சனி, 13 பிப்ரவரி, 2016

சிறுதேர்ப்பருவம்--2

தாரகன் தேரைத் தகர்த்தெறி கிரௌஞ்சத்
             தோரண மாயம் அழித்தவா!
வாரண முகத்தான் வடிவினை வீழ்த்தி,
            வளர்தலை வரவினைச் சிதைத்தவா!

பூரண வரமளிப் பொலிவினை மாற்றிப்
          போர்க்களம்புகுமிகு சினமுடன்
காரணக் காரிருள்  கூட்டம் அழித்திடக்
         கடுந்தேர் மீதமர் கந்தவேளே!

வீரனாய் விண்ணவர் காக்க வேலுடன்
          விரிவளி தேரினில் விரைந்தவா !
சூரனை மாற்றியே சுற்றிவரு ஊர்தித்தேர்
        சுந்தர மயிலாய்க் கொண்டவா!

போரெனில் புதுத்தேர் ஏறிடும் தீரனே!
           புனை சிறு தேருருட்டி அருளே.
சீரெலாம் நிறைந்த சிற்றூர்ச் செல்வா!
           சிறுதேர் உருட்டி அருளே.

                        பொருள்
தாரகன்  தேரைத் தகர்த்தும்,மாயமான கிரௌஞ்சமலையை அழித்தும் வென்றவனே!
யானை  முகத்தை உடைய  சூரனின் தம்பியின் ஆயிரம் தலை,பல்லாயிரம் கைகள்
போன்றவற்றை அழித்தும்,மீண்டும் மீண்டும் தோன்றிய தலைகளை அழித்தவனே!
       அமைதியுடன் அன்பர்களுக்கு வேண்டு வரமளித்த அழகு முகம் மாறிடச் சினமுடன்
போர்க்களம் புகுந்து அரக்கர் கூட்டமதை அழிக்கத் தேர் மீது அமர்ந்தவனே!
     படைத்தளபதியாகி விண்ணவர் காக்க,வேலேந்தி,பறக்கும் காற்று தேவன் நடத்தும் தேரில்
விரைந்தவனே! சூரனோடு போர் புரிந்து,அவன் தீயகுணங்களைப் போக்கி,அவனையே
ஊர்தியாம் மயிலாகக் கொண்டவனே!
     போரென்றால் புதுத்தேர் ஏறிப் போராற்றும் வீரனே!அழகூட்டப் பட்ட சிறு தேரை உருட்டி அருள்வாய்.
பெருமைகள் நிறைந்த கன்னியாகுடிச் செல்வா!சிறுதேர் உருட்டி அருள்வாய்.
         
     
       
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக