புதன், 20 ஜனவரி, 2016

அம்புலிப்பருவம்--9

விருப்பமது வேண்டுவது விளக்கமது வெண்ணிலவே
      விருந்தது விரிவானது வியப்பது வெண்ணிலவே
விண்ணாளும் விளக்கது விரும்பாதோர் விலக்கது
        வித்தகனின் முகமெனவும் வருணிப்பது நீயல்லவா?

சருப்பமது விழுங்குவது சருமத்தை இழக்குமது
      சருவலோக சஞ்சார சர்வேஸ்வரச் சடையடைவது
சருகுதொடு நெருப்புபோல் சாபத்தில் சஞ்சரிப்பது
      சத்தியமதால் சங்கடமதைச் சந்தித்த சந்திரனே!

தருப்பைநுனித் தண்ணீரால் தலைக்கங்கைப் பார்வையால்
     தருக்குற்றோன் தீண்டுபாவம் தருமநெறி ஆவதுபோல்
தருக்கள்சூழ் தெருக்களூர் மருத்துவன் குருபரன்
   திருச்சேவடி தொழுதிட்டால் மறுப்பாவம் மறைந்திடுமே.

விருந்து புரந்தோம்பி வீணவா விலக்கியோர்
    வியன்கன்னி வேலனுடன் விளையாட ஓடிவா!
மருந்தாளத் தாயானோன் மதிசூடி வாழ்கின்ற
    மலரூரில் முருகனுடன் விளையாட வா!மதியே.

                                              பொருள்
   விருப்பமுடன் வேண்டுவோர் மனமகிழ் விளக்கமாய் விளங்கும் நிலவே!உலகிற்கு விருந்தாகி,
விரிவாயும் விளங்கும் நிலவே!விண் எனும் வானை ஆட்கொண்ட விளக்காயும் ,விரும்பாதோரே
இல்லாமலும் பிரகாசிக்கும் நிலவே!எல்லாவற்றிற்கும் மேலாய் எழில் முருகனின் முகத்திற்கு
உவமையாய் விளங்கும் அம்புலியே!
         பாம்பால் விழுங்கப்பபட்டு,உடலையே இழந்து,தவித்து,ஈசனைப் போற்றி வணங்கி,அவரருளால் அவர் தலையில் அமர்ந்தவனே!காய்ந்த இலையில் பற்றிய நெருப்பு போலப் பலதரப்பட்ட
சாபங்களில் சிக்கிக் கொண்டு,கொடுத்த வாக்கிர்காகப் பலப்பல சங்கடங்களைப் பெற்ற
அம்புலியே 1
       கிரஹன காலத்தில் தருப்பைப்பில்லின் நுனி தொட்ட நீரைத் தெளித்தும்,நல்ல நீர்
நிலைகளில் நீராடியும்இராகு,கேது  தோஷம் நீஙகிப் புனிதம்  ஆவது போல,நீயும் மரங்கள் சூழ்ந்த தெருக்களை உடைய கன்னியாகுடி வாழ் மருத்துவனாம் ஆறுமுகன் பாதங்களைப் பற்றினால்
உனது பாவமும் மறையும்;மறுவும் மறையும்.
       விருந்தினரைப் பேணிப் பாதுகாத்து,வீண் ஆசைகள் தவிர்த்தும் வாழ்வோர் ஊரான கண்ணியாகுடியில்   வீற்றருள் புரியும் வேலனுடன் விளையாட ஒடி வா அம்புலியே!
பக்தையான பெண்ணின் மகப்பேறு மருத்துவ உதவிக்காகத் தந்தையானவன் தாயாக
மாறியருள் புரிந்தவனும்,நிலவைச் சூடியவனுமான சிவபெருமான் வாழ்கின்ற கன்னியாகுடி
முருகனுடன் அம்புலியே!விளையாட ஒடி வருவாய்.
                                                                              விளக்கம்
சருமம்=  உடல்
சங்கடம் ==துன்பம்
தருக்குற்றோன் =கர்வம் கொண்ட இராகு,கேது.
தருக்கள்==மரங்கள்
மருந்தாள===மகப்பேற்று மருத்துவம் பார்க்க  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக