புதன், 27 ஜனவரி, 2016

சிற்றில் பருவம்--3

அழகான அருங்கால்கள் அழுக்குறவோ
        அழுக்கோடு  அன்னைமடி அமர்வதோ?
அலங்காரத் தளிர்ப்பாதம் நிலமண்ணில் 
       அடிவைத்தால் அழகழியும் அறியாயோ?

மழுவேந்தும் மகபதியின் முடிதீண்டும் 
     மலர்ப்பாதம் மண்மீது மயங்குவதோ?
உழுநத்தை உறங்குகின்ற உறுமணலில் 
   உன்சேவடி உலாவினால் வருந்திடுமே!

கொழுமணலில் குறைநீக்கிக் குதூகலித்துக் 
      குறையில்லாமனத்தோடு  குடிலமைத்தோம்;
விழுப்பொருளே!வேண்டுவார்க்கு வேண்டுவன 
    வழங்குநீ அழிவாக்கி வருத்தலாமோ?

செழுங்கரச் செவ்வரச் செங்கன்னிச்
          செவ்வேளே!சிற்றில் சிதையேலே!
உழுவோரும் உயர்ந்தோரும்  உறைகன்னிச்  
       செவ்வேளே!சிற்றில் சிதையேலே.

                                பொருள் 
முருகா!நாங்கள் கட்டிய மணல் வீட்டைச் சிதைக்க முற்படின்,உனது அழகான கால்கள் 
அழுக்கடையும்;அக்கால்களோடு அன்னை மடி மீது அமர இயலாது.தண்டை,கொலுசு போன்ற 
அணிகலன்கள் அணிந்த உனது அலங்காரக் கால்கள் மண்ணில் பட்டால் அழகு போய்விடுமே!
         மழுப்படைகொண்ட தேவேந்திரன் உன்னை வணங்கும் பொழுது,அவனது கிரீடம் 
உன் கால்களைத் தொடும்;அப்படிப்பட்ட வெற்றிமலர்ப்பாதம் மண்ணைத் தீண்டிக் கலைக்கலாமோ?
நத்தையும் பூச்சிகளும் மறைந்து வாழும் மணலில் செம்மையான உன் பாதங்கள் பட்டாலே 
துயருறும்;மேலும் மேலும் சிதைப்பின் துயரன்றோ உன்னை அடையும்!
        மணலைச் சீராக்கிக் குற்றம் உடையவற்றை நீக்கி,மகிழ்வுடன் குறையில்லாத சிறு குடில் அமைத்தோம்;உன்னை வணங்கி வரம் கேட்கும் அடியவர்க்கு வேண்டுவன வழங்கும் 
விழுப்பொருளே!உன் பாதம்  பணியும் எங்கள் மனம் வருந்தும் செயலைப் புரியலாமோ?
         செம்மையான கரத்தால் சீர்மையான வரங்கள் நல்கும் முருகா!சிறிய மணல் வீட்டைச் 
சிதைக்காதீர்!
உழுதொழில் உழவர்கள் நிறைந்த கன்னியாகுடியில் வீற்றிருக்கும் முருகா!எங்களது 
சிறிய மணல் வீட்டைச் சிதைக்காதீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக