திருவாம் உருவாம் திகழ்நீர் நடுவே
திரண்ட மகளிர் தேவனைத் தொழுதே
தருவே மலரே தமிழே முத்தம்
தருவாய் என்றதும் தந்தனை முருகா!
பெருமை அறிந்தாள் பெருஞ்சுடர் மகனின்
பெருமை அளித்தே புகழோன் ஆக்கிடப்
பசுங்கை அணைத்தாள்;பரம கல்யாணி;
பசிய முத்தம் வேண்டினாள் தந்தாய்.
பெரியோன் செவியில் முத்தோ பதேசம்;
பனிநீர் நதிக்குப் பரிவாம் முத்தம்
எரிகாற் றிருவர்இயைந்த முத்தம்;
ஏந்திழை இருவர் இணைந்த முத்தம்.
விரிவாய்ப் பலரும் பெற்றனர்;அதுபோல்
வியனூர் வேலவா!முத்தம் தருகவே!
விரிசெஞ் சடையான் கைலாச நாதர்
வழிகாண் மைந்தா!வளமுத்தம் தருகவே.
பொருள்
சரவணத்தில் மலர்ந்த ஆறு மலர்களையும் அரவணைத்து வளர்த்த கார்த்திகைப் பெண்கள்
மலரே!மணியே!தமிழே!எனக் கொஞ்சிய காலை முத்தம் வேண்டிக் கெஞ்சினர்;முருகா!நீயும்
மகிழ்வோடு அளித்தாய்.
சரவணப் பொய்கையில் வளரும் மகனின் பெருமைகளை அறிந்தாள் தாய் கல்யாணி அம்மை.
மேலும் புகழும்,பெருமையும் வாய்க்க அன்புடன் மகனை இறுக அணைத்தாள் ;ஆறுமுகங்களும்
ஒன்றாயின;அப்பொழுது அந்தத் தாய் வேண்டினாள் அமுதூறும் உன் செவ்வாய் முத்தம்.நீயும்
அன்புடன் அளித்தாய்.
தந்தைக்கு உபதேச வாயிலாகச் செவி முத்தம் தந்தாய்;தன்னைச் சுமந்த கங்கைக்கும்,பரிவுடன்
முத்தம் அருளினாய்;அக்னிக்கும்,காற்றிற்கும் அருள் முத்தம் கிடைத்தது;தெய்வ யானைக்கும்,
வள்ளிக்கும் வரமாய் வழங்கினாய் வாய்முத்தம்.
உன்னிடம் பண்புடைப் பலரும் முத்தம் பெற்றனர்;அதுபோல் கன்னியாகுடியின் வேலவா!
செவ்வாய்ச்சீரமுது முத்தம் அருள்வாய்!
விரிந்த செஞ்சடை கொண்ட கைலாச நாதரின் மகனே!செவ்வாய்ச்சீரமுது முத்தம் தருவாய்.
விளக்கம்
திருவாம் உருவாம் .....................சரவணப் பொய்கையில் திருவான முருகன் உருவானான்
வழிகாண் மைந்தா .....சிவனின் வழியே முருகனின் வழி சிவசக்தியே முருகன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக