வெள்ளி, 20 நவம்பர், 2015

தாலப்பருவம்--8

நதியணி சடைமுடி நலந்தரு நிலவொளி
    நறுவிடம் நடுங்கிடச் சிலையடி மலர்த்தலை
நிசிநடம் நிணப்பிணம் சுடுமிடம் நிலைத்தவன்
   நிகரிலா அருளினால் உதித்தநல் நிமலனே!

உதித்திடும் முழுமதி உரைத்திடும் செழுமுகம்
     உதித்ததோர் இருள்தினம் அருள்நிலா செழுங்குழை
    உணர்ந்திடு முனிவரின் உளத்தமர் தலைமகள்
      உவப்பினில் உலகினில்  அவதரி மழலையே!

துதித்திடும் அடியவர் துயர்களை செயலவன்
   துணையென அழைத்ததும் தினைப்புனம் விழைந்தவன்
துவண்டிடும் அமரருக் கசுரனை அழித்தவன்
   துதிக்கையும்,நெடுஞ்செவி யுமுடையோன் இளவலே!

கதியவன் பதியவன் மனையவள் கணபதி
   கனியருள் குமரனே!தாலேலோ!தாலேலோ!
கழல்புகழ் கனிநகர் தனிலுறை அறுமுகா!
   கலைநிறை தலைவனே!தாலோ!தாலேலோ!

                                                 பொருள்
 கங்கையை அணிந்த சடைமுடியும்,விளங்கும் மூன்றாம் பிறைநிலவும்,பாம்பும்
அஞ்சி ஒடுங்கும்படி வில்லடியாம் மலர் பொழிந்த  தலையை உடையவன்;நள்ளிரவில் சுடுகாட்டில் நடனம் ஆடுபவன்;அப்படிப்பட்ட சிவனின் அருளினால் தோன்றிய தன்றலே!
     முழுமதி போல் விளங்கும் செழுமையான முகத்தை உடையவள்;அமாவாசை அன்று
அபிராமி பட்டருக்காக வானத்தே ஒளிரச்செய்த அருள் நிலவாக மாறிய குழையை அணிந்தவள்;
எல்லாம் உணர்ந்த முனிவர்தம் உள்ளத்து உறைபவள்;அப்படிப்பட்ட அன்னை கல்யாணியின்
மகிழ்ச்சியில் அவதரித்த குழந்தையே!
    தன்னைத் துதிப்போர் துயரங்களைப் போக்குபவன்;வள்ளியை மணக்க அண்ணனே!
உதவுவாய்;;என்று தம்பி வேண்டியதும் ஓடோடி வந்தவன்;விண்ணவர் துன்பம் போக்கக்
கஜமுகாசுரனை அழித்தவன்;துதிக்கையும்,நீண்ட காதுகளையும் உடையவன்;அந்த
விநாயகனின் தம்பியே!
        உலகத்தின் கதியாகவும்,பதியாகவும் விளங்குபவன்,அவனின் மனையாள் கல்யாணி அம்மை,
கணபதி இம்மூவரின் அருளான குமரனே!தாலோ!தாலேலோ!
உனது காலடிகளைப் புகழும் கன்னியாகுடியில் எழுந்தருளியிருக்கும் ஆறுமுகா!அறுபத்துநான்கு கலைகளும் நிறைந்து விளங்கும் அறிஞனே!தாலோ!தாலேலோ!

                                                            விளக்கம்
நறுவிடம் ==ஆகுபெயராய்  பாம்பைக் குறித்தது
இருள்தினம் =அமாவாசை

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக