திங்கள், 18 ஜனவரி, 2016

அம்புலிப்பருவம்-8

அலைமோதும் கடலலைகள் அடிவணங்கும் திருச்செந்தூர் ,
      அலைகுடிமுனி ஆன்மஞான ஆசாரப் பரங்குன்றம்,
அலைமனக் கசடுகளை அகற்றுகின்ற சுவாமிமலை,
        அலைமுகில் நடுநின்று வலம்வரும் அம்புலியே!

கலைமான்மகள் காதலினால் குடிகொண்ட திருத்தணிகை
         கலைக்கனியால் கம்பூன்றி ஆண்டியான பழனிமலை
கலைக்காட்சிக் கனிக்கூட்டம் உதிர்கின்ற அருட்சோலை
          கலைவளரக் காரிருளைப் போக்குகின்ற அம்புலியே!

நிலையான தத்துவத்தின் நீள்புகழோன் ஆறுமுகன்;
       நிலையாமை கொண்டுற்ற வாழ்விற்குச் சான்று நீ.
மலையெல்லாம் மாண்பாகி நிற்கின்ற மாசற்றோன்
       மலைநாடி மண்,விண் போய் மகிழ்வோடு ஆடவா!

கலைகளின் கடவுளாய்க் கன்னி நகர் காட்சிதரும்
      கலைஞானப் பூரணனுடன் ஆடவா!அம்புலியே!
கலைகண்டு கால்மாறி ஆடினான் திருமகனுடன்
     கலையூரின் கந்தனுடன் அம்புலியே!ஆடவா.

                                             பொருள்
காலம் காலமாய்க் கரைமோதிக்காலடி போற்றும் கடல் சூழ்ந்த திருச்செந்தூர்,
கடலையே குடித்த அகத்திய முனிவனுக்கு உபதேசித்து,ஞானம் வழங்கி,அம்முனிவனை
ஆசார சீலனாய் ஆக்கிய திருப்பரங்குன்றம்,ஆசாபாசங்களில் உழன்று,தவிக்கும் மனக் கசடுகளை
நீக்கி அருள்வழி காட்டும் சுவாமி மலை;ஆகிய தூய நகரங்களை வலம் வரும் அம்புலியே!
       மான்மகளாய்ப் பிறந்த வள்ளியை மணக்க விரும்பிக் குடிகொண்ட திருத்தணிகை,
ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் கையிலே  கோலூன்றி ஆண்டிக் கோலம்
கொண்ட பழனி மலை ;கலையாய்க் காட்சிப் பொருளாய் விளங்கி,அரும்பசி தீர்க்கும்
அருமருந்தாய் உதிரும் பழங்களைக் கொண்ட பழமுதிர் சோலை; ஆகிய இடங்களில் வலம்
வந்து இருள் நீக்கும் அம்புலியே!
       தோன்றாப் பிறவியாகி,அழிவில்லா நித்திய மூர்த்தியாகி,மாசற்ற புகழின் சான்று
ஆறுமுகன் ஆவான்;அழிந்தும்,வளர்ந்தும் நிலையற்ற வாழ்விற்குச் சான்று நீ ஆவாய்;
குன்று இருக்கும் இடமெல்லாம் கோயில் கொண்ட மாசில்லா மா மணியாய் விளங்கும்
முருகன் இருக்கும் மண்,விண் சென்று,மகிழ்வுடன் விளையாடு நிலவே.
        கலைகளுக்கு எல்லாம் தலைவனாகி,கன்னியாகுடி என்னும் ஊரில் நிறைகலை
அறிவுச்சுடராய் விளங்கும் முருகனுடன் ஆட வருவாய் அம்புலியே!
நடனம் ஆடக்கற்ற பாண்டிய மன்னன் ஒரே காலில் நின்று என்றும் ஆடும் கூத்தபிரானைக் கண்டு,
அவனுக்கு கால் வலிக்குமே''எனக் கண்ணீர் உகுத்து ;;கால் மாறி ஆட வேண்ட,அவனுக்காகக்
கால்மாறி ஆடிய நடராசப் பெருமகனின் மைந்தன்,கலைபோற்றும் கன்னியாகுடி என்னும்
ஊரின் கடவுட் குழந்தையுடன் அம்புலியே!விளையாட வருவாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக