புதன், 11 நவம்பர், 2015

செங்கீரைப்பருவம் --9

சிவனவன் மனையகம் மகிழ்ந்திட வந்தனன்;
    சரவணம்  கரங்களில் எடுத்தனன் '
சிலையவள் அணைமகன் அமுதினைப் பருகிடச்
    செழுமுலை மறையென அருளினள்;

நவமலை நனைபுயல் நயக்கடல் நலுங்கிட
      நறுமுகை நிகழ்விளை யாடலில்
தவப்பயன் இரக்கமே;தவிர்த்திடு அவச்செயல்;
     நனைமனக் கருணையை அருளினள் ;

குவலயம் குலைபயம் அளித்திடு அரக்கனைக்
    களையெடு பயிரருள் நினைகுகன்
புவனமே!விடைகொடு;படையொடு புறப்படப்
   புனிதவேல் போர்ப்படை அருளினள்;

செவலொடு மயிலுமே செயமெனக் கணித்தவா!
        செங்கீரை ஆடி அருளே!
சிவக்கனி நலப்பதி செழுந்தமிழ்க் குமரனே!
         செங்கீரை ஆடி அருளே.

                                          பொருள்
     சரவணப் பொய்கையிலே தவழ்ந்த தன் செல்வத்தைக் காண,எம்பெருமான்
சிவனும்,பார்வதியும் வந்தனர்;குழந்தையைக் கையால் எடுத்துப் பார்வதியிடம்
தந்தார் சிவன்;அன்னையோ,ஆறுமுகத்தையும் அணைத்து ,ஒருமுகமாக்கி,உச்சிமுகர்ந்து
பொங்கும் அமுதமாம் தன் முலைப்பால் ஊட்டினாள் .
    குழந்தையாய் விளயாட்டயர்ந்த வித்தகன்,மலைகளை ,கடல்களை,திசைகளை
கோள்களை,மாற்றியும்,குறித்தும்,கூட்டியும் விளையாடினான்;அவ்விளையாட்டைப்
பார்த்து மகிழ்ந்த அன்னை யாருக்கும் தீங்கு செய்யாத மனத்தையும்,எல்லோருக்கும்
இரங்கும்  கருணையையும் அவனுக்கு வழங்கினாள் ;
       உலகை ஆட்டிப் படைத்து,அனைவரையும் அடக்கி ஆண்டு,அஞ்சி அஞ்சி வாழும்
மனத் துயர் தந்த அரக்கனாம் சூரனை அழிக்கப் புறப்பட்டான் குகன்;அப்பொழுது,அன்னை கல்யாணி
தவத்தால் தான் பெற்ற மகனுக்குத் தவமிருந்து தானடைந்த வேற்படையை வழங்கினாள் .
       போரிலே வென்று,சேவலாய்,மயிலாய்ச் சூரனை ஏற்று அருள் தந்த வெற்றி வீரனே!
செங்கீரை ஆடி அருள்வாய்!
   சிவனின் ஊராம் கன்னியாகுடியில் வாழும் செந்தமிழ்க் குமரா!செங்கீரை ஆடி அருள்வாய்.

                                                               விளக்கம்
அன்னையிடம் பருகிய அமுதப் பால் ஆறுமுகத்தின் அறிவார்ந்த மறைநூல் புலமைக்குச்
சான்று.கருணையும்,வீரமும் சூரனை வென்றது வீரம்;அவனுக்கு அபயம் கொடுத்து,கொடியாய்,
ஊர்தியாய் ஏற்றது கருணைக்கும் சான்று.

நறுமுகை......அன்மொழியாய் முருகனைக் குறித்தது.
செவலொடு .......குறுக்கல் விகாரம் எதுகை மோனை நோக்கி வந்தது.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக