தமிழாம் மதுரை தலைமைப் புலவன்
தமிழை உயர்த்த உருத்ர சன்மனாய்த்
தலைவன் தலைவி இயலின் பொருளில்
தமிழ்க்கீரன் உரையை உயர்த்திய தமிழே!
தளிர்வாய் திறவா மகனைக் கண்டே
தனிவேல் அதனால் தவழ்நா அதனில்
தவமறை எழுதித் தமிழில் கவியும்
திறனாய் உரைத்த கவியின் குருவே!
தனத்தில் இதழில் மயங்கிக் கிடந்து,
தளரும் உடலில் தவழும் பெருநோய்
தவிக்கும் அருணன் தலைவிதி களைந்து,
திருவாம் புகழாம் கருவாம் குகனே!
தமிழாய்த் தவமாய்த் தயவாய் விளங்கும்
தனியூர்த் தலைவா!முத்தம் தருகவே!
தளிர்கொன்றைச் சடையன் தணல்கையன் கைலாசத்
தலைவன் மகனே!முத்தம் தருகவே>
பொருள்
மதுரையில் வீற்றிருக்கும் சோமசுந்தரக் கடவுள் தமிழ்ச்சங்கத் தலைமைப் புலவன்
ஆவார்;நகரைக் கடல் கொண்டதால் தமிழிலே பொருள் நூல்கள் இல்லாது போயின.
இறைவன் தானே களவியல்''என்னும் நூலெழுதிப் பாண்டியன் அவையில் யாரும்
அறியாவண்ணம் வைத்து மறைந்தார்;அந்நூலுக்குப் பலரும் உரை கண்டனர்;எது தகுதி உடைய
உரை என அறியாது தவித்த காலை முருகப் பெருமான் உருத்திர சன்மன் என்னும் புலவன்
உருக்கொண்டு தமிழ்ச்சங்கம் வந்து உரைகளைப் படித்து,நக்கீரன் உரையே சாலச் சிறந்தது
எனக் கூறினார்.தமிழ் வளர்க்க வந்த தமிழே!
பிறந்தது முதல் பேசா ஊமையாய் இருந்த குழந்தை மீது கருணை கொண்ட முருகன்
அக்குழந்தை நாவிலே வேலால் பிரணவத்தை எழுதி,முதற்சொல்லே கவிதையாய்
வரப் பணித்தார்;அந்தப் பாடல்தான் கந்தர் கலி வெண்பா''குமரகுருபரரைப் பாட்டாகவே
வாய் திறக்க வைத்த குருபரனே!
இளமையெல்லாம் பெண்களைத் தேடி அலைந்து காமசுகம் கண்டு,அதனால் நோயுற்று
அழிந்து துயருற்றவன் மீது கருணை காட்டினாய்;அவனோ உன்மீது திருப்புகழ் பாடினான்,
அருணகிரியைத் தடுத்தாட்கொண்ட முருகா!
தமிழாய் மதுரையில் திகழ்ந்தாய்;தவமாய்த் தவ குமரகுருபரனை ஆக்கினாய்;
தயவாய் அருணகிரியைத் தடுத்தாட்கொண்டு உன் புகழை உலகெல்லாம் பரவும்
வண்ணம் செய்தாய்;இம்மூன்றையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் கன்னியாகுடியின்
தலைவனே!உனது செவ்வாய் சிந்தும் முத்தம் அருள்வாய்!
குளிரான கொன்றைமலரை அணிந்த சடையுடையவன்,கையிலே நெருப்பைத் தாங்கியவன்
கைலாச நாதன் ஆகும்;அவரின் மகனே! உனது செவ்வாய் சிந்தும் முத்தம் அருள்வாய்.
விளக்கம்
தலைமைப் புலவன் தமிழ் .....இறையனார் களவியல்
தலைவன் தலைவி இயல் .........களவியல்
வாய் திறவா மகன் .....குமரகுருபரன்
அருணன் ......அருணகிரி
திருவாம் புகழாம் கருவாம் .......திருப்புகழின் கருவாய் அமைந்த முருகன்
தனியூர் .....கன்னியாகுடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக