ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

சிறுபறைப்பருவம்-4

முத்திதரு முதற்கடவுள் முகம்பார்க்க முன்வந்து
               முதுகேற்கும் முள்காவடி ஆட்டம்
சத்திதரு சண்முகனின் சபைமுழுவதும் சடாக்ஷரச்
                சன்மந்திரப் பேரொலிக் கூட்டம்

குத்திடும் அலகுவழி குருதிவழி உடலோடு
               குமராவெனக் கூச்சலிடும் ஆட்டம்
பத்தியத்துடன் பால்காவடி சுமந்ததோள் பாய்ந்துபாய்ந்து
             பரவசத்துடன் வீதியாடும் ஆட்டம்

மத்தளங்கள் முழங்கிடவே மயிலாடும் ஒயிலாட்டம்
           மனத்திறங்கிய மாவேலன் ஆட்டம்
அத்தனவன் ஆட்டம்;அன்னையவள் ஆட்டம்
         அத்தனையும் ஆட்டிவைக்கும் ஆறுமுகா!

சித்தரான சீர்மதுரை சொக்கேசர் செல்வா!
             சிறுபறை கொட்டி அருள்க
சித்திரக் கன்னி நகர்ச் செந்தமிழ்ச் செல்வா!
              சிறுபறை கொட்டி அருள்க.

                         பொருள்
உலக உயிர்களுக்கு முக்தி நல்கும் முருகனின் கருணை முகம் கண்டு போற்ற.அடியவர்கள்
முள் போன்ற கூர்மையான அலகு குத்திக் கொண்டு காவடி சுமந்து ஆடும் ஆட்டம்;சத்தியானவள்
அளித்த சண்முகன் அவனது ஆறெழுத்து  அவ்வெழுத்தை அரோகரா'ஆறுமுகா எனும் குரலெழுப்பும்
கூட்டம்
       உடல் முழுவதும் அலகு குத்தி  அலகு காவடி தூக்குவோர் குமரா''குமரா''எனக் குச்சலிட்டபடி
ஆடும் ஆட்டம்;விரதமிருந்து,உண்ணாநோன்பிருந்து,முருகனுக்குப் பால்காவடி எடுப்போர்,
பாய்ந்து,பாய்ந்து ஆடுவர்;பரவசம் மேலிட அவர்கள் ஆடும் ஆட்டம்.
     மத்தளங்கள் முழங்க மயிலாட்டம்;ஒயிலாட்டம்,ஆடுவோரின் மனத்தில் வந்திறங்கிய
வேலன் ஆட்டுவிக்கும் ஆட்டம்;சிவனின் ஆட்டம்;அம்மையின் ஆட்டம்;அனைத்தும்
ஆட்டிவைக்கும் ஆறுமுகா!
          சித்தராகித் திருவிளையாடல் புரிந்த மதுரைச் சொக்க நாதரின் செல்வா!சிறுபறை
கொட்டி அருள்வாய்.
ஓவியம்போல் விளங்கும் கன்னியாகுடியின் செந்தமிழ்ச்செல்வா!சிறுபறை கொட்டி அருள்வாய்.

                                             விளக்கம்
சடாக்ஷரம்=ஆறெழுத்து   சரவணபவ''
சன்மந்திரம் ===நன்மை தரும் மந்திரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக