வியாழன், 28 ஜனவரி, 2016

சிற்றில் பருவம்--5

காக்கும் கடவுளே!உம்மைக்
     காக்கவெனக் கடவுளரை வேண்டுவோம்;
போக்கும் வரவுமிலாப் புண்ணியனே !
        புதிதாய்ச் செங்கீரை ஆடென்போம்;
நீக்கமற எங்கும் நிலைத்தவனே!
       நீள்துயில் தொட்டிலிட்டுத் தாலாட்டுவோம்;
பூக்கமலச் சரவணத் தோன்றலே!
        சப்பாணி கொட்டிடுவெனக் கேட்போம்;

தேக்கியஇதழ்த்  தேன்முத்தம் பெறுவோம்;
       தேவனே வருகென அழைத்து,
வாக்கினால் வட்டநிலா அழைப்போம்.
     வாட்டமது வரலாமோ எமக்கு.

 ஆக்கமெலாம் அரனெனும் கன்யாகுடிச்
          செல்வா!சிற்றில் சிதையேலே!
 ஊக்கத்தால் உயர்ந்தூர்க் கன்யாகுடிச்
         செல்வா!சிற்றில் சிதையேலே.

                              பொருள்
 உலகைக் காக்கும் கடவுளே!முருகா!உம்மைக் குழந்தையாக்கிக்  காப்பாய்;என எல்லாத்
தெய்வங்களையும் வேண்டினோம்;செங்கீரை ஆட வேண்டினோம்;எல்லா உயிர்களோடும்
உலகத்தோடும் நிலைத்த முருகா!உன்னைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுப் பாடினோம்;
       சரவணத்துத் தோன்றிய முருகா!சப்பாணி கொட்டு''என வேண்டினோம்;
உன் திருவாய் திறந்து,தேனிதழ் முத்தம் வேண்டினோம்;வா;;வா''என அழைத்தோம்;
வானத்து நிலாவை உன்னோடு விளையாட அழைத்தோம்;இப்படி எல்லாம் உன்னைப்
போற்றியும் புகழ்ந்தும் பாராட்டும் எங்களுக்கு வாட்டம் வரலாமா?
      ஆக்கமெல்லாம் சிவனே''என வாழும் மக்கள் ஊரான கன்னியாகுடிச் செல்வனே!
நாங்கள் விளையாடும் மண் வீட்டைக் கலைக்காதே!
ஊக்கம் கொண்டு உயர்ந்த ஊரான கன்னியாகுடிச் செல்வனே!எங்கள் மண் வீட்டைக்
கலைக்காதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக