வியாழன், 12 நவம்பர், 2015

தாலப்பருவம்--1

கங்கை மடியில் கண்ணுதல் தீப்பொறி
      கணப்பொழுது;ஆயினும் காங்கேயன்;
பொங்கு சரவணம் புண்ணியம் ஏற்றது,
      புதுமலர் சரவணத் தோற்றம்;

மங்கை கார்த்திகைப் பெண்டிர் காத்தனர்;
    மற்றோர் பெயரே கார்த்திகேயன்;
மங்கள அழகின் முழுமுதல் மேனி
     முருகன் என்ற மோகனன்

 செங்கனி வேண்டிச் சீரெலாம் சுற்றியும்
        செயமதை அண்ணன் பெற்றிட
பொங்கிய கோபம் புதுமலை நின்றது
         பழனி ஆண்டிக் கோலம்

எங்கள் இறைவா!மங்களச் செல்வா!
       தங்கத் தொட்டில் தாலேலோ!
தங்கும் கன்னியின் தண்ணளிக் கற்பகமே!
      தத்துவமே!தா லோ தாலேலோ.

                                            பொருள்
பிள்ளைத் தமிழின் மூன்றாம் பருவம் இது;பாட்டுடைத் தலைவனைக்
குழந்தை யாக்கித் தொட்டிலிட்டு உறங்கவைக்கத் தொட்டிலை ஆட்டியபடி,
அவன் பெருமைகளைப் பாடுதல்.
        கண நேரம் எம்பெருமான் நெற்றிக்கண் தீப்பொறியைத் தாங்கினாள் கங்கை.
அதனால் முருகனுக்குக் காங்கேயன் எனப்பெயர்;சரவணத்தில் தோன்றி வளர்ந்ததால்
சரவணன் எனப்பெயர்.
         கார்த்திகைப் பெண்கள் குழந்தையாம் குகனைப் பாலூட்டிச்சீராட்டி வளர்த்தனர்'
அதனால் கார்த்திகேயன்'என அழைக்கப் படுகிறான்.அழகே முருகு;முருகே அழகு
ஆதலின் அவன் முருகன் ஆகிறான்.
          நாரதர் அளித்த கனியை தந்தையிடமிருந்து பெறுவதற்காக நொடியில் பேருலகை
வலம் வந்தும்,தாய் தந்தையே உலகம்''என அவர்களைச் சுற்றி வந்து கனியைப் பெற்றான்
அண்ணன் கணபதி;அதனால் சினந்த முருகன் தனியே ஆண்டியாய்க் கோலம் கொண்டான்
பழனியில்
         இத்தனைச் சிறப்புகள் வாய்ந்த எங்கள் இறைவனே!நன்மையின் நாயகனே!
தங்கத் தொட்டிலில் படுத்துறங்கு;தாலேலோ!
           கன்னியாகுடியில் அடியவர்க்கு அருளை வழங்கிடத் தங்கிய கற்பகமே!
தத்துவமே!தாலோ !தாலேலோ! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக