வாடும் என் நிலையைப் பார் இறைவா!கன்னியாகுடிக் கைலாச நாதனே!
கடைக் கண் கருணை காட்டுவாயா?எனப் புலம்புகிறாள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக