வெள்ளி, 29 ஜனவரி, 2016

சிற்றில் பருவம் --9

மழையணி மலைகளின் மன்னனே!
           மலரணி  மணமிகு மேனியனே!
பிழையணி அரக்கனை ஏற்றவனே!
          பிறப்பணி உயிர்களைக் காப்பவனே!

தழையணி தத்துவச்சி தாசனே!
       தளிரணி தெய்வயானை கணவனே!
குழையணி செவிகாத்தாள் குமரனே!
        குலமணி வேட்டுவர் தலைவனே!

கழையணி கரமருள்  ஆண்டியே!
      கருத்தணி கவிதையில் புலவனே!
சுழலணி  கங்கையின் மைந்தனே!
      சுடரணி வேலுடைச் சுந்தரனே!

பழமையணிப் பண்பாட்டுச் சிற்றூர்ப்
         பரமனே!சிற்றில் சிதையேலே!
கிழமையணி கிரஹங்கள் காக்குமூர்க்
         கிழவா!சிற்றில் சிதையேலே.

                                     பொருள்
மேகம் சூழ்ந்த மலைகளில் எல்லாம் வீற்றிருக்கும் முருகா!மலர்மாலைகளும்.அர்ச்சித்த
மலர்களும் சேர்ந்து எப்பொழுதும் மணம் கமழ்கின்ற மேனியை உடையோனே!குற்றங்களையே
அணியாகக் கொண்ட சூரபதுமனையும் மன்னித்து,மயிலாய்ச் சேவலாய் ஏற்றவனே!பிறவிப் பெருங்கடலில் தவிக்கும் உயிர்களைக் காப்பவனே!
     இலையாடை அணிந்த வேட்டுவச்சி,நாடி அலைந்தவனே!அழகிய அணிகலன்கள் அணிந்த
தெய்வயானை கணவனே!காதில் அணிந்த குழையால் அபிராமி பட்டரைக் காத்த பார்வதி தேவியின்
மகனே!குலப்பெருமை காக்கும் வேட்டுவர் தலைவனே!
      மூங்கில் கம்பைக் கையில்  ஏற்றபடி அருள் காட்டும் பழனி ஆண்டியே!கருத்துடைக் கவிதையின்
தலைவனாகவும்,உருத்திரசன்மன்''என்ற பெயரில் புலவனாகவும் விளங்குபவனே!சுழலொடு
ஓடும் கங்கையாற்றின் மைந்தனே!சுடர்மிகு வேலினைக் கையில் கொண்ட அழகனே!
     பழம் பண்பாட்டுச் சிற்றூராம் கன்னியாகுடிப் பரமனே!எங்கள் மணல் வீட்டைக் கலைக்காதே!
கிழமைகளுக்குத் தலைவனாக விளங்கும் நவக்கிரஹங்களால் காக்கப் படும் கன்னியாகுடியின்
தலைவனே!விளையாடும் ஆட்டத்தில் நாங்கள் கட்டிய மணல் வீட்டைக் கலைக்காதே.

                                                                         விளக்கம்
         அருளும்,கருணையும்,அழகும் கொண்ட நீ நாங்கள் வருந்துமாறு சிறுமணல் வீட்டைக் கலைக்க
வேண்டாம்''என வேண்டுவது புலனாகும்.

தத்துவச்சி ---வள்ளியம்மை ...முனிவருக்கும்,மானுக்கும் தத்துவமாய்ப் ''பார்வையால்'' தோன்றியவள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக