சனி, 19 டிசம்பர், 2015

வாரானைப்பருவம்---4

கற்றுணர் முனிவர் பொற்றுகள் போற்றவும்,
    கரமலர் அருளினைப் பெற்றவர் மகிழவும்,
கந்தர்வர்,கின்னரர் கானத்தால் துதிக்கவும் ,
   கவிஞர் கற்பனைக் கருப்பொருள் கந்தா!

சொற்றுணை வேதியன் சுந்தரச் செல்வா!
    சொற்பதி நான்முகன் சொல்லறி குருவே!
சொல்லும் பொருளும் இணைந்த காப்பியமே!
    சொற்கிழவி தம்முடன் ஆடிய வேடனே!

நற்றிறம் உற்றோர் பற்றுற்ற நற்றவனே !
     நக்கீர ஆற்றுப் படையின் நாயக!
நற்குண தெய்வாள் நற்பூசை ஏற்பவனே!
     நாடியே,தேடியே நற்குறத்தி அடைந்தோனே!

கற்றுணர் பெருமை காலமெலாம் கூறிடும்,
    கன்னிநகர் அழைத்தால் வாரா திருப்பாயோ?
கற்றவர் விழுப்பொருளாம்  கற்பகக் கொழுந்தாம்
     கல்யாணி மைந்தா!வருக!வருகவே.

                                       பொருள்
முனிவர்கள் வணங்கவும்,சான்றோர் போற்றவும்,அருள்பெற்றோர் அகமகிழ்வெய்தவும்
கந்தர்வர்,கின்னரர் கானத்தில் புகழ் பாடவும்,கவிஞர் தம் கவிதைக் கருப்பொருளாயும்
விளங்கு கின்ற கந்தனே!
சொல்லாயும் பொருளாயும் விளங்கும் சிவச்செல்வா!கலைமகளின் கணவனாம் நான்முகன்
மறைப் பொருள் அறியாது திகைத்த காலை,அப்பொருளை உணர வைத்த குருவே! சொல்லும்
பொருளும் கொண்ட காப்பியமே!அவ்வைப் பிராட்டியுடன் ''சுட்ட பழம் வேண்டுமா?சுடாத
பழம் வேண்டுமா?என விளையாடிய வேடனே!வாழும் சான்றோர்கள்
    நற்றிறச் சான்றோர் மீது பற்று காட்டும் நற்றவனே!நக்கீரரின் திருமுருகாற்றுப் படையின்
தலைவனே!தெய்வயானை விரும்பி ஆற்றும் பூசையை ஏற்பவனே!மலை காடு நடந்து
தேடி அலைந்து குறத்தியை மணந்தவனே!
    கற்றுணர்ந்த உன் பெருமையைக் காலமெல்லாம் கூறிப் போற்றிடும் கன்னியாகுடிச்
சான்றோர் வா!வா! என அன்புடன் பணிந்து வரவேற்றால் வாராது இருப்பாயோ?
கற்றவரின் விழுப்பொருள் கற்பகக் கொழுந்து கல்யாணி அம்மையின் மைந்தா!
வருக!வருகவே.
                                                     விளக்கம்
கரமலர்------உருவகம்
சொற்பதி =கலைமகளின் கணவர்   பிரமன்
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக