வியாழன், 28 ஜனவரி, 2016

சிற்றில் பருவம்--6

தேடியடி  முடிகாணா வாடியஇரு
      தேவதைகள் தோத்தரிக்கும் தூயவன்;
நாடிதுடி கடிவில்லான் பொடியாக
    நற்றவ நாதனவன் நல்மகனோ?

கூடிமதி வடிவுமுக குங்குமத்தாள்
        குலங்காக்கும்நலங்காக்கும்   குமரனோ?
ஆடிஇடி துதிக்கைதான் அரவணைக்கும்
      ஆறுமுக அன்புகொண்ட  இளவலோ ?

கோடிமுடி அடிபணியும் கோமகனோ ?
      கூறுங்கள்!கோதைபலர் கூடிவினை
பாடிபுனை மணல்வீட்டைத்  தீடிசிதை
     பாழ்படுத்தல் பண்பில்லை பெருமையிலை .

ஈடிலடி முடியேற்கும் ஈசனூர்ச்
     செல்வா!சிற்றில் சிதையேலே.
 வாடிமடி வடிவுநீக்கும் கன்யாகுடிச்
      செல்வா!சிற்றில் சிதையேலே.

                               பொருள்
அடியையும்,முடியையும் தேடிச் சென்று,ஈசனின் அடிமுடி காணாத மாலும்,பிரமனும்
போற்றுகின்ற தூயவன்,நாடியும் கையும் நடுங்க,வில்லெடுத்து,அம்பு வீசிய மன்மதனைப்
பொடியாக்கியவன் நற்றவம் புரியும் சிவனின் மகனோ?
     பல நிலவுகள் ஒன்று கூடிய அழகு முகமும்,குங்கும நெற்றியும் கொண்ட பார்வதி
அம்மையாரின் குலமும்,நலமும் காக்க வந்த குமரனோ?இங்குமங்கும் ஆடி இடிக்கும் துதிக்கை
கொண்ட விநாயகப் பெருமான் அணைத்து மகிழும் அன்புத் தம்பி ஆருமுக்னோ?
       கோடிக்கோடி மன்னர்கள் அடிபணியும் பேரரசனோ?கூறுங்கள்;அவனிடம்;பெண்கள் பலர்
கூடி,விளையாட்டுப் பாடல் பாடி மணல் வீடு கட்டினால்,அதைக் கலைத்துப் பாழ்படுத்தல்
முறையில்லை;பண்பும் பெருமையும் இல்லை என.
      ஈடு இணையற்ற ஈசனின் பாதங்களைத் தலையிலே ஏற்கும் கன்னியாகுடியின்
செல்வனே!எமது மண் வீட்டைச் சிதைக்காதே.
வாட்டம்,சோம்பல் போன்றவற்றை நீக்கும் கன்னியாகுடியின் செல்வனே!எமது மண் வீட்டைச்
சிதைக்காதே.
                                                             விளக்கம்
தீடி சிதை ---இங்கு தீண்டி என்பது தொகுத்தல் விகாரமாய் தீடி என வந்தது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக