புதன், 11 நவம்பர், 2015

செங்கீரைப்பருவம்--10

என்மகள் உன்பரிசு ஏற்றிடு எனக்கேட்டு,
      இயைந்து வந்த இந்திரனும்,
பொன்மகள் காணப் புதுத்தினை புறப்படு
     போற்றி நிற்கும் நாரதரும்,

விண்ணகம் காத்த வியன்வேலே நீவாழ்
      வாழ்த்த வந்த திருமாலும்,
பண்ணறி பிரணவம் பதத்தொடு பெற்றுயர்
      பெற்றதைப் போற்றிடப் பிரமனும்,

முன்னவ!மூதுரை,குருவாய் அருள்வாய்!
         மலரடி வணங்கும் முனிவரும்,
கன்னலே!கலியுகக் கடவுளே!காத்திடு!
          கதறிடும் அடியவர் கூட்டமும்,

செந்தாள் சூழ்ந்து துதித்திடும் செவ்வேளே!
          செங்கீரை ஆடி அருளே.
செந்நெல் செவ்வயல் கன்னிவாழ் கற்பகமே!
           செங்கீரை ஆடி அருளே.

                           பொருள்
சூரனை வென்று எம்குலம் காத்தவனே!இதோ!என்மகள் தெய்வயானை;உன்
வெற்றிக்கு நாங்கள் தரும் பரிசு;ஏற்றுக்கொள்ள வேண்டும்''என இந்திரன் ஒருபுறம்
நின்று வேண்டவும்,முருகா!உன்னை நம்பிக் கானகத்தில் தினைப்புனம் காவல்
காத்துவரும் வள்ளியைக் காணப் புறப்படு ''எனக்  கூறவந்த நாரதர் ஒருபுறம்,
      மருகா 1விண்ணகம் காத்த உன் வீரம் போற்றற்குரியது''நீ வாழ்க''என வாழ்த்த
வந்த திருமால் ஒருபுறமும்,ஆணவத்தால் அறியாத பிரணவத்தின் பொருளுணர்த்தி,
படைப்புத் தொழிலை மீண்டும் வழங்கிய ஐயனே!எனப் போற்றவந்த பிரமன்
ஒருபுறமும்,
      தந்தைக்கும்,அகத்தியனுக்கும் உபதேசித்த அண்ணலே!எங்களுக்கும் உன்
வாயால் உப்தேசிப்பாய்!''என வேண்டவந்த முனிவர் கூட்டம் ஒருபுறமும்,
கலியுகக் கண்கண்ட தெய்வமே!எங்களைக் காப்பாற்று''எனக் கதறி ஓலமிடும்
பக்தர்கள் ஒருபுறமும்
         நின்று  தாமரைப் பாதங்களைப் போற்றும் செவ்வேளே!செங்கீரை ஆடி அருள்வாய்.
செந்நெல் விளையும் நன்னிலங்கள் வாய்ந்த கன்னியாகுடியில் வீற்றிருக்கும்
கற்பகமே!செங்கீரை ஆடி அருள்வாய்.

                                         விளக்கம்
கற்பகமே!......என அழைத்ததால் வேண்டுவார் வேண்டுவன வழங்கும் முருகனின்
வள்ளல் தன்மை விளக்கப் படுகிறது.
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக