திங்கள், 7 டிசம்பர், 2015

உதவி

                                                 உதவி
                                                                              சுவாமி.சுப்பிரமணியன்

மழை
நில்லாத  வானம்  பூமி
மாடியின் ஜன்னல் இடுக்கிடையே
வழிந்தோடும் நீராடி நீண்டு நிற்கும் சாலை
அங்கு......அந்த மழையிலும்
ஏதோ  ..குல்லாய்...கோட்டு ..அணிந்து
பிளாஸ்டிக்  சாக்கைத் தோளில் சுமந்து
கீழே கிடக்கும் அல்ல..மிதக்கும் குப்பைகளைச்
சேகரிக்கும் ஆணோ ..பெண்ணோ
சரியாகத் தெரியவில்லை;
கீழே இறங்கினேன்
  மூடிய    கதவைத் திறந்தேன்;
போர்டிகோ
தண்ணீர்த் தடாகம்...
வெறும் காலில் நடந்தேன்!
வாயில் கேட் வரை
மலைப்பாக இருந்தது
கையிலே பழைய பேப்பர் கத்தை
சுமந்தபடி   நடப்பது
கூர்க்கா.....
வந்து ஒரு வாரம்  ஆகிறது
கேட்டைத் திறந்தேன்
அங்கு நின்றபடிப் பங்களாவைப் பார்த்தேன்
பெரி.........ய  பெரிய வீடு
சாத்தப் பட்டிருந்தன
ஜன்னற்கதவுகள்
மனமும்  தான்
ஒ ,,,,,ஒ ...இன்னும் யாரும் எழுந்திருக்கவில்லை!
பிழைத்தேன்...தப்பித்தேன் ...என்றபடி
வெளியே வந்தேன்,
ஏ     ஏ    இங்கே   வா
வந்தது உருவம்
என்னை ஏறெடுத்துப் பார்த்தது ?
அரை நிஜார் ...பனியன்.....தலையிலே ...முண்டாசு
சுதாரித்தபடி,
அண்ணே!என்னண்ணே !
இந்தா!இந்த பேப்பரைப் பிடி
கையிலே சுமந்த மூட்டையை நீட்டினேன்.
என்ன?புதுசா வேலைக்குச் சேந்திருக்கியா?
இப்படி அஞ்சிக்குனு நிக்கறே?
ஹி ......ஹி    சிரித்தேன்
அண்ணே!சாதாரண நாளுலே இந்த வூட்டுப்
பக்கமே வர மாட்டோம்.
எங்களைப் போலவங்களைக்
கண்டுட்டா  ..கத்தித் தீத்துடுவானுக
எரிஞ்சு விழுவானுக
அதுவும் இங்க ஒரு பெரிசு இருக்கும்
அது கத்தும் பாரு......
இங்க வந்து எப்படியண்ணே வேலைக்குச் சேந்தே ?
சரி ...சரி   சீக்கிரம் உள்ளாற போ
தெரிஞ்சா
சீட்டைக் கிழிச்சுடுவானுக ...
நான் வாரேன் ..
பேப்பரை வாங்காமலே போய்விட்டான்
மீண்டும் சுமந்தேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக