புதன், 10 பிப்ரவரி, 2016

சிறுபறைப்பருவம்--9

ஆற்றுநீர் அகலம் அடியொடு சுழன்று,
           அருகுடை வயலில் பாய
நாற்றுடன் நடுவில் நல்லிதழ் விரித்து
          நறுமணம் குழைத்த தாமரையே!

வேற்றிதழ் விரும்பி விரிகால் வண்டினம்
           விரைவாய்ச் சுற்றி விதைக்கும்
மாற்றுடை நறுமண மகரந்தப் பந்தலில்
          மாந்திய மணமுடைத் தென்றலே!

தோற்றிய மரத்தின் தொன்மை தொட்டுத்
            தோற்றாச் சுவையைப் பெற்று
மாற்றான் ஏற்கும் மதுச்சுவை கலந்து
         மாறா வளந்தரு கனியே!

சேற்றிதழ் அல்லியூர் போற்றிடும் செல்வா!
           சிறுபறை முழக்கி அருள்க.
சீற்றத் திரிபுரம் சிதைத்தவன் செல்வா!
          சிறுபறை முழக்கி அருள்க,

                                   பொருள்
காவிரியாற்றின் நீர்ப்பரப்பு வாய்க்கால் வழியே வயலில் பாய்ந்தது;நடப்பட்ட நாற்றுகள் நடுவே
இதழ்களை நறுமணத்துடன் விரித்த தாமரை மலர் போன்றவனே!
      ஒருமலரைச் சுவைத்த வண்டினங்கள் அடுத்த டுத்து மலர்களின் தேனைச் சுவைக்கும்;அப்பொழுது
அதுசெல்லும் இடமெல்லாம் நறுமணம் பரவும்;மலர்கள் நிறைந்த பந்தலில் இம் மணங்களை
எல்லாம் பருகிபருகி நறுமணமாய்த் திகழ்ந்தபடிப் பாய்ந்துவரும் தென்றல் காற்று போன்றவனே!
     தன்னைத் தோற்றிய மரத்தின் வாரிசான விதைகளைச் சுமந்து,மரம் தோற்றாத அரும்
சுவையைத் தாங்கி.விரும்பாதவனும் ஏற்கும் இனிமை கலந்த சுவையைக் கலந்து,உண்போர்க்கு
நல்ல பலம்,பலன்,வளம் தரும் கனி போன்றவனே!
     சேற்றில் தோன்றிய அல்லிக்கொடியில் அல்லிமலர் மலரும் கன்னியாகுடி மக்கள் போற்றிடும்
முருகா!சிறுபறை முழக்கி அருள்க.
சீற்றமும் கொடுமையும் கொண்ட திரிபுரக் கோட்டையை அழித்தவன் மைந்தனே!
சிறுபறை முழக்கி அருள்வாய்.
                                                         விளக்கம்
தொன்மை தொட்டு ....மரத்தின் வழி வழி மரபு...தோன்றும் கனி தனக்குள் உள்ள விதையால்  மரம்
தோற்றுவித்தல் தொன்றுதொட்ட பழக்கம் ;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக