வியாழன், 26 நவம்பர், 2015

சப்பாணிப்பருவம்--4

கலகல எனஒலி கிங்கிணித்  தண்டை
     கழலின் நழுவிய மணிமிளிர் கொலுசு
கண்ணடி தவிர்த்திடக் கருநிறக் கயிறு
    கண்ணில் அகலாக் காலழகுக் கந்தா!

பலபல படைகள் பாங்குடன் ஏற்றும்,
   பவித்திரப்  பரமனுக்குப் பூஜை புரிந்தும்,
பங்கய மங்கையர் இருவர் அணைந்தும்,
    பணிவோர்க் கருளியும் விளங்குகரக் கந்தா!

சலசல சங்கைகள் போக்கும் பார்வை;
   சமரில் பகைவர் அஞ்சும் பார்வை;
செம்மலர் இருவர்கா தலுறும் பார்வைச்
   செங்கருணைச் செங்கண் செங்கன்னிக் கந்தா!

அலைஅலை பவளம் ஆறெலாம் விளையூர்
     ஆறுமுகா!சப்பாணி கொட்டி அருளே!
கலையும் காப்பியமும் கனியும் கன்னிச்
    சண்முகா!சப்பாணி கொட்டி அருளே!

                                    பொருள்
    கிங்கிணி ஓசை எழுப்பும் தண்டையும் ,கழன்று விழுமோ என்றையப் படும்
அளவு சற்றே பெரிதாயும்,நவரத்தினங்கள் பதித்தும் விளங்கும் கொலுசும்,
கண் திருஷ்டி படாமல் காக்கும் கருநிறப் பட்டுக்கயிறும் கொண்டு விளங்கும் கால்
அழகினைக் காணக் கண் கோடிவேண்டும்'அழகுடைக் கந்தா!
        வில்,வேல்,குலிசம் போன்ற படைகளைத் தாங்கி உள்ள வீரமும்,பவித்திரனான
தந்தையாம் சிவபெருமானுக்கு நாள் தவறாது  பூஜை ஆற்றும் பவ்ய அழகும்,
இருபக்கத்திலும் இருக்கும் வள்ளி,தெய்வயானை ஆகிய இருவரையும் அணைந்து
நிற்கும் அன்புக் காட்சியும்,அடியவர்க்கு அருள் காட்டும் இறக்க மேம்பாடும் கொண்டு
விளங்கும் கரங்களைக் கொண்ட கந்தா!
    துயருறுத்தும் துன்பங்களை நீக்கும் அருட்பார்வை,போர்க்களத்தில் பகைவர் பார்த்து,
அஞ்சிநடுங்க வைக்கும் செந்தழல் பார்வை,படர்ந்த செங்கொடி இரண்டின் மீது செலுத்தும்
காதல் பார்வை,இப்படிச் செம்மைத் திறம் வாய்ந்த நோக்குடன் கன்னியாகுடியில்
வீற்றுள்ள கந்தனே!
           கடலிலே விளையும் பவளங்கள் ஆற்றினிலே விளையும் அற்புதம் நிறைந்த
கன்னி நகர் கந்தா!உன் இரு கை கொட்டி ஒலி எழுப்பி அருள் புரிவாய்!
கலை,காப்பியம் போன்றவைகளை உருவாக்கும் சான்றோர்கள் நிறைந்த கன்னியாகுடியில்
எழுந்தருளியுள்ள சண்முகா!உன் இரு கை கொட்டி ஒலி எழுப்பி அருள் புரிவாய்!

                                                             விளக்கம்
கலகல ----இரட்டைக் கிளவி
பங்கய மங்கையர் -----உவமைத்தொகை.வள்ளியைத் தேவசேனாவைக் குறிக்கிறது.
   
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக