ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

நூல்

                                                               நூல்
                              நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா
                                                            தரவு
  பொன்னானைப் பூத்துக் குலுங்கும் கொன்றையானை
  பெண்ணாளைப் பாகம்கொடு தண்கன்னி காப்பவனை
 மண்ணெல்லாம் புரப்பவனை மனத்தகத்தே நிலைத்திடுவோம்.
                                                   தாழிசை
அனலேந்தி அழலானான்:அணிகங்கை முடியமர்த்திப்
புனலானான்:புன்னாகக் கங்கணத்தால் புதுமையானான்:
வனக்காட்டில் பிணச்சாம்பல் தனைப்பூசி ஒளியானான்:
கணப்பூதம் சூழ்ந்துதொழும் கைலாசன் கன்னியானே .

வேள்விபலி தக்கனெனில் வேதபலி பிரம்மனாவான்:
கால்மிதித்து அந்தகனும்,கண்பொரித்து மன்மதனும் ,
சூலத்தால் காலயமன் சிரிப்பினால் திரிபுரமும்,
ஞாலம்கா சம்ஹாரன் கைலாசன் கன்னியானே.

சுந்தரனைப் பேசவிட்டுச் சொந்தபந்தம்  காட்டியவன்:
மைந்தனழப்  பாலூட்டிய மாதரசியின் உடனுறைவோன்:
நைந்தமனச் சமயத்தால் நைந்தவுடல் மாற்றியேற்றவன்:
ஐந்தெழுத்து அருள்நோக்கக் கைலாசன் கன்னியானே

                                             தனிச்சொல்
எனப்போற்றி,
                                           சுரிதகம்
முந்துதமிழ் முன்னோர்கள் மூவரிலும் மூத்தோனைச்
செந்தமிழால் போற்றிய செம்மைவழி -----வந்தமுறை
பைந்தமிழில் பாடலுற்றேன் பா.
சான்றோர் போற்றியே சாற்றினேன் கலம்பகம்
ஆன்ற கன்னி அற்புதன் புகழே.                  2

                                                      பொருள்
       பொன்னார் மேனியன்:பூத்துக் குலுங்கும் கொன்றை மலர்மாலை அணிந்தவன்:
மலைமகளை தன்னுடலில் ஒருபாகமாகக் கொண்டவன்;கண்ணியாகுடியையும்
உலகையும் காப்பவன்;கைலாசநாதர்"என்னும் திருப்பெயர் கொண்ட இறைவனின் புகழ்
பாடுதலே நூலின் நோக்கமாகும்.

          தீயைக் கையிலே ஏந்தித் தீயாகவே காட்சி தருபவன்:தலையில் தாங்கிய கங்கையால்
குளிர்ச்சி மிக்க அருள் பாலிப்பவன்:புதுமையாய்ப் பாம்பணி அணிபவன்:சுடுகாட்டுச் சாம்பலைப்
பூசி,வெண்ணிறமாய்க் காட்சி அளிப்பவன்:பூதகணங்கள் சூழ்ந்து தொழுபவன்:கைலாசன்.
அவன் வீற்றிருக்கும் ஊர் கன்னியாகுடி.
      தவறான சிந்தை கொண்ட வேள்விக்குத் தக்கன் பலி ஆனான்:கர்வத்தால் பிரமனும்
ஒருதலை இழந்தான்:காலினால் அந்தகனும்,கண்ணால் மன்மதனும்,மாய்ந்தனர்:
சூலத்தால் இயமனும்,சிரிப்பினால் திரிபுர அரக்கர்களும் மாய்ந்தனர்:உலக நன்மைக்காக
சம்ஹாரம் நடத்திய கைலாசன் வீற்றிருக்கும் ஊர் கன்னியாகுடி.
      சுந்தரனை,""பித்தா"பேயா"என்றெல்லாம் பேசவைத்துப் பின் நண்பனாய்,உறவாய் ஏற்றுக்கொண்டவன்:குளக்கரையில் நின்று அழுத ஞான சமபந்தனுக்குப் பாலூட்டிய
மலைமகளின் மனத்தகத்தே உறைபவன்:சமண சமயச் சேர்க்கையால் நோயுற்று வாடிய திருநாவுக்கரசநின் மனமும் உடலும் மாற்றி அடியவராய் ஏற்றுக்கொண்டவன்:
நமசிவாய"என்னும் ஐந்தெழுத்து அருள் நோக்கம் கொண்ட கைலாசன் வீற்றிருக்கும் ஊர்
கன்னியாகுடி.
                                              எனப்போற்றுவோம்
  தமிழ்ச் சான்றோர்கள் சிவபெருமானைப் போற்றிப் புகழ்ந்தனர்:அதே முறை தழுவி நானும்
இந்நூல் பாடலுற்றேன்"கன்னியாகுடிக் கைலாச நாதர் புகழ் பாடுவதே "கன்னியாகுடிக்
கலம்பகம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக