சனி, 28 நவம்பர், 2015

சப்பாணிப்பருவம்--8

 சுழிவைகைச் சிலிர்த்தோடும் ஸ்வர்ண மலைக்கூடம்
     சுந்தரத் தெய்வயானை கரமுறு பரங்குன்றா!
சுழல்மனத் தனிச்சின கனிச்சுவை கிட்டாத
   சுடரணி வெறுத்திடு பரதேசி  ஆண்டியே!

விழித்திடு மறையறி சிறைப்படு குறையாலே
   விழிப்பசிமழுச்சிவன் தொழுதிடு சுவாமி நாதா!
விழைச்சுக வீணவா அரக்கரை வீழ்த்தியே
     வியனிரு பறவைகள் விரும்பிடு செந்தூரா!

மழைக்குழை மலர்க்கணாள் மணத்தினை நாடியே
    மலைத்திருத் தணிகையில் மனமுறை முருகோனே!
மளையிருள் குகைச்சிலை மதிமயக் குறுமலை
   மரப்பழம் உதிரிடம் அருள்தரு கிழவனே!

வழியிது வரம்பெற வணங்கிடு வளமகன்
     வரந்தரு பரமனே!கொட்டுக சப்பாணி!
வழிமறை வளப்பயிர் வரப்புடை கனிநகர்
    வளவனே!சப்பாணி கொட்டி அருளே!

                               பொருள்
வைகை ஆற்றின் கரையில் விளங்கும் மலை;அங்கு தெய்வயானையை மணந்து
காட்சி தரும் திருப்பரங்குன்றனே!அக்கனி எனக்கில்லையா ?எனச்சினந்து,தனியே
சுகபோகங்களை வெறுத்து ஆண்டியாய் நிற்கும் பழனி மலையானே!
        பிரணவப் பொருள் தெரியாமல் விழித்த நான்முகனைச் சிறையில் அடைத்திட,
அப்பொருள் உபதேசம் வேண்டித் தந்தையாம் சிவபெருமான் வேண்டிட,உபதேசித்த
சுவாமி நாதனே!வீண் கர்வம்,ஆசை கொண்ட அரக்கர்களை அழித்தும்,சூரனாம் மயிலையும்,சேவலையும் ஏற்று விளங்கும் திருச்செந்தூரா!
      கருங்கூந்தலும்,மலர் போன்ற கன்னையும்கொண்ட வள்ளியை மண்ணாக விரும்பி
அமர்ந்த திருத்தணிகை மலையோனே!இருளும்,குகைகளும் நிறைந்த அச்சம் தரும்
மலையில்,மரங்கள் பழங்களை உதிர்க்கும் மலையில் தங்கி நிற்கும் முருகனே!
      இவ்வழி சென்றால் கன்னி நகரிலே வரம் தரும் வள்ளல் உள்ளான்;வணங்கி வரம் பெறுங்கள்;
வரம்தரும் வள்ளலே!உன் இரு கை கொட்டி ஒலி எழுப்பி அருள்வாய்!
வளப்பயிர் வழிமறைக்கும் வரப்புடை வயல்கள் உடைய கன்னியாகுடியின்
வள்ளலே!உன் இரு கை கொட்டி ஒலி எழுப்பி அருள்வாய்.

                                              விளக்கம்
ஸ்வர்ணமலை ===பொன் மலை
இரு பறவைகள்----சேவலும்,மயிலும்
கனி நகர் ---கன்னி நகர் என்பதன் இடைக்குறை

















/
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக