சனி, 23 ஏப்ரல், 2016

எண்சீர் ஆசிரிய விருத்தம்

              எண்சீர் ஆசிரிய விருத்தம்


மூர்த்தியின் சந்தனம் முடியினில் ஏற்றானை,
       முசுகுந்தன் எறிந்த வில்வம் அணிந்தானை,
வார்முலைத் தாடகை   வரசிரம் குனிந்தானை,
      வன்தொண்டன் தூதாக ஆரூரில் நடந்தானைத்
தீர்நோய் தவிர்க்கத் தீராநோய் அளித்தானைத்
      திகழ்தமிழ்ப் பாடலால் தண்பதம் தந்தானைக்
கார்குழல் கவின்பால் கவுணியர்க்கு ஊட்டினானைக்
      கன்னியா குடியானைக் கைதொழுது வணங்குவமே .

                                       பொருள்
  சந்தனக் கல்லிலே சந்தனக் கட்டை தேய்ந்து தீரும் அளவு,அரைத்தபின்னரும்
ஒன்றிநின்ற உள்ளத்தார் மூர்த்தி நாயனார் தன் கையையே கட்டைபோல் அரைக்கத்
துவங்கிக் குருதி வடிவதும் அறியா நிலையில் தடுத்தாட்கொண்டு,அவரின் பக்திச்
சந்தனம் ஏற்றானை,
   கயிலை மலையிலே பூத கணங்களுக்கு இடையே வாழும்குரங்கு ஒன்று,சிவபெருமான் மீது
அறிந்தோ,அறியாமலோ வில்வத் தளிர்களைப் பறித்துப் போட்டபடியே இருந்தது:அதுகண்டு
வெகுண்ட பார்வதி தேவியை அமைதிப் படுத்தி,அதன் பக்தியை ஏற்று,மறுபிறவியில் அரசனாகப்
படைத்தார்சிவன்:அரசனானாலும் தனது முகம் மட்டும் முசுவாகவே இருக்க வேண்டும் என
விரும்பிய எண்ணத்தையும் நிறைவேற்றி அருள் செய்தார்.
     இராவணனின் தங்கையான தாடகை சிறந்த சிவபக்தை.அவள் ஒருசமயம் சிவபூஜை செய்யும்
பொழுது,புடவைத் தலைப்பு சரிந்து விழ,அரைகுறை ஆடையில் பூஜை செய்தல் சிவனை
அவமதித்தல் ஆகுமே,என அஞ்சித் தன் அர்ச்சிக்கக் குவித்த கைகளால் டுடவைத் தலைப்பைப்
பற்றியபடி,மலர்களை இறைவன் தலையில் அர்ச்சிக்க முடியாமல் தவித்தாள்.அப்பொழுது
இலிங்க வடிவினான சிவபெருமான் தன் தலையைக் குனித்து,அவளது மலரை,மாலைகளை
ஏற்றுக் கொண்டார்.அந்தத் திருத்தலம் திருப்பனந்தாள் என்னும் ஊராகும்.
    சுந்தரர் பரவை நாச்சியாருக்குத் தெரியாமல்,சங்கிலி நாச்சியாரையும் மணந்து கொள்ள அதனால்
ஊடல் கொண்ட,பரவை நாச்சியாரிடம் சுந்தரருக்காக.அரூர் வீதிகளிலே நடந்து தூது சென்றார் சிவன்.
தோழமை கொண்ட அடியவர் சுந்தரர் ஆயிற்றே.
   சமணசமயத்தில் பற்றுள்ள,தன் தம்பியைமாற்றிச் சைவசமயத்திற்கு மாற்ற விரும்பிய திலகவதியார்
சிவபெருமானிடம் முறையிட்டார்:அவருக்குச் சூலை நோயைக் கொடுத்து,அவர் மனம் மாறியதும்
நோய் தீர்த்தும்,மருள் நீக்கியார் நாவுக்கரசர் ஆகித் தேவாரப் பதிகங்கள் பாடியதும்,அடி நிழலில்
அவருக்கு இடமும் கொடுத்தார்.
     சீகாழி என்னும் ஊரில்,குளக்கரையில்,குளித்துக் கொண்டிருந்த தந்தையைக் காணாது,அழுது
கொண்டிருந்த ஆளுடைய பிள்ளை மீது கருணை கொண்ட சிவபெருமான்,வான்வழி வந்து,அம்மை
பார்வதி தேவியிடம் அக்குழந்தைக்குப் பால் கொடு"என்றதும் அன்னையும் அருமுலைப்பால்
ஆக்கமுடன் அளித்தாள் அடுத்த நொடி,அக்குழந்தை பதிகம் பாடத் தொடங்கியது.
     இப்படிப் பட்ட பெருமைக்கும்,போற்றுதலுக்கும் உரிய கைலாசநாதன் கன்னியாகுடியில்
அருள் பாலிக்கிறான்.அவனைத் தொழுது வணங்குவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக