புதன், 9 டிசம்பர், 2015

முத்தப்பருவம்--4

நெய்தல் கடலினுள் பழகிடும் அலையதின்
   நிகரிலாச் செயலதால் நிலமகள் நடுங்கிட
நீள்கரம் சாடிடும் நித்திலம் சிதறியே
   நற்கரை மணலெலாம் முத்தென ஆக்கும்.

பொய்யினைப் பூசிவரும் புதுத்தலை நன்முத்து
   பொன்னவன் எதிராமோ?புதுநண்டு சுமந்திடும்
பனிமுத்து பரமனின் பாததூளி பாற்படுமோ?
    பகலொளி முருகனே;அகலொளி அருமுத்து.

பாய்நீர் பட்டொளி  பகல்நீர் சூட்டொளி
    பனைநீர் சீற்றொளி  பரப்பினின் மேலொளி
சாய்நீர் சமஒளி சமுத்திர முத்தொளி
  சண்முகச் செவ்விதழ்ச் சிரிப்பொளிச் சமமோ?

கொய்மலர் கொண்டு குமரனை வணங்கிடும்
    கொள்கையூர்க் குருமணி !முத்தம் தருகவே!
கையிழி இராவணக் கைலாச நாதரின்
      கருணைமா மகனே!முத்தம் தருகவே.

                                   பொருள்
நெய்தல் நிலா முத்தினும் உயர்ந்து விளங்கும் முருகனின் முத்தச் சிரிப்பை விளக்குவது
இப்பாடல்.கடலலை ஓயாது உறங்காது தன்பணியை நிறுத்தாது புரியும்;அதன் வேக அலைக்கரம்
நிலத்தை நிலை குலையச் செய்கிறது;கரையிலே மோதிய அலைநீர் முத்துக்களைச்
சிதற விடுகிறது;அதனால் கடற்கரை மண்ணெல்லாம் முத்துக்களாய்க் காட்சி அளிக்கின்றன.
      நானே உயர்ந்தவன் என்ற பொய்யினைப் பரப்பிவரும் புதுமுத்து ,பொன் முருகனுக்கு ஈடாகுமோ?
நண்டுகள் சுமக்கும் நல்முத்தும் நன்முருகன் அடிப்பொடிக்கு நிகராகுமோ?ஆதவனின் ஒளி
போன்றவன் முருகன்;அவைகளோ அகல் விளக்கொளி போன்றவை.
     பாயும் கடலலை நீரின் ஒளி பகலிலே கடல்நீரின் சூடு உடைய ஒளி ,பனைமர அளவு
எழும்பும் அலையின் சீற்றம் கொண்ட ஒளி ,கடல் பரப்பினில் தோன்றும் பொன்னொளி,அமைதியான கடலில் தோன்றும் சரி சம ஒளி கடலுள் ஒளிரும் முத்துக்களின் ஒளி   இவை யாவும் சண்முகனின்
சிரிப்பொளிக்குச் சமம் ஆகுமோ?
       மலர் பறித்து,அர்ச்சித்து,அன்றாடம் குமரனை வணங்கும் கொள்கை கொண்டவர் வாழும் கன்னியாகுடிக் குருமணியே!செவ்வாயால் முத்தம் தந்தருள்வாய்!
கைலாய மலையைத் தன்னூருக்கெ எடுத்துச் சென்றிட எண்ணிய இராவணன் அதனைத் தன்
கைகளால் தூக்க முனைந்தான்;ஈசனோ கால்கட்டை விரலால் அழுத்த கை அறுபட்டுத்
துயருற்றான்,அந்தக் கைலாச நாதரின் (கன்னியாகுடி இறைவன் பெயர் கைலாச நாதர்)
மகனே!செவ்வாயால் முத்தம் தந்தருள்வாய்.
   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக