புதன், 27 ஜனவரி, 2016

சிற்றில் பருவம்--4

பஞ்சியொளிர்  விஞ்சுகுளிர் கஞ்சமலர்ப்
           பாதங்கள் கொண்ட பரம்பொருளே!
அஞ்சும்பரல் மிஞ்சும்துயர் செஞ்செம்மணல்
             அல்லல்தரும்;சொல்வோம்உணர்  அண்ணலே!

மஞ்ஞையதன் தஞ்சம்என கொஞ்சும்துகில்
         மண்விண் எலாம் சுற்றும்சுடர் ஊர்தியாமோ!
மஞ்ஞைபலர் செஞ்சும்பணி கொஞ்சும்குடில்
         மண்வீடதைமனம்வெதும்பக்  கலைக்கலாமோ?

அஞ்சொலிளப் புஞ்சைமகள் மஞ்சம்நினை
              அந்தம்முதல் ஆதிசுக மன்னன் குக!
பிஞ்சுமனப் பெண்பிள்ளைகள் பேணி நலப்
             புதுவீடதைப் புரத்தல்முறை புரிந்துகொள்.

பஞ்சமிலா மஞ்சள்விளை கன்னிக்குடிச்
               செல்வா!சிற்றில் சிதையேலே!
நெஞ்சமெலாம் நெடுஞ்சிவம்வாழ் கன்யாகுடிச்
                செல்வா!சிற்றில் சிதையேலே.
                                           பொருள்
பஞ்சைக் காட்டிலும் மென்மை ,குளிரைக் காட்டிலும் ஈரம்,தாமரை மலர் போன்றும் விளங்கும்
திருப்பாதங்கள் கொண்ட முருகனே!எங்கள் வீட்டைக் காலால் சிதைக்காதே.அவ்வாறு கலைத்தால்
பர ற் கற்களும் குறுமணலும் உன் பாதத்திற்குத் துயரைத் தரும் ;ஆதலின் கலைக்காதே.
   மயிலாய் வந்து உன்னைத் தஞ்சம் அடைந்த அரக்கன் மீது அன்பு காட்டி,அம்மயிலின் முதுகைத் துகில்
போல் நினைத்து மூவேழ் உலகும் சுற்றிவரும் சுடரே!மயில் போன்ற மங்கையர் பலர் ஒன்று சேர்ந்து
செயலாற்றி உருவாக்கிய குடிலாம் மண் வீட்டைக் கலைத்தல் நியாயம் ஆகுமா?
    அழகிய சொல்லும் ,இளமையும் கொண்ட தினைப்புனம் காவல் காக்கும் வள்ளியை மணந்து
மஞ்சத்தில் அமர்ந்து,அன்பும்,இன்பமும் துய்க்கும் வேலனே!இளமை தவழும் மனம் கொண்ட
பெண்கள் நாங்கள் உருவாக்கிய அழகிய மண் வீட்டைக் கலைக்கலாமோ?
    நன்செய் நில விளைச்சலால் பஞ்சமில்லாத கன்னியாகுடியின் கடவுட்குழந்தையே!
எங்கள் சிறு மண் வீட்டைக் கலைக்காதே!
நினைவெல்லாம் சிவமயமாய் வாழும் கன்னியாகுடியின் முருகனே!எங்கள் சிறு மண் வீட்டைக்
கலைக்காதே.
                                                                 விளக்கம்
செஞ்சும்பணி ----செய்யும் பணி என்பதன் வழக்கியல்
புஞ்ஞை மகள்---வானம் பார்த்த நிலம் புஞ்ஞை ..இங்கு தினைப்புனத்தைக் குறிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக