வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

சிற்றில்பருவம்--10

பாணினிக்கு இலக்கணவழி காட்டினான்
           பரமனாம் யோககுரு;
பாடலுக்குப் பொருத்தமாம் புத்துரையை
        பரிந்துரைத்த   புலவன்நீ

வாணிக்கு வாக்குவரம் அளித்த
          வண்ணமயில் வாகனனே!
வானுயர்ந்த வீண்மலையை வீழ்த்தியோன்
       வாய்மையுற்றான் உன்னிடமே;

பேணிடும் பெரியோர்கள் பெற்றதுபோல்
              பெருவரங்கள் கேட்கவில்லை;
நாணிடும் எம்மனமெலாம் நிறைந்தோய் !
              நாங்களும் மகிழவேண்டும்;

சோணாட்டுக் கன்யாகுடிச்  செல்வா!
             சிற்றில் சிதையேலே!
சோதிச்சுடர்ப் பாதிபெற்றாள்  செல்வா!
              சிற்றில் சிதையேலே.

                                     பொருள்
வடமொழி இலக்கண நூலை இயற்றப் பாணினி என்னும் புலவன் சிவனிடம் அருள் பெற்றே
இயற்றினான்'களவியல் உரைகளில் சிறந்த நக்கீரன் உரையைப் புலவனாய் வந்து பரிந்துரைத்தவன் நீ .
         கலைமகளாம் வாணிக்கு,நாவினிலே கல்விநிற்க சொல் வரம் அளித்த சென்னிமலை முருகன் நீ.
வானை மறைக்கும் அளவு உயர்ந்து,இடையூறு செய்த வீண் தருக்குற்ற விந்திய மலையைகால்
விரலால் அழுத்திப் பாதாள உலகு அடையச் செய்த அகத்திய மாமுனிவன் அருளுபதேசம் உன்னிடம்
பெற்றே உயர்ந்தான்;
        மாபெரும் சான்றோர்கள் பெற்ற   உயர் வரங்கள் போல் விளையாட்டுச் சிறுமியர்களாகிய
நாங்கள் பெரு வரங்கள் கேட்கபில்லை;எம் மனமெல்லாம் நிறைந்த முருகா!எங்களை மகிழ
வைக்க எங்கள் மணல் வீட்டைக் கலைக்காதே !
          சோழவள நாட்டின் சிற்றூராம் கன்னியாகுடியில் காட்சி தரும் முருகா!நாங்கள் கட்டியுள்ள
மணல் வீட்டைக் கலைக்காதே!
சுடர்ச்சோதியான ஈசனின் சரிபாதி நிலை பெற்ற பார்வதியின் மைந்தனே!நாங்கள் கட்டியுள்ள
சிறு மணல் வீட்டைக் கலைக்காதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக