வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

சிறுதேர்ப்பருவம்--1

இருபத்தோராம் திங்களில் நடைபெறும் சிறுதேர் உருட்டும் நிகழ்ச்சி;பாட்டுடைத் தலைவனைக்
குழந்தையாக்கி,அவன் புகழ் பேசி,சிறு தேர் உருட்டுக'என வேண்டுதல் ,சிறு தேர்ப்பருவம் ஆகும்.

பொன்னார் மேனியன் புலித்தோல் ஆடையன்
           போருக்குப் பறப்பட்டான் புதுத்தேரில்
பொன்னுலகுத் தேராகப் புதுமறை ஆழியாக
          பொன்மலை வில்லாக ஏற்றே .

மேன்மை மேவிய மீனாட்சி மதுரையில்
        மேவிவரும் படைகள் மெலிந்தழிய
மின்னல் பரிகளின்  வண்ணத் தேரில்
       மன்னனைக் கண்டே மயங்கினாள் .

கன்னல்  வில்லில் கடிமலர் அம்புடன்
         கிளித்தேர் ஏறிய  மன்மதன்
தென்றல் வசந்தப் படையுடன் மகிழ்ச்சித்
        துள்ளிளம் போரினைத் தொட்டான்.

நன்றெனவே நாளும் வாழுமூர் நல்லவனே!
        நற்சிறுதேர்  உருட்டி அருளே.
கன்றுபிரி ஆவிற்குக் கருணைமன்னனூர்த் தலைவா!
        களிதேர் உருட்டி அருளே.
                           பொருள்
உலகைத் தேராகவும்,நான்கு மறைகளை ஆழியாகவும்,மேருமலையை வில்லாகவும் கொண்டு
திரிபுரங்களை அழிக்கப் போருக்குப் புறப்பட்டான் தேரில்.
     பாண்டிய இளவரசி மீனாட்சி திக் விஜயம் செய்யப் புறப்பட்டாள் ;மின்னல் வேகத்தில் செல்லும்
குதிரைகள் பூட்டிய வண்ண மயமான தேரில் பலப்பல மன்னர்களை வென்று,கயிலையில்
சுந்தரேசப் பெருமானைக் கண்டு மயக்கமுற்றாள்.
     கரும்பு வில்லேந்தி,ஐம்மலர் நாண் ஏந்தி,கிளியாகிய தேரேறி தென்றல் வசந்தப் படைகள் தொடர
இளமையைச் சாடும் போரினைத் தொட்டான் மன்மதன்.
       நாளும் நன்மையையே நினைத்து வாழும் கன்னியாகுடி நல்லவனே!நல்ல இச்சிறு தேரை
உருட்டி விளையாடி அருள்வாய்.
கன்றைப் பிரிந்த தாய்ப்பசுவிற்காகத்தன் மகனையே தேர்ச்சக்கரத்தில் வீழ்த்திய சோழமன்னனது
ஆளுகைக்கு உட்பட்ட கன்னியாகுடி நற்றலைவா!விளையாட்டுச் சிறு தேரை உருட்டி அருள்வாய்.

     
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக