புதன், 10 பிப்ரவரி, 2016

சிறுபறைப்பருவம் --8

நந்திதேவன் நமச்சிவாய மந்திர நாட்டியத்தான்
               நடனத்தில் நட்டுவாங்க நயமுரசு
நன்மையும்நா  வன்மையும்சேர்  தன்மையும்கொள் நல்விழாகாண்
                 நாடுநகர் அழைக்கின்ற விழாமுரசு

மன்னனவன் நாடுகாக்க முன்னவனாய் நடக்கும்படை
                மன்னுகவே மாவெற்றி முழங்குமுரசு
புன்னைநல்லூர் மாரியம்மன் சுடரக்னி பவனியில்
              புரண்டாடும் பக்தர்களின் புதுமுரசு

நன்செய்நில நாற்றுகட்டு நடும்போது நல்லுழத்தியர்
            நலுங்குபாடத் தாளமிடும் உழவுமுரசு
நன்மங்கல மணவிழா நகருரைக்கும் மணமுரசு
            நல்லொலிகள்  நாதனே!நீ அறியாததோ!

செங்கமலம் செங்கரும்பு செய்விளையூர்ச் செல்வா!
             சிறுபறை  முழக்கி  அருள்வாய்.
 செழும்பசு எழும்பாசத் தொழும்பதி விழுச்செல்வா!
            சிறுபறை முழக்கி அருள்வாய்.
                                          பொருள்
 கயிலையிலே சிவபெருமான் நடனம் ஆடுகின்ற பொழுது,நடனத்தின் பல்வேறு வாத்தியங்களுக்கு
இடையே தனியாக,நடுவாக நட்டுவாங்க நயத்தை எடுத்து முழங்கும் நந்தி தேவரின் முரசு;
நன்மையும் பேச்சும்,பலப்பல வேறு தன்மைகளும் கொண்ட விழாவைக் காண  வாரீர்!என
நாடுநகர மக்களை அழைக்கும் விழாமுரசு
        நாட்டை ஆளும் மன்னன் தன் நாட்டின் மீது பகைவன் படை எடுத்து வருகையில் ,அவனை
எதிர்த்துப் போரிடப் படை திரட்டித் தானே முன் நின்று போரிடும் காலை அடிக்கப் படும்
வெற்றி முரசு;புன்னை நல்லூர்  ஊரில் மாரியம்மன் கோயில் திருவிழாவில் தீ மிதி நாளன்று
தீச்சட்டி எடுக்கும் பக்தர்கள் ஆடும் ஆட்டத்திற்கேற்ப அடிக்கப் படும் புது முரசு.
       மருதநிலத்தில் நாற்று நாடும் உழத்தியர்கள் பாடும் பாட்டிற்கேற்ப உழவர்கள் அடிக்கும்
உழவு முரசு ;திருமண விழாவை நகரமக்களுக்கு உரைத்து,வருக என வரவேற்கும் மண முரசு;
முரசுகளின் ஒலியெல்லாம் முருகனே! நீ அறியாததோ!
          தாமரையும்,கரும்பும் விளைகின்ற நன்செய் நிலங்கள் கொண்ட கன்னியாகுடியின் செல்வா!
சிறுபறை முழக்குக.
பசுவான உயிர்கள் மனத்திலே தோன்றும் பாச உணர்வால் பதியாகிய சிவனைத் தொழுவார்கள்
அச்சிவனின் மைந்தனே!சிறுபறை முழக்குக.
                                                         விளக்கம்
செய் விளையூர் ....இங்கு செய்'என்பது நன்செய் நிலத்தைக் குறிக்கும்
செழும்பசு...........இவ்வரிகளில் சைவ சித்தாந்த அடிப்படை காட்டப் படுகிறது;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக