செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

சிறுபறைப்பருவம்--7

கூனல்பிறை  கொன்றைமலர் குளிர்கங்கை அரவுசூடிக்
                        கூத்தாடும் தந்தையாய் ஆனவா!
மான்நேர்விழி மாறாத மாக்கருணை மகிஷாசுரி
                        மதிக்குழல்செவி மாதாவின் சக்திவேலா!

தானகந்தைத் தானவனின் தருக்கதை  மாற்றியே
                          தாங்குமயில் கொடிச்சேவலாய் ஏற்றவா!
வானகத்தோர் வாட்டமதை வளப்போரால் நீக்கியே
                          வண்டுமொய்மலர் மகபதிக்கு வழங்கியவா!

தேன்காதல் நூலியலின் தேர்ந்தெடு பல்லுரையில்
                        தெய்வவுரை காட்டிடப் புலவனானவா !
 கூனரசன் கொள்மதம் மாற்றிடக் கழுகேற்றியே
                        குலஞான  சம்பந்தன் ஆனவா!

 சேனைசெல்வம் சிவன்சேவடி சேர்க்குமூர்ச் செல்வா!
                       சிறுபறை கொட்டி அருள்க.
தானம்நிறை தர்மம்முறை தாங்குகன்னிச் செல்வா!
                       சிறுபறை கொட்டி அருள்க.
                                            பொருள்
மூன்றாம் பிறை அணிந்து,கொன்றை மலர் சூடிக் கங்கையைத்தாங்கி,பாம்பினையும் அணிந்தசடையை
உடைய சிவஸ்ரூபமாய்  விளங்குபவனே!மான்போன்ற கண்ணிலே மாறாத கருணை கொண்டவள்;
ஆயினும் தீய சக்திகளை அழிப்பவள்;அபிராமி பட்டருக்காகத் தனது செவியில் அணிந்திருந்த
தோட்டை நிலவாய் ஒளிரச்செய்தவள்;அந்த அன்னையின் சக்திவேலாயுதா!
        கர்வமுற்ற சூரபன்மனின் கர்வம் போக்கி,அவனைத் தனது ஊர்தியான மயிலாகவும்,கொடியான
சேவலாகவும்.ஏற்றுக்கொண்டவனே!விண்ணகத்தேவரைத் துயருறுத்திய சூரனையும்,அவன் கூட்டத்தையும் அழித்து,இந்திரபதவியை இந்திரனுக்கு மீட்டுத் தந்தவனே!
         இறையனார் களவியல் நூலுக்கு உரை இயற்றிய பலருள்ளும் நக்கீரன் உரையே  சிறந்தது''
எனத் தேர்ந்தெடுத்த காலை,புலவனாம் ''உருத்திரசன்மன் ஆனவனே!''கூன்பாண்டியன்
சமண மதத்தில் இணைந்து ,சைவமதம் தூற்றிய காலை அவனை மாற்ற,அனல்,புனல் வாதம்
செய்து,வென்று.சமணர்களைக் கழுவில் ஏற்றி,மன்னன் மனம் மாற ஆளுடைய பிள்ளையாக
வந்தவனே!
        படைகள்,பரிசுகள்,செல்வங்கள் எல்லாவற்றையும் கைலாச நாதர் காலடியில் சமர்ப்பித்து,
வாழும் மக்கள் நிறைந்த கன்னியாகுடிச் செல்வா!சிறுபறை முழக்கி அருள்க.
நிறைந்த தானச்செயலும்,முறையான அறச்செயலும் புரிவோர் ஊரின் செல்வா!சிறுபறை
முழக்கி அருள்வாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக