திங்கள், 25 ஏப்ரல், 2016

தூது --தமிழ்

                                        தூது --தமிழ்
                      எண்சீர் ஆசிரிய விருத்தம்

வழியுரை வள்ளல் வளமார் தமிழே!
     வண்டார் குழலி வலத்தான் வடிவில்
குழைந்தேன்:குலைந்தேன்:கொடுமைக் கருப்பன்
     குறுவில் துளைக்கக் குணமெலாம் இழந்தேன்:
பழமைச் சங்கத் தோழமை கொண்டோய்!
      பாவை பாடும் படுதுயர் பகர்ந்து,
மழைக்கண் அருளும் மாலையும் கேட்டே
     மாலைக்குள் வந்தால் மனமெலாம் மகிழ்வே.

                                      பொருள்
இறைவன் மீது பற்றுற்ற தலைவி,பல்வேறு பொருட்களைத்  தூதாக விடுதல் மரபு.
கன்னியாகுடிக் கைலாசநாதர் மீது காதலுற்ற தலைவி,தமிழையே தூதாக அனுப்புகிறாள்.
      உலக ஆன்மாக்களுக்கு வழி காட்டும் வள்ளலின் வளம் கலந்த தமிழே!(தமிழ்ச்சங்கத் தலைமைப்
புலவனாக இருந்தவர்:இறையனார் களவியல் பாடியவர்:கொங்குதேர்"என்ற பாடலைத்
தருமிக்காக எழுதியவர்:இயல்,இசை.நாடகத் தலைவர்" என்ற பலவேறு தொடர்புகள்
இறைவனுக்கும் தமிழுக்கும் உண்டு என்பதால்,வளமார்தமிழ் ஆகிறது.)
வண்டுகள் மொய்க்கும் குழல் கொண்ட கல்யாணி அம்மைக்கு வலப்பாகம் அளித்த
கைலாசநாதன் மீது,அவன் அழகின் மீது,பற்று கொண்டேன்:மனமெலாம் நிறைந்து அவன்
இருப்பதால் நிலை குலைந்தேன்:மன்மதன் தனது கரும்பு வில்லும் மலர்க்கணையும்
கொண்டு தாக்க,எனது அச்சம் மடம் போன்றவற்றை எல்லாம் இழந்தேன்:உன்னிடம்
உதவி கேட்டு நிற்கின்றேன்:மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் உனக்கும்,அவருக்கும் தொடர்பும்,ஈடுபாடும்
இருப்பதால் அவரிடம்,என்னைப்பற்றியும்,என் காதல் பற்றியும் நீ எளிதாகக் கூறமுடியும்.
எனது மனத்தைப் புரிய வைத்து,அவருடைய அருள்பொழியும்,கண்நோக்கமும்,அவரணிந்த
மலர் மாலையும் எனக்காக வாங்கி வா.இன்று மாலைக்குள் அவர் மனமறிந்து வந்து சொன்னால்,
மாலையை வாங்கி வந்தளித்தால் என் மனமெல்லாம் மகிழ்ச்சி கூடும்,,என்று கூறித் தமிழைத் தூது அனுப்புகிறாள் தலைவி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக