ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

சிறுபறைப்பருவம்-3

நித்தியமாம் நீளவீணை நீலாம்பரிக் கலைமகள்
             நிர்மலமாம் நல்லிசையைச் சுவைத்தவா!
வித்தியாதரர் வான்வழி வளராக விளைசுகம்
            விண்காற்று வழிகேட்ட வேலவா!


உத்தியான வனங்களில் ஒன்றுற்ற தேவமகளிர்
                   உல்லாச நிலைப்பாட்டும் கேட்டவா!
பத்தியால் அருணகிரி,பணிவினால் குமரகுரு
                   பாடல்களைப் பக்குவமாய் உணர்ந்தவா!

சத்தியோடு சதிராடும் சர்வேசன் நடைக்கேற்ப,
              சப்ததாள நந்திவாத்யம் அறிந்தவா!
மத்தளம் முழவு,மேளம்,பஞ்சவாத்யம்
            மிருதங்கத் தாளமெல்லாம் மேன்மையுற்றோய்!

சித்திரத்துடி முத்திரைநடி  சித்சபேசர் புத்திர!
               சிறுபறை கொட்டி அருள்க.
சித்திரக் கன்னிநகர்ச் செந்தமிழ்ச் செல்வா!
                சிறுபறை கொட்டி அருள்க.

                                     பொருள்
     அழியாத தன்மை கொண்ட அற்புத வீணையில் நீலாம்பரிமுதல் பலப்பல இராகங்களைக்
கலைமகள் வாசிக்கும் நல்லிசையை விரும்பிடும் முருகா! வானவீதியிலே வளமான
பாடல்களை இசைத்தபடிச் செல்லும் வித்தியாதரர்களின் கானத்தைக் கேட்டு மகிழ்ந்த முருகா!
         விண்ணகச் சோலைகளில் கூடி ஆடிப்பாடும் தேவமகளிரின் இன்னிசையைக் கேட்ட முருகா!
பக்தியும்,பணிவும் கொண்டு,அருணகிரி,குமரகுருபரர் போன்றோர் பாடும் பாடல்களை ஏற்றருளும்
முருகா!
      சக்தியோடு மெய்மறந்து நடனமாடும் ஈசனின் நடனத்திற்கு ஏற்ப,ஏழு தாளங்களை முதன்மையாய்க்
கொண்டு நந்திதேவர் வாசிக்கும் தாளங்களை அறிந்த முருகா!இன்னும் மத்தளம்,முழவு,மேளம்,ஐந்து
வாத்தியங்கள்,மிருதங்கம் போன்ற வாத்தியங்களின் தாளத்தில் மேன்மை பெற்ற முருகா!
       துடிக்கும் சித்திரமாய்,நடன முத்திரை தாங்கிய சிற்றம்பலக் கடவுளின் செல்வனே!
சிறுபறை கொட்டுக
 சித்திரம் போன்ற கன்னியாகுடியின் செந்தமிழ்ச் செல்வா!சிறுபறை கொட்டுக.
                                                விளக்கம்
நித்தியம் =அழியாத தன்மை
நீலாம்பரி ---ஒரு ராகத்தின் பெயர்
உத்தியானவனம் ===மலர்கள் நிறைந்த சோலை வனம்
சதுராடும்==நடனமாடும்
சப்த தாளம்==ஏழு தாளம்
பஞ்ச வாத்யம் =ஐந்து கருவிகள் இணைந்த தாளக்கருவி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக