செவ்வாய், 8 டிசம்பர், 2015

முத்தப்பருவம் --1

மலைநிலம் மணங்கமழ் மலர்களோ மகிழ்வில்
     மதுவுடன் மகரந்தப் புணர்வினில் மயங்கி
மறுதொடர் மணவினை மலிசுகப் பயப்பினில்
     மழலை முத்து அநித்தியம் உடையது'

கலைக்கழைக் கரமிலாக் குறைமரம் கணுவெலாம்
    கணக்கிலாக்  கருமணி அணிமணி அழகெலாம்
கருவெலாம் குழலெனத் தடியெனச் சிதறிடும்;
     கவினென நிலைப்பினும் கசடென அழியுமே.

மலைநில மணலடி மறைந்திடு மணியெலாம்
    மணமகள் பயன்படு மறுவுடை மணிகளே!
அலைகர கஜமுகக் கருநிற அருமணி
    அடிபடு செருத்தலை குறையுடை குணமதே .

விலைமதிப் பிலையெனும் வியன்குகன் விரிஇதழ்
         விரிமறைத் தலைவனே!முத்தம் தருகவே!
கலைமதிச் சடையவன் கருணையின் புதல்வனே!
     கனி நகர் முருகனே!முத்தம் தருகவே!

                                        பொருள்
  குறிஞ்சி நில முத்துக்களோடு முருகனின் முத்து இதழ்களை ஒப்பிட்டு,அவற்றினும்
உயர்ந்த முத்திக்கனி வாயால் முத்தம் வேண்டுதல்
மலைகளிலே மலரும் மலர்கள்,மலர்ந்து,மணம் பரப்பி,வண்டுகளால் மகரந்தச் சேர்க்கை
உண்டாகி,மகிழ்ந்து,இன்பம் கண்டு,அடுத்த தலைமுறை முத்துக்களை உண்டாக்கினும்
அவை அன்றோ மறுநாளோ அழியக்கூடியதே!
   மலை மூங்கில் மரக் கனுவிலே தோன்றும் கருநிற முத்துக்கள் ;அவைகளும் வெட்டப்பட்டு
குழலாய்,தடிகளாய் மாறுகின்றன.அதனால் அவையும் குறைபாடுடையவே.
     மலைநிலத்தில் வெட்டி எடுக்கப் படும் நவரத்தினங்கள்,பெண்களால் அணியப் படுவதால்
தகுதி  குறைந்து விளங்குகின்றன.அதே மலைநில யானைகளின் மத்தக முத்துக்கள்
சண்டையிடுவதால் அழிந்தும்,சிதைந்தும் போகின்றன.
    அழியாத,விலை மதிப்பில்லாத அழகுமுருகனின் முத்து இதழ்கள் மறையோதும்
மாண்புடையவை;அப்படிப்பட்ட திருவாய் உடைய முருகனே!முத்தம் தந்தருள்க;
நிலவைத் தலைச்சடையில் தரித்த சிவபிரானின் மைந்தனே!கன்னியாகுடி வாழ் முருகா!
கனிவாய் திறந்து முத்தம் சிந்துவாய்>

                                                                  விளக்கம்
அநித்தியம்==அழிவுடையது
கசடு==குற்றம்
செருத்தலை===போர்க்களத்தில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக