செவ்வாய், 17 நவம்பர், 2015

தாலப்பருவம்==6

உண்ணா  நோன்பில் உளத்து ஒருமையில்
     உடலெலாம் அலகிட்டு உயர்த்திடும் காவடியில்,
உன்மலை  உருளங்கச் சுற்றில் ,உறுதவத்தில்
     உன்கருணை பெறுவோர் போற்றும் குகனே!

பண்ணுடைப் பாடலில் பைந்தமிழ்க் கவிதையில்
    பவித்திர மறையில்,பைங்கழல் பணிந்து,
பண்ணிடும் பூசையில்.பலகலை போற்றலில்
    பயனைப் பெறுவோர் புகழ்ந்திடும் புண்ணியா!

விண்தொடு கோபுரம்,விமான மேல்தளம்
   விரிவுடைப் பிரகாரம் வெற்றிக் கொடிமரம்
வேதநெறிக் கருவறை,வியத்தகு மண்டபங்கள்
   வேண்டியோர் படைத்துப் போற்றும் வித்தகா!

மண்ணைக் காத்திட  மலர்ந்த மழலையே!
       மதியுறு ஞான பண்டிதா!தாலேலோ!
கண்ணாய்ப் பொன்னாய்க் கனியாய்த் திகழும்
        கன்னிநகர்க் கற்பகமே!தாலோ!தாலேலோ!

                                            பொருள்
உண்ணா நோன்பிருந்து,உடலை வருத்தி உன் நினைவெனும் ஒன்றையே கொண்டுள்ளோர்
உடலெல்லாம் அலகு குத்திக் காவடி எடுப்போர்,உன்மலை,உன்கோயில்,அங்கப் பிரதக்ஷணம்
வருவோர்,உன் கருணையைப் பெறுவோர்,உன் கருணை பெற்றபின் போற்றிப் புகழும்
குகனே!
    பாடல் பாடியும் பைந்தமிழ்க் கவி இயற்றியும்,வேதம் ஓதியும்,பைங்கழல் பணிந்து பூசனை
பண்ணியும்,பலப்பல கலைகளால் உன்னைப் போற்றியும்,வழிபட்டுப் பயன் பெற்றோர்
புகழ்ந்திடும் புண்ணியனே!
        வானைத் தொடும் அளவு உயர்ந்த கோபுரங்களும்,விமானம் அமைந்த மேல் தளங்களும்,
விரிவான பிரகாரங்களும் கொடிமரம்,கருவறை,அர்த்தமண்டபம்,மகாமண்டபம் போன்றன
அமைத்து எழுப்பிய கோயில்களைப் படைத்தோர் உன்னைப் போற்றும் வழிகண்டோர்
போற்றும் வித்தகனே!
         உலகைக் காத்திட வந்த மழலையே!தந்தைக்கே உபதேசம் வழங்கிய ஞான பண்டிதா!தாலேலோ!
கண்ணாகவும்,பொன்னாகவும்,கனியாகவும் விளங்கும் கன்னியாகுடி நகரின் கற்பகமே!தாலோ!
தாலேலோ.
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக