சனி, 14 நவம்பர், 2015

தாலப்பருவம்--2

வேலெடுத்து வீணரக்கர் விதிமுடித்த வேலவ!                        
      வேற்கண்ணி விண்மகள் கணவா!
வேதமுதல் தானாகி வேதமற் வேதியனாய்
    விளங்கும் சுப்பிர மணியமே!

நாலெழுத்து தானறிந்த கர்வத்தால் நான்முகன்
  நாண நற்சிறை நல்கியவா !
நாணத்தால் சிவந்த நல்வள்ளி நாடியே
  நல்லூர் வள்ளி மலை சென்றவா!

பாலெடுத்த பக்தர்தம் பாற்காவடி விரும்பி
   பழனிமலைப் பதி தங்கும் பாலனே!
பராசரப் புதல்வர்க்குப் பாவவினை போக்கிடப்
   பரங்குன்று மேவிய பைங் குமரா!

 கால்கண்டு கரங்குவித்துக் கணக்கற்றோர் வந்துபோற்றும்
       கந்தனே!தாலோ!தாலேலோ
கால்வாய் கரைபுரண் டோடும் கன்னிநகர்க்
     கற்பகமே!தாலோ!தாலேலோ

                                         பொருள்

நீதிக்குப் புறம்பான வழிநாடி ஏற்க இயலாத தீமைகளைப் புரிந்த அரக்கர்
கூட்டத்தை,வேலாயுதத்தால் வீழ்த்திய வேலவனே!வேல்போன்ற கண்ணுடைய
இந்திரன் மகளை மணந்தவனே!மறைகளின் முதலாகி நின்று,மறையெல்லாம்
மறைகூறும் அறமெல்லாம் கற்றுணர் சுப்பிரமணியமே!
         எல்லாம் கற்றுணர்ந்தோன் ''படைப்புத் தொழில் ஆற்றும் வல்லவன் என்ற
கர்வம் கொண்ட நான்முகனைப் பிரணவப் பொருள் கேட்டு உரைக்கத் தெரியாமல்
விழிக்கச் சிறையில் தள்ளியோனே!நாணம் கொண்ட வள்ளி மீது காதல்கொண்டு,
அவளை விரும்பி,அவள்வாழும் மலையாம் வள்ளிமலை சென்றவனே!
      பால்காவடி ஆடிவரும் பக்தர்கள் சூழும் பழனி மலையை விரும்பி,அங்கேயே குடி
கொண்டவனே!பராசர முனிவர்களின் சாப விமோசனத்திற்காகத் திருப்பரங்குன்றம்
சென்று,அவர்களை ஆட்கொண்டவனே!
        நின்னடியைப் போற்றி வணங்க எண்ணில்லா அடியவர் கூடிப் போற்றும்
கந்தனே!தாலோ!தாலேலோ!
     வாய்க்காலில் கரைபுரண்டோடும் நீர் வளம் பொருந்திய கன்னியாகுடியின்
கற்பகமே!தாலோ!தாலேலோ!

                                                              விளக்கம்
வேற்கண்ணி .....அன்மொழித்தொகையாய் தெய்வ யானையைக் குறித்தது.
விண்மகள் ...இங்கு விண் என்பது விண்ணை ஆளும் இந்திரனை ஆகுபெயரய்க் குறித்தது.
சுப்பிரமணியமே...........மறை,பொருள்,அறம் உணர்ந்த இன்னும் சொல்லப் போனால் அனைத்தும்
அறிந்துணர்ந்த பரம்பொருள்
நாலெழுத்து ..........உயிர்களின் தலையெழுத்து (படைக்கும் தொழில்)   நான்கு வேதங்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக