ஞாயிறு, 29 நவம்பர், 2015

சப்பாணிப்பருவம்--9

 அடியவர் தொழுதலால் சிவந்தநல் அடிகளும்,
       அவரளி மலர்களால் அதில்மறை விரல்களும்
அவரவர் மனமதை அகன்றிடாக் கால்களும்,
      அழகெனக் கழலணி அணிந்திடு கந்தனே!

அரையதில் அனையவள் அணிவித்த அரைஞாணும்
   அகலமாய்க் கரையுடை இடையணி வெண்பட்டும்,
அதுமறை அலர்புனை அவந்தியின் செம்பட்டும்,
    அமையுடை அகமகிழ் அருளிடு கந்தனே!

அகன்றமார் பினில்பதக் கமும்ஒளிர் கருணையும்,
    அணைமலர் இருதளிர் அருஞ்சுக அனுபவமும்,
அனற்பணி நறுவேலும்,மேலுடையும் தாங்குதோளும்
   அடுக்கடுக் குழையணி அஞ்செவி உடையோனே!

அருள்விழி,மறையுடைத் திருவாய்,மணிமுடி
    அணிந்தவா!சப்பாணி கொட்டி அருளே!
அனல்தவம் அமர்தவம் அனைத்தையும் கடைபிடி
   அருங்கன்னி ஆறுமுகா!கொட்டுக சப்பாணி!

                                            பொருள்
  அடியவர்கள் இடைவிடாது தொட்டுத் தொட்டுத் தொழுகின்ற காரணத்தால் செம்மையான
பாதங்களும்,இடைவிடாது பூசனை புரிவதால் குவிந்த மலை போன்ற மலர்க்கூட்டத்தில்
மறைந்து காட்சி தரும் விரல்களும்,எப்பொழுதும் இறைவனே!முருகா!எனக் கட்டிக்கொண்டு
போற்றும் அடியவர் மனம் விட்டு அகலாத கால்களும்,கழல் அணிந்த அழகுக் கால்களும்
கொண்ட முருகனே!
        அன்னை கல்யாணி அம்மை அன்புடன் அணிவித்த அரை ஞாண் அணிந்த இடுப்பும்,
அகலக் கரைகொண்ட வெண்பட்டு வேஷ்டி அணிந்த அழகும்,வேன்பட்டை மறைத்தபடி அதன்மேல் அணிந்த அவந்தி நாட்டில் நெய்யப்பட்ட செம்பட்டும்,அமைந்த உடையாய் மகிழ்வுடன் விளங்கும்
கந்தனே!
          அகன்ற மார்பினில்வெளியே  பதக்கமும் உள்ளே கருணையும் ,
வள்ளி,தெய்வயானை என்னும் இருமலர்கள் சாய்ந்து அனுபவிக்கும் சுகமும் கொண்டது;
வீரப்பணி ஆற்றும் வேலும்,பட்டுத்துண்டும் அணிந்த செழும் தோள்களும் அடுக்கிய பற்பல
மணிகளால் ஆன தோடு அணிந்த காதும்,உடைய முருகனே!
        அருள்பொழியும் விழிகளும்,வேதமாய் விளங்கும் திருவாயும்,உடையவனே!
மணிமுடி அணிந்தவனே!உன் இரு கை கொட்டி ஒலி எழுப்பி அருள்வாய்!
நெருப்பின் நடுவே நின்று தவம் புரிவோரும்,அமர்ந்தபடிப் பல்லாண்டுகள் தவம் புரிவோரும்,
வாழ்கின்ற கன்னியாகுடியில் வீற்றிருக்கும் சண்முகா!உன் இரு கை கொட்டி ஒலி
எழுப்பி அருள்வாய்!

                                                                 விளக்கம்
அனையவள் .....அன்னை என்பதன் இடைக்குறை
அலர்புனை ----வேலைப்பாடுகள் அமைந்த 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக