வியாழன், 31 டிசம்பர், 2015

அம்புலிப்பருவம்--4

குளிரொளிக் குணத்தாலே குவலயம் குதூகலிக்கும்;
        குவிமுக வசீகரம் குவியல்லி மலர்விக்கும்
குணமில்லா மனம்கூட குணமாக்கும் குலநோக்கு;
        கும்பநிறை அமுதமாம் இம்பர்வான் அம்புலியே!

களிமனக்  கசட்டுடன் காரிகையர் மணந்தனை;
        காதலும் தந்தனை;கண்ணீரின் பயனாகக்
கடுஞ்சாபம் பெற்றழுது கறைக்கண்டன் தலையுற்றாய்'
       கலைவளரக் கண்ணருளும் கொண்டுயர் அம்புலியே!

தளிர்குணம் தவிர்த்த நீ தவகுருவின் தாரத்தைத்
       தரமற்றுப் புணர்ந்தனை;தலைகுனிந்த வாழ்வுற்றாய்;
தத்துவமே தன்னுருவாய்த் தருமநெறி தலைவணங்கும்
     தண்பாதம் போற்றிடின் தவறெல்லாம் தான்விலகும்;

களிநிலவே!கன்னிவந்து கந்தன்தாள் பற்றிட்டால்
     கலிதோஷம் கரைந்திடும்;ஆதலின் ஆடவாவே!
கடிமலர்க் கரக்கருணைக் கல்யாணிக் கருமலர்க்
     கந்தன்தாள் அருகுறைந்து அம்புலி!ஆடவாவே.

                                          பொருள்
          குளிர்மையான ஒளி வெள்ளத்தில் உலகம் குதூகலம் அடையும்;அழகு முக
ஈர்ப்பினால் அல்லிமலர் மலரும்;பற்றற்ற மனம் கூடப் பற்றுடன் இன்பச்சுவை நுகரும்
அமுதக் கலசத்தை ஏந்தி அமுதமழை பொழிகின்ற அம்புலியே!
      உரோகினியை அடைவதற்காக அவளுடன் பிறந்த இருபத்தாறு சோதரிகளை
மனமின்றி மணந்தாய்;அதன்பின் ஏற்பட்ட உரோகிணி அல்லாத பெண்களின்
கண்ணீருக்கான கரணம் அறிந்த தக்கன் அளித்த சாபமும் பெற்றாய்;உருவிழந்தாய்'
சிவபெருமானின் அருளால் கலைவளர்வும் ,சிவன் தலை அணியாகவும் விளங்கும்
அம்புலியே!
         தவறான வழிகாட்டிய உன் மனக் காம இச்சையால் குருவின் மனையாளைப்
புணர்ந்து,தலை குனிந்த வாழ்வைப் பெற்றாய்;உனது பாவங்கள் போக,மன அமைதி
அடைய ,ஆறுமுகனை நாடி அவனது பாதங்களைப் பற்றிப் போற்றிடு;
       அம்புலியே!கன்னியாகுடி வந்து கந்தனின் தாள் பற்றி,னால் உன் பாவங்கள்
அகலும்;ஆதலின் அவனோடு விளையாட வருவாய்.
மலர்க்கரத்தால் மாகருணை அளிக்கும் கல்யாணி அம்மையின் மைந்தனாம்
முருகன் அருகே வந்து,அவனோடு விளையாட வருவாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக