புதன், 30 டிசம்பர், 2015

          திருமிகு ..சுவாமிகள்.
                               கௌமார மடம்
                                கோவை

மண்ணகம் மணக்க வந்த இளந்தென்றல்;
கண்ணகம் நிறைந்து நிற்கும் கருணை;
தன்னகம் கொண்டு நிற்கும் தர்மநெறி
புன்னகை மாறாப் புனிதச் சான்றோரே!
பண்ணோ டிசைந்த பாடல் போன்றும்
கண்ணோ டிசைந்த கண்ணோட்ட மேலவரே!
கல்விச் சமயக் கலங்கரை விளக்கே!
இல்லார்வாழ்வின் இனிய சுடரே!
நல்ல சொல்லின் நயமிகு உரையே!
காலம் காட்டிய கருத்துத் தாக்கமே!
வேலன் புகழை விரும்பிப் பரப்பி,
ஞானம் வளர்க்கும் ஞானத் தலைவ !
கண்டது கணமாம் பொழுதே ஆயினும்
பண்டோர் யுகமாய்ப் பதிந்தது மனமே.
முருகன் பெருமை முனையும் வேள்வி
விருப்புடன் யாத்து வெளியிட வந்தேன்;
முறுவலே விடையாய் மறுப்பிலா தேற்றீர்!
வியன்பே ரவையில் வெளியிட விரும்பி,
நயமுடன் காலமும் நேரமும் வகுத்தீர்!
வந்தது நாளும்;தந்தது வாழ்த்து;
கந்தனின் கருணை கலியுகம் காணும்;
உந்தன் கருணை உவந்தே அறிந்தேன்;
எந்தன் மனத்தில் என்றும் நிலைத்த
கந்தன் நன்னூல் கரத்தில் எடுத்து
முந்தை முறையில் முழுப்பொருள் ஆக்கினீர்!
வந்தோர் வியந்தனர்;வாழ்த்தும் வழங்கினர்;
எந்தம் உள்ளம் இறும்பூ தடைந்தது ;
செந்தமிழ் முனிவ!வந்தனம்;வணக்கம்;
நன்றி சொல்லிட நாச்சொல் எழவிலை;
என்றும் நன்றி;இதய நன்றி;
பொன்னாய்ப் பொலிவாய்ப் பூவாய் மணமாய்
தன்னே ரில்லாத் தலைமகன் என்றே
மண்ணகம் போற்ற மாபெரும் பெருமை
உம்மை அடையும்;உறுவேல் உண்மை.
நன்றி மீண்டும் நாளுமே.

                                                                         
                                         நன்றியும் வணக்கமும்'

30.12.15                                                                                                                                     தங்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக