ஞாயிறு, 15 நவம்பர், 2015

தாலப்பருவம்--3

ஆற்றுப் படையால் அருள்முகம் கண்ட
     அரும்புலவன் நக்கீரன் அழகுதமிழே!
ஆற்றாத் துயரெலாம் அகலவைத்த அருளின்
     அருணகிரி போற்றும் திருப்புகழே!

மாற்றான் பேரவை மாச்சீயம் மேற்சென்ற
   மாப்புலவன் குமரகுரு மகிழ்தமிழே!
மாதவக் கச்சியப்ப மாமுனிக்கு முதலடி
   மலர்ந்த காப்பியக் கந்தனே!

நோற்போர் நோன்பு நொடியினில் ஏற்று
       நோயினைத் தீர்க்கும் நித்தியனே!
நூலின் பயனே!நுண்ணறி இயலே!
     நோக்கும் கருணைக் கடலே!

ஏற்றுயர் கொடியோனின் ஏழிசை இளவலே!
      எழிலோனே!தாலோ!தாலேலோ!
காற்றுத் தென்றலின் கவின்மணக் கன்னிநகரக்
    கற்பகமே!தாலோ!தாலேலோ!

                                    பொருள்
திருமுருகாற்றுப்படை ''பாடி,அருள் பெற்ற நக்கீரனின் நற்றமிழ் முருகா!தனக்கு வந்த தீரா நோயைத்
தீர்த்துவைத்து,ஆட்கொண்ட முருகன் மீது திருப்புகழ் பாடினார் அருணகிரி.அவர் பாடிய திருப்புகழே!
       காசிமாநகரத்து இஸ்லாமிய மன்னன் முன்,சிங்கத்தின் மீதமர்ந்து சென்று தமிழின் பெருமை
விளக்கிய குமரகுருபரரின் நற்றமிழாய் விளங்குபவனே! தவமுனியாம் கச்சியப்பர் ''கந்தபுராணம்''
இயற்ற நினைக்கையில்.''திகடச்ச்சக்கர ''என்னும் முதலடியை எடுத்துக் கொடுத்துப் பாடவைத்த
காப்பியக் கந்தனே!
      விரதம்,நோன்பு இருந்து வணங்குவோர் வேண்டும் அருளை,வேண்டுகோளை ஒரு நொடியில்
நல்கிடும் நித்தியனே!பாடப்படும் நூலின் பயனாய் விளங்குபவனே!நுண்ணிய அறிவுசால் இயக்க
இயலே!அடியவர்மீது சிந்தும் கருணைக் கண்ணோட்டம் கொண்டவனே!
        எருதுக் கொடியோனின் இளவலே!ஏழிசை போற்றும் இளவலே!அழகு முருகா!தாலோ!தாலேலோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக