வெள்ளி, 29 ஜனவரி, 2016

சிற்றில் பருவம்--7

ஓடிவரும் காவேரி ஓசையிலே
      ஓங்கார நாதாந்தம் ஒலிக்குமே;
நாடிவரும் பறவைகளின் நல்லொலி
    நாதன்புகழ் விரித்துரைக்கும் நாதகானம் ;

ஆடிஅசையும் தென்னையும் கமுகும்
       ஆனந்தத் தென்றலோடு இசைந்தாடும்
ஏடில்வரை இயற்கைபோல் இளங்கரும்பு
        எழில்வாழை இஞ்சிமஞ்சள்பைம்பொழிலே.

தேடியொளி தீபம்போல் தாமரையும்,
        தேன்வண்டுக் குவளையும் மலர்ந்திருக்கும்
பாடிவரும் பசுந்தமிழும் பண்பாடும்;
       பச்சைநன்செய் மருதவள சோழநாடா!

ஈடிலாத கருணைகொண்ட ஈகைகன்னி
      இளஞ்செல்வா!சிற்றில் சிதையேலே!
வாடிவரும் அடியவரின் வறுமைபோக்கும்
     வள்ளலே!சிற்றில் சிதையேலே.

                                       பொருள்
விரைவாய் நொங்கும் நுரையுமாய் ஓடிவரும் காவிரி ஆற்றின் ஓசை முருகனின் ஓங்கார
ஒலிபோல் ஒலிக்கும்;ஆற்றை நாடிவரும் பறவைகளின் இரைச்சல் முருகன் புகழை
விரிவாகக் கூறும் பாட்டொலியாகும்.
     ஆற்றின் கரையில் தென்னை,பாக்கு மரங்கள் தென்றல் வீச அசைந்தாடும்;ஓவியத்தில்
வரைந்த இயற்கைக் காட்சிபோல கரும்பும்,வாழையும்,இஞ்சியும்,மஞ்சளும் பசும் வயல்களில்
அமைந்திருக்கும்.
     எங்கும் ஒளி நல்கும் விளக்குபோல் தாமரை நிற்க,அதனருகே,வண்டுகள் சூழ்ந்த குவளை
மலர்ந்திருக்கும்;இவைகளைக் கண்ணுற்ற புலவன் பைந்தமிழ்ப்பாடல் அமைப்பான்.பசுமை
நன்செய் நிலம் சூழ்ந்த மருத வளம் மிக்க சோழ நாட்டுத் தலைவா!சுவாமிநாதா!
       ஈடு இணையற்ற இரக்கமனம் கொண்ட ,ஈத்துவக்கும் கன்னியாகுடியின் செல்வா!நாங்கள்
கட்டி விளையாடும் மண் வீட்டைக் கலைக்காதே.
   துன்பத்தோடு வந்து உன்னை வணங்கும் அடியவரின் துயர் போக்கும் வள்ளலே!எமது மண்
வீட்டைக் கலைத்து விடாதே.

                                                                விளக்கம்
ஈரம் விளைந்தநிலம்,தன கொடையால் பிறரை வாழ வைக்கும் தென்னை,வாழை,கமுகு
விளையும் நிலம் சோழநாடு;அந்தநாட்டின் தலைவன் நீ;உன் மனமும் ஈகை சார்ந்தே இருக்கும்;ஆதலின் எம் மணல் வீட்டைக் கலைக்காதே''என வேண்டுதல் ,இப்பாடலில் புலப்படுகிறது.
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக