திங்கள், 14 டிசம்பர், 2015

வாரானைப்பருவம்--2

மகபதி வெகுமதி தருமதி இளநதி
     மணவணி பரமலைத் தலைவனே!வருகவே!
இகமதில் அகமென சுகபதி அகமழி
     இதமென அருள்பொழி குகனவன் வருகவே!

மறையறி முதலது மறைபொருள் அறிந்திட
    மதிச்சடை வணங்கிய சிவகுரு வருகவே!
இறைதரு எழில்கனி எனக்கிலை மனச்சினம்
   இனிதனி நனிமலைப் பழநியே !வருகவே!

மனமுறை மலைபுணர் குறமகள் அடிபணி
   மனமுரை திருத்தணி அசலனே!வருகவே!
மலையிது குலையிது மதுபொழி கனிகளின்
    மணமிது தங்கிய மணியனே!வருகவே!

மனங்குளிர் செயலிலே உளமுடன் நிலைத்தவர்
    மகிழ்வுடன் தொழும்பதி உறைபவனே!வருகவே!
கனங்குழை மலைமகள் கனிநகர்த் திரிபுரை
  கரம்வளர் குழவியே!வருகையும் தருகவே.

                                            பொருள்
  விண்ணகம் காத்த முருகக் கடவுளுக்கு வெகுமதியாய்த் தன்மகள் தெய்வயானையை
மணமகளாய் அளித்தான்;திருமணம் நடந்த திருப்பரங்குன்ற முருகனே வருகவே!
அவ்வுலகில் அழியா வரம் பெற்றவன் நான்''என்ற அகந்தையில் ஆணவத்துடன் நடந்த சூரனின்
ஆணவம் அழித்து,அவனுக்கும் அருள் காட்டிச் சேவலாய் மயிலாய் ஏற்றுக்கொண்ட திருச்செந்தூர்
முருகனே வருகவே,
       வேதமுதற் பொருளாம் ஓங்காரத்தின் பொருள் அறியத் தலை வணங்கித் தொழுது அறிந்தான்
தந்தையாம் சிவன்;சுவாமிமலையில் உள்ள சிவகுருவே!வருகவே!
தகுதிமிக்க கனி தனக்கு இல்லை''என்பதை அறிந்த குகன்,தனியே சுற்றம் இன்பம் ஆசாபாசம்
நீக்கி ஆண்டியாய் நின்றான்,பழனி மலை ஆண்டியே!வருகவே.
     மனத்தே உறையும் மலைவாழ் குறமகள் விரும்பித் தேடி அலைந்து,அவளடி என்கி நின்று
தன் காதலிலே வென்ற திருத்தணிகை மலை முருகனே!வருகவே!
மலையெல்லாம் குலை குலையாய்ப் பழங்கள்;தேன்பொழியும் மணமும் கொண்ட பழமுதிர்
சோலையின் சுப்பிரமணியனே!வருகவே.
    முருகனைப் போற்றும் மனம் குளிர்ந்த செயலில் விருப்பமுடன் ஈடுபட்டு மகிழ்வுடன்
வணங்குவோர் வாழும் பதியாம் கன்னியாகுடியில் உறையும் முருகனே!வருகவே!
கருத்த கூந்தல் கொண்ட மலைமகளாம் கன்னியாகுடியில் வீற்றிருக்கும் கல்யாணி
அம்மையின் மைந்தனே!வருகவே.
                                                         விளக்கம்
மகபதி--இந்திரன்    
வெகுமதி----விண்ணகம் காத்த முருகனுக்கு அன்பளிப்பு
அகமென---நான்   என்ற கர்வம்
இதமென அருள் ----சூரனை அழிக்காமல் அவன் கர்வத்தை நீக்கி,மயிலாகவும்,சேவலாகவும்
                                            பொழிந்த கருணை
மறை பொருள் ----இரகசியம் வேதாந்த வேத ஆதி இரகசியப் பொருள்
அசலனே ----மலையானே
திரிபுரை ----திரிபுர சுந்தரி   இங்கு கல்யாணி அம்மை



    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக