வித்துபொறி முத்துவிரி நத்தையரி கத்துகடல்
வித்தகனின் புகழ்மேவ முழக்கும்
மத்துபடு குத்துகலம் தத்துதத்து வெனச்சுழன்று
மதுவளர்பொழில் மலரவன்புகழ் முழக்கும்.
கொத்துமலர்க் கொண்டையுடைக் குத்துமூக்குக் கொடுஞ்சேவல்
கொக்கறுகோ' குமரன்புகழ் முழக்கும்;
அத்திக்கும் ஆவேசம் வந்துறவே ஆர்ப்பரித்து,
அறுமுகன்புகழ் பிளிறலில் முழக்கும்;
முத்திக்கு முழுமூச்சாம் முனிவர்மொழி நால்வேதம்
முறையாக முருகன்புகழ் முழக்கும்;
தித்திக்கும் சொல்லாலே திருப்புகழாம் தீந்தமிழோ
திகட்டாத வேல்புகழை முழக்கும்.
புத்திக்கும் எட்டாத புண்ணியனின் புதல்வனே!
புதுப்பறை முழக்குக நீயே.
சித்திரச் சீர்கன்னிச் செந்தமிழ்ச் செல்வா!
சிறுபறை முழக்கி அருள்க.
பொருள்
நத்தையின் வயிற்றிலே வித்தான முத்து,விரிந்து,வெளிவரும் ஆழ்கடல் குருகனின் புகழ்
போற்றி அலைக்குரலால் ஒலி முழக்கும்;மண்பானையில் உறையூற்றி வைத்துள்ள தயிரைக்
கடையும் பொழுது,மத்து,சுழன்று,சுழன்று முருகன் புகழை ஒலி எழுப்பி முழக்கும்.
கொத்தாகிய மலர்க்கொண்டை கொண்ட கூர்மையான மூக்கினையுடைய சேவல்.
அரக்கனை அழித்த மன்னன் வாழி''என்பதுபோல் (கொக்கு=மரமான சூரன்;அறு =வீழ்த்திய;
கோ=மன்னன்)குரல் முழக்கம் செய்யும்.யானையும் ஆவேசம் பெற்றது;ல்(முருகன் நினைவால்
தன்னிலை மறத்தலே ஆவேசம்.இதனை வெறியாட்டு''என்பர்,மனிதர்களுக்கு மட்டுமே வருவது;இங்கு
யானைக்கும் வந்துவிட்டது)ஆர்ப்பரித்து,முருகன் புகழ் வாழ்க என்றாற்போலப் பிளிறியது.
முத்திக்கு வழிகாட்டும் நான்கு வேதங்கள் முனிவர் மொழி வாயிலாக,முருகன் புகழை
முழக்குகின்றன.தேன்போல் தித்திக்கும் தீந்தமிழ்ச்சொல்லோ திருப்புகழ்''என்னும் நூலின்
வாயிலாக திகட்டாத வேலனது புகழை முழக்கம் செய்கிறது.
அறிவிற்கும்,கருத்துக்கும் எட்டாத மேலோனான பரம்பொருளின் மைந்தனே!
சிறுபறை முழக்குவாய் .
ஓவியம்போல் காட்சிதரும் கன்னியாகுடி,செந்தமிழ்ச்செல்வா!சிறுபறை முழக்கி அருள்க.
விளக்கம்
குத்துகலம்=தரையில் பிரிமணை மீது வைக்கப் பட்டிருக்கும் பானை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக