திங்கள், 15 பிப்ரவரி, 2016

சிறுதேர்ப்பருவம்--5

 ஒவ்வா நோக்கினால் உயிரிழந்த அரக்கர்கள்
                     ஒருபுறம் நாடிய நரகமும்,
செவ்விய செயலினால் செவ்வேள் உலகில்
                  செம்பதம் பெற்றோர் மகிழ்வும்

அவ்விய நெஞ்சத்தார் ஆறுமுகன் வணங்கா
                 அற்பர்கள் படுகின்ற அல்லலும்,
பவ்வியப் பண்போடு பரமனைப் போற்றிடும்
                பக்தர்கள் பெறுகின்ற பெருமகிழ்வும்,

 திவ்விய  தர்மநெறி தேக்கிய சான்றோர்
            திரண்டே போற்றிடும் காட்சி ;
திவ்வியம் தவறியோர் தன்னிலை உணர்ந்து
            தாள்பணி சேவடிசேர் காட்சி.

செவ்விதழ்ச் சிரிப்பின் சிற்றூர்ச் செல்வா!
            சிறுதேர் உருட்டி அருள்வாய்.
செயலிலாக் கடவுளர்க்குச் செயலுணர் குருநாதா!
          சிறுதேர் உருட்டி அருள்வாய்.

                                   பொருள்
ஆணவம்,வேதநெறி ஏற்காமை போன்ற தவறான நோக்கம் கொண்ட அரக்கர்கள் உயிரிழந்து
நரகம் அடைந்து துன்புற்றனர்.பணிவும் பக்தியும் கொண்ட சான்றோர் அடி சேர்ந்து நீங்கா மகிழ்வு
அடைந்தனர்.
      அகந்தை கொண்ட மனம் உடைய அற்பர்கள் ஆறுமுகனைப் போற்றாமல் அவதிப்பட்டுத்
துன்பத்திலேயே உழல்கின்றனர்;பணிவும் பண்பும் கொண்ட பக்தர்கள் முருகனைப் போற்றி,
நன்மையும் நலமும் பெறுகின்றனர்.
       நன்மை வாய்ந்த அறநெறியைக் கைக்கொண்ட சான்றோர் ஒருங்கு திரண்டு முருகனைப்
போற்றும் காட்சி ஒருபுறம்'தர்மநெறி தவறியவர்களும்,தனது குற்றத்தை உணர்ந்து,''ஐயனே!
எங்களை மன்னித்து அருள் புரிவீர்''என,எம்பெருமான் தாள் பணியும் காட்சி ஒரு புறம்.
       செம்மையான இதழோரம் அருள்பொங்கும் புன்முறுவலுடன் கன்னியாகுடியில் வீற்றிருக்கும்
முருகா!சிறு தேரை உருட்டி ஆடி அருள்வாய்.
செயல் இழந்த கோடானு கோடி தெய்வங்களுக்குச் செயல் உணர்த்தும் குருநாதா!சிறு தேர்
உருட்டி ஆடி அருள்வாய். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக