வெள்ளி, 29 ஜனவரி, 2016

சிற்றில் பருவம்--8

தெய்வயானை மணக்கோலம் திருக்குன்றம்
      தீதில்லாப் பட்டுடுத்தித் திலகமுடன்
மெய்யெல்லாம் நறுமணம் கமழவே
    முத்துமாலை முருகனும் நீயல்லவோ?

ஐயனவன் பிரணவத்தின் அரும்பொருள்
     அறிந்திடவே ஆசானாய் ஏரகத்தில்
மெய்யது பவித்திரமாய் மேன்மையாய்
      மிளிர்சுவாமி நாதனும் நீயல்லவா?

கொய்பவளக் குருத்தழகே!புலைமண்ணில்
    கால்வைத்தால் காலெல்லாம் கசடாகும்;
செய்யாற்றுச் செம்மணல் செம்புழுதி
     செந்நிற மேனியை அழுக்காக்கும்.

செய்நன்றி மறவாதோர் சீர்கன்னிச்
         செல்வா!சிற்றில் சிதையேலே.
 உய்வழியை உணர்ந்தோர்கள் ஊர்கன்னிச்
        செல்வா!சிற்றில் சிதையேலே.

                                பொருள்
திருப்பரங்குன்றத்தில் தெய்வயானையை மணக்கும் நேரம் பட்டாடை உடுத்திக்கொண்டும் ,
நெற்றியில் திலகமிட்டுகொண்டும்,மேனியெல்லாம் நறுமணப் பொருட்களாம் ,சந்தனம்,ஜவ்வாது,புனுகு போன்றவற்றைப் பூசிக்கொண்டும்,முத்துமாலை போன்ற அணிகலன்கள் அணிந்துகொண்டும்,
அழகே உருவான முருகனாய்க் காட்சி அளித்தவனே!
      பிரணவப் பொருள் அறிவதற்காக எம்பெருமான் சிவபிரான் உன்னை ஆசானாய்க் கொண்ட
சுவாமிமலையில் பவித்திரமான மெய்யினில் மேன்மை பொருந்திய அழகுடன் சுவாமிநாதனாய்க் காட்சி  அளித்தவனே!
        பவளக் குருத்துபோல் அழகாக இருப்பவனே!எமது மண் வீட்டைக் கலைக்க எண்ணி,
நாற்றமண்ணில் கால் வைத்தால் கால் அழுக்காகும்;ஆற்றுமணலின் புழுதி உன் மேனியை
அழுக்காக்கி அழகைக் கெடுக்கும்.ஆதலின் மண் வீட்டைக் கலைக்காதே.
        நன்றி மறவாதோர் வாழ்கின்ற கன்னியாகுடிச் செல்வா!எமது மணல் வீட்டைக் கலைக்காதே.
முருகனின் சேவடியே உய் வழி''என்பதை உணர்ந்தோர் வாழ்கின்ற கன்னியாகுடிச் செல்வா!
எமது மணல் விளையாட்டு வீட்டைக் கலைக்காதே.
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக