திங்கள், 9 நவம்பர், 2015

செங்கீரைப்பருவம்--8

விழிமான் வியந்து விளங்கும் அழகால்
             விளையா டவந்தே
விரிவாய் விரைந்து சிரிப்பால் கவர்ந்த
               விமலன் நினைந்து,

அழிநாள் வருமுன் அகத்தில் அமர்த்தி,
                அதுவே கடவுள்
அணைந்தால் கிடைக்கும் அருஞ்சீ ரடியை
                 அடையும்  முனிவர்

விழியில் கருணை;விளக்கச் சுடரே
             விதியால் விளைந்த
விசனம் களைக;வசனம் அருள்க;
              விரைவர் இருவர்,

செழுமை வரங்கள் அளிக்கும் குகனே!
                     செங்கோ  செங்கீரை.
பழமைக் கனியூர் புதுமை முருகா!
                       செங்கோ செங்கீரை.

                                பொருள்
   ஆடிவரும் அரம்பையர் ஆரணங்குகள் அழகே உருவாய் ஓடியாடி விளையாடுகின்றனர்;
அவர்களின் மனமும் கண்ணும் உன்னை நாடுகிறது;உன்னையே நினைந்த அவர்களும்,
      இறுதி நாள்  இயமனின் தூதுவர் வந்து துயருறுத்தும் முன்னரே,ஆறுமுகா!உன்னை
மனத்தில் நிறுத்தி,நீயே கடவுள்;நீயே உலகம்; என்றே போற்றினால் கிடைக்கும் உன் பாதநிழல்''எனக் கருதி  வழிபடும் முனிவர்,
         கருணைகொண்ட கண் களும்,விளக்கச் சுடர் போன்ற முகமும்,உடையவரே!விதியால்
உருவான இப்பிறப்பு என்னும் துயரம் போக்கி நல்லருள் அளிக்க ''என முனிவர்களும்.
விதியால் உன்னைக் கண்டு,காதலுற்ற எமது துன்பம் போக்கி,ஏற்றோம் உம்மைஇ''என அருள்
புரிக''என தேவகுலப் பெண்களும். போற்றி,வேண்டி வணங்குவர்.
         இவர்களுக்கும்,இன்னும் பற்பலர் அடியவர்களுக்கும் மனம் விரும்பும் வரங்கள் அளிக்கும்
குகனே!செங்கீரை ஆடி அருள்வாய்.   பழமை வாய்ந்த கன்னியாகுடியில் புதுமையாய் விளங்கும்
முருகா!செங்கீரை ஆடி அருள்வாய்.

                                                  விளக்கம்
விசனம்==துயர்
               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக