செவ்வாய், 22 டிசம்பர், 2015

வாரானைப்பருவம்--7

விடியற் பொழுதில் விரியும் மலர்கள்;
      விரிவான் சுடரோன் சுடரும் ஒளியில் ,
விகற்ப அலைகள் விளக்கென மின்னும்,
       வியனூர் செந்தில் பதிவாழ் குமரா!

அடிமுடி தேடிய இருவர் மனத்துறை
     அண்ணா மலையான் அருளொளிச் சுடரே!
அடிபணி அடியவர் இடிதுயர் தடுத்திடும்
      அகம்பொதி கருணை   அனையவள் மகனே!

படிதொடும் பரவசப் பழமொடு  பசும்பால்
     பனிநீர் சந்தனப் பைந்தேன் பல்பொருள்
படிபுகழ்க் காவடி முடிதோள் சுமந்து
     பழனியே பழம்நீயே!பாடுவோர் மனத்  துறைபவனே!

குடில்தொறும் குகனே!குலம்தொறும் குமரன்;
        குணமுடைக் கன்னிக் கடவுளே!வருகவே!
தொடியிடை தவழ்மதி அருள்பொழி விழிமலர்
          தளிர்மனக் கல்யாணி மைந்தா!வருகவே.

                                         பொருள்
  விடியற்காலத்தில் மணமுடன் இதழ் விரிக்கும் மலர்கள்;உதிக்கும் ஆதவனின் கிரணத்தில்
மின்னும் கடலலைகள்;இயற்கை அழகுமிக்க திருச்செந்தூரில் வீற்றிருக்கும் முருகா!
      ஒளிப்பிழம்பின் அடியைத்தேடி ஒருவரும்,முடியைத்தேடி ஒருவரும் பல்கால் தேடியும்
காண இயலாத அண்ணாமலையானின் சுடரொளியே!
தன்னை வணங்கும் அடியவர் துயரினைப் போக்கும் கருணைமனம் கொண்ட கல்யாணி
அம்மையின் மகனே!
       பரவசத்துடன் படியைத் தொட்டு வணங்கி,பால்,பழம்,பன்னீர்,சந்தனம்,தென்,எனப்
பல பொருள்களைக் காவடியில் வைத்துத் தோளிலும் தலையிலும் சுமந்தபடி,பழனி அப்பா!
என மலையேறும் பக்தர்களின் மனத்தில் உறைபவனே!
         வீடெல்லாம் முருகன்;குலமெல்லாம் முருகன் என வழி வழி
போற்றும் குணமுடையோர் கன்னியாகுடியில் அருள் பொழியும் குமரா!வருக.
தொடியிடையும்.மதிமுகமும்,அருள்பொழியும் மலர்விழிகளும்,கருணை மனமும் கொண்ட
கல்யாணி அம்மை மகனே!வருகவே.
                                         விளக்கம்
விகற்பம் ---ஒரே சீரான
அனையவள்--அன்னை என்பதன் தொகுத்தல் விகாரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக