செவ்வாய், 19 ஏப்ரல், 2016

களி

                                  களி
        எண்சீர் ஆசிரிய விருத்தம்

நாதனின்  நல்வரம் பெற்றவர் களித்தார்:
      நாமகள் நான்முகன் நாவில் களித்தாள்:
ஆதவன் மலர்வித்த தாமரை களித்தது
     ஆம்பலோ அருநிலவின் பொழிவில் களித்தது:
பாதியுருச் சோதியாள் பார்வதி களித்தாள்:
   பால்குடிப் பைந்தமிழ்ப் பிள்ளையும் களித்தது:
ஆதியான் அருளுடைக் கன்னியும் களித்தது:
     ஆலமுண்ட கோலத்தில் அன்பருள் களித்தது.

                                   பொருள்
பரம்பொருளிடம் வரம் பெற்ற முனிவர்,தேவர்,அரக்கர்,ஆகிய எல்லோரும் களிப்பில் மெய்மறந்தனர்.
நாவிலே பிரமன் தனக்கு இடம் கொடுத்ததை எண்ணிக் கலைமகள் களிப்பில் ஆழ்ந்தாள்:
சூரியன் இதழ் தொட்டு மலர்வித்த தாமரை மலரும் களிப்பால் விரிந்தது:அல்லிமலரோ வெண்ணிலவின் குளிர்ச்சிப் பொழிவினால் மலர்ந்து மகிழந்தது:
சரிபாதி உரு இறைவனிடம் பெற்ற அன்னையும் மகிழ்ந்தாள்:அழுத தனக்கு ஞானப் பால் ஊட்டிய
அன்னையின் அன்பால்,ஞானக் குழந்தையாம் சம்பந்தர் களிப்பு கவிதைச் சிரிப்பு:
மூவர்க்கும் முதல்வனான கைலாசநாதன் அருள்பாலிக்கும் ஊர் ஆதலின் கன்னியாகுடியும்
களியுவகை கொண்டது:பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை உண்ட கோலத்தில்
அன்பும்,அருளும் வெளிப்பட்டு உலகை ,களி கூரச் செய்தது.
          இங்கு களி கட்குடியால் வருவதுமட்டும் அல்ல:நல்ல செய்கையிலும் தோன்றும் என்பது
வெள்ளிடைமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக