ஞாயிறு, 27 டிசம்பர், 2015

அம்புலிப்பருவம்--3

விண்மீன் புடைசூழ் விரிவான் ஒளிமதி
       விளக்கம் இரவின் விருந்து நீயே;
விண்ணவர் புடைசூழ் விரிசுடர்த் தனியொளி
        விளக்கம் உலகின் வித்தும் அவனே.

பொன்மீன் மணந்திடப் போற்றினாய் தக்கனைப்
              பொன்னடி வணங்கிப் பெற்றனைப் பெண்களை;
பொன்மீன் வேண்டிடப் புனைநல வேடமும்
               பொன்னடி போற்றியே வேடனும் அளித்தனன்.

தண்ணொளி தருவது தகிக்கும் ஆதவன்;
              தாயென வலம்வரு தனயன் நீயே;
தண்ணொளிக் கடவுளின்  கண்ணொளிச் சுடரவன்
             தாயொடு தந்தை போற்றும் தனயன்.

பண்ணொலி பரவும் பசுமைக் கன்னியின்
             பைந்தமிழ்க் குகனுடன் அம்புலி!ஆடவாவே!
பண்ணவன் மண்ணவன் என்னவன் என்றுரை
             பைங்கன்னிப் பிரானுடன் அம்புலி!ஆடவாவே.

                                           பொருள்
   விண்மீன்கள் சூழ்ந்துவர வானத்தில் நல்லொளி பரப்பி இரவெல்லாம் மகிழ வைக்கும்
விருந்தாய்ப் பவனி வருபவன் நீ.
 விண்ணவர் சூழ்ந்து வந்து தொழவும்,சுடரொளியால் தீமை அகற்றி நல்லன பயக்கும்
கருணையால் மூவேழ் உலகங்களும் போற்றும் முதல் அவன்.
    உரோகிணியை மணக்க விரும்பினாய் ;அதற்காக அவளின் தந்தை தக்கனை வணங்கி,
அவனது வற்புறுத்தலால் இருபத்தேழு பெண்களையும் மணந்தவன் நீ;
மால் மகளின் தவத்தின் பயனாய் அவளது வேண்டுகோளை ஏற்றுக்,குறவள்ளியாய்த்
தோன்றிய அவளை மணப்பதற்காக வேடனாய்,விருத்தனாய்,விருக்ஷமாய்ப் பல
வேடம் புனைந்து,அவள் தந்தை வணங்கி வழங்கிட அவளை மணந்தவன் முருகன்.
      ஆதவனின் அருள் ஒளியால் அழகொளியாய் மின்னுபவன் நீ;தாய் என அச்சூரியனை
வலம் வருபவனும் நீ.
  கருணைக் கடவுளான சிவபெருமானின் நெற்றிக்கண் சுடரில் தோன்றியவன் முருகன்;
தாயும் தந்தையும் போற்றும் மகன் அவன்.
         தேவாரப் பண்ணொலி ஒலிக்கும் கன்னியாகுடிப்  பைந்தமிழ்க் குகனுடன் அம்புலியே!
விளையாட வருவாய்!
    பண்ணும்,உலகும்,அவனே;எண்கள் மனத்திலே என்றும் நிலைப்பவன் அவனே'' எனப்போற்றும்
கன்னியாகுடிப்   பெருமகனுடன் அம்புலி!விளையாட வருவாய். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக