புதன், 30 டிசம்பர், 2015

அம்புலிப்பருவம்---3

அழகான செல்லமே!அமுதுண மறுக்கலாமோ?
              அமுதமது பொழிந்து
அழகெனத் தோன்றிடும் அருநிலா அழைத்திடவா?
               அருகுசெல்லும் அம்புலியே!

விழைவோம் வேட்கை மனத்தால் இணைவோம்;
             வெறிசோலை நறுமலர்
வியன்நிலா அழைத்துநாம் விரியின்பம் கொள்வோம்;
            அருகுசெல்லும் அம்புலியே!

கழையாய்க் கைகால் கட்டுக்குள்  நிறுத்திக்
            கண்மட்டும் கடுந்தவ
அழைநிலா அகத்தினில் அமைதியாய்ப் புரிவோம்;
            அருகுசெல்லும் அம்புலியே 1

அழகனாம்  குழவியாம் அருந்தவனாம் ஆறுமுகனுடன்
                அம்புலி ஆடவாவே.
அழகுதமிழ் அருங்கன்னி அற்புதமாம் குமரனுடன்
                அம்புலி ஆடவாவே.

                                       பொருள்
 உலகத்தில் குழந்தைக்கு உணவூட்டும் தாய்மார்கள் ,இதோ பார்!வெள்ளிநிலா;நீ
சாப்பிடு கண்ணே!நிலவை அழைக்கிறேன்;என அழைத்ததும் அருகு செல்லும்
அம்புலியே!
       இளங்காதலர்கள் காதல் வேட்கை கொண்டு இணையும் காலம் உன்னை விரும்பி
அழைப்பர்; நீயும் அவர்மனம் மகிழும்படிச் செல்லும்அம்புலியே!
       மூங்கில் மரம் போல் உடலை நேராக்கி,வளையாமல் நிலைத்து,ஒருமுக நோக்காய்
உன்னையே வெறித்துப் பார்த்தபடித் தவம்புரியும் அமைதி முனிவர்பால் செல்லும்
அம்புலியே!
       குழந்தையாய்,அழகனாய் முதுமை முனிவனாய் விளங்கும் ஆறுமுகனுடன்
அம்புலியே!விளையாட வருவாய்.
  அழகு தமிழ் போற்றும் கன்னியாகுடி அற்புதமாம் குமரனுடன் அம்புலியே!
விளையாட வருவாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக