புதன், 26 நவம்பர், 2025

திருத் தணிகைக்கோவை


                                           திருத்தணிகைக்கோவை.

                                                  கொளு 

காதல்  காப்பியம்   கடவுள் போற்றும்;

காப்பியக்      கதையிலும்    செல்லும்.

பொருள்;   திருத்தணிகைக்கோவை  என்ற  இக்காப்பியம்  தொடங்கும் 

முகத்தான் இப்பாடல்  காப்புச்செய்யுள்  போலவும், கதைத்தொடர்பான  

நிகழ்வாகவும் அமையும்.  

                              தோழி கூற்று .    

வாரண  மாமுகத்   தான்மலை   யுடைவடி   யுருவே 

பூரணப்பொலி    கும்பமே   தோரணப்   பூச்சிலை    வில்லே 

காரணா   கமத்துத்    தளிர்ப்பதம்!    சீரகத்     தணிகை

வீரனவன்    விரக    தாபம்    விரிவழி     காத்தருள் .

                                                            பொருள் 

      தோழி   கூற்றாக    அமைந்துள்ள  இப்பாடல்  தலைவிமீது   காதலுற்ற  

தலைவன்  பற்றிப் பாடவந்த  இந்த நூலைக்   காத்தருள்வாய்!  என  

விநாயகரிடம்   வேண்டும்   காப்புச் செய்யுளாகவும்,

         காதலினால்   வாடிவதங்கும்  தலைவன்  காதலை  ஏற்று, அவனது 

துயரைப்போக்கு!  எனத்   தலைவனிடம்  வேண்டும்  கூற்றாகவும் 

பாடப்படுகிறது.

                                       காப்பு 

யானை  முகத்தோனே! மலைபோன்ற  வடிவம்   உடையவனே! பொலிவுடைய 

நிறைகும்பம்  போன்று  மங்களமாய்   விளங்குபவனே! மலர்மாலைகளும் 

வில் படையும்  கொண்டவனே! சைவாகமங்களில்  சிறப்புடைய  காரணாகமம் 

போற்றும்  சேவடி உடையவனே!சீர்மை  மிக்க  திருத்தணிகையில் 

வீற்றிருக்கும் வீரமுருகனின்  ஏற்றமிகு   காதல்  பற்றிய  திருத்தணிகைக் 

கோவை   என்ற   இந்நூல்  வழிவழி  சிறக்க  அருள்  புரிவாய்!  என 

விநாயகப்பெருமானை   வேண்ண்டுகிறார்   ஆசிரியர்.

                               மற்றொரு பொருள்.

 தோழி   தலைவியின்   காதல்  நோய்த் துயரை த்    தலைவனிடம்  

எடுத்துரைத்து  அவளை ஏற்று  அருள்புரியுமாறு  வேண்டுதல்.

    கச்சை  யால்  வருத்திக்கட்டப்பட்ட பெரும் முலையின் முகநுனியும்,

மலைபோல் பருத்த  தன்மையும் அழகுத தோற்றமும் மிக்க  பூரண  

கும்பம்போன்ற பொலிவும்  பெற்ற மார்பகத்தாள் ;பூக்களால்  தொடுக்கப்பட்ட 

வில்போன்ற  புருவம்  கொண்டவள்,  கார்காலக்குளிர்ப்பதத்தால்   மலர்ந்த 

மலர்களின்   இதழ் போன்ற மென்மையான  பாதங்களைக்  கொண்டவள்;

சீர்மை   கொண்ட   திருத்தணிகையில் வாழும் வீரனாகிய   உன்மீது  மையல் 

உற்றாள் ; அதனை  அறிந்த  நீயும்  அவள்மீது  அன்பு   செலுத்துவாய்! அவளது 

காதல்  நோயை நீக்குவாய்! என்று  தோழி  தலைவனிடம்   வேண்டுகிறாள்.

விளக்கம்.  வாரண  மாமுகம், என்றும்  வார்  அணமாமுகம்  என்றும்  

பிரித்துப்பொருள்  கொள்க. 

வடி -அழகு .

காரணாகமம்-  சைவாகமங்களில்  ஒன்று.

கார்+  அணாகமம் -  கார்காலத்தில்  குளிர்ந்து வந்து தோன்றும்.

                                            இயற்கைப்புணர்ச்சி 

                                                       கொளு 

                       வல்லிநிகர்     மெல்லியலை

                      வில்வீரன்      கண்டனன்;

பொருள் ;  கொடிபோன்ற இடையையுடைய  மென்மையான தலைமகளை 

வில்லேந்தியவீரன்  ஊழ்வினையால்  ஒருபுறத்தே  கண்டான்.

                                                பாடல் -1

                                                   காட்சி .

திருவரு    ளாலே          நறும்பூ      நனிகனி    மருமதி   

நறுந்தினைப்    புனைகாண்    திருத்தணிகை     முருகன்    போலப்  

பெருவனத்     துச்சா    ரலிடை  விரிதோகை    வியந்துற்று,

உருவவிண்    ணின்வியன்    மாதோ!   அருட்காதல்    விருந்தாமோ!

பொருள்...       இயற்கைப்புணர்ச்சி 

  தமிழ்  இலக்கியம்  மென்மையாகிய  காதலை  வெளிப்படுத்தும்  துறை 

அகப்பொருள்  ஆகும். அதன் அமைப்பு  களவு,கற்பு  என இருவகியால் 

விளக்கப்படும்.ஒரு தலைவனும்,தலைவியும்  எதிர்பாராமல், சந்தித்து,

தமது  மனநிலையில்   ஏற்படும்   மாற்றத்தால்  அன்பு  கொள்ளுதல் 

காதல்  நிகழ்வினைத்  தோற்றுவித்தல்  ஊழ்வினையால்   அமையும்;

அதுவே   இயற்கைப்புணர்ச்சி  ஆகும். யாரும்  அறியாமல்  பிறருளுக்குத் 

தெரியாமல்  அவரிருவர்  மனத்தொடர்பால்  உருவாவாவது  களவியல் 

எனப்படும். அடுத்த நிலை கற்பியல்  இருவரும்   திருமணம்   செய்துகொண்டு 

இல்லறவாழ்வில்  வாழமுற்படுதல்  ஆகும்.

      அவ்விரண்டில் முதலாவதான  களவியலில்   முதற்படி   இயற்கைப்புணர்ச்சி 

ஆகும்.யாரும்   அடையாளம்   காட்டாமல் , யாரென்று  தெரியாமல், 

எவ்விதக்காரணமும்  இல்லாமல், இயல்பாக,  ஊழ்வினைத்   தொடர்பால் 

ஏற்படும்  தலைவன்,தலைவி   சந்திப்பு , அவர்தம்   மனத்தே    தோன்றும் 

காதலுணர்வு,இயற்கைப்புணர்ச்சியாகும்,இருவரும் மனத்தால்  இணைவதே 

புணர்ச்சி  எனப்படும். இயல்பாக  அமைவதால்   இயற்கைப்புணர்ச்சி  ஆயிற்று.

இது  பதினெட்டுத்   துறைகளைக்கொண்டது.முதல்  துறை   காட்சி   ஆகும்.

          தன்னுடைய   தோழர்களோடு  வேட்டையாட,  அல்லது   வேறேதேனும் 

தொழிலாற்ற  வெகுதொலைவு செல்லும்   தலைவன்,  ஊழ்வினையால் 

அவர்களை விட்டுப் பிரிந்துவிடுவான்; பிரிந்தவன்  தனிவழியே  நடப்பான்.

    இதே   நிலையில் தலைவியும்   தனது   தோழியர்  கூட்டத்தோடு  வந்தவள் 

தோழியரைப்பிரிந்து  தனியளாய்   நடப்பாள்; அவ்வழி வந்த   தலைவன் 

தூரத்தே  அத்தலைவியைக்  காண்பான்;  அவ்வாறு   காணலே  களவின் 

முதற்படி   காட்சி  ஆகும்.

பாடலின்  பொருள்.........   வள்ளி மலைத்தினைப்புனத்திலே   ஊழ்வினையால் 

நறுமணம்  மிக்க மலர்போலும்,  இனிமைமிக்க   கனி போலும், மதிபோலும்,

வள்ளியம்மையைக்  கண்ட   முருகனாம்   வேடன்போல,

வேட்டை வேட்கை கொண்டு சென்ற  தலைவன்  அந்தப்பெரிய  வனச் 

சாரலிலே   தோகைவிரித்த   மயில்போலும், விண்ணிலிருந்து  வந்திறங்கிய 

தேவகுலப்பெண்போலவும்,  காதல் விருந்தாய்த்    தோன்றிய  அவ்வழகுப் 

பெண்ணைக்கண்டு   வியந்து நின்றான்.

 சொல்விளக்கம் ........   நறுமலர்---  மலரோ   வாடிவிடும்  வள்ளியோ என்றும் 

வாடாமலர் ;  நனிகனி---   கனியோ   அழுகிவிடும்   வள்ளியம்மையோ 

மாற்றமே   அடையாத  கனி; மருமதி ----  நிலவிற்கு  மரு .. குற்றம்   உண்டு;

வள்ளிக்கோ   கலைகளே  குறையாத  அழகுண்டு ;

விரிதோகை ----   வினைத்தொகை. முக்காலத்திலும்  மாறாத  அழகுடையவள் 

கலைவி.அருகாதல்------  பார்த்தவுடனேயே   மனத்தக்கதே  காதல்  

அரும்பியதைக்   குறிக்கின்றது.

                                                               பாடல்..2.

                                                              ஐயம்.

                                                                கொளு .

மலைநாடன்    அசைந்தாடும்  மனத்திலே 

கலைமானைக்    கண்டகாலை     ஐயுற்றது.

பொருள்........    கண்முன்   தோன்றிய  அழகுமானன்ன   தலைவியைக்  

கண்டதும்   வியந்து, யார் இது?  யார்  இது?   என   முடிவெடுக்க  மியூடியாமல்  

ஐயுற்று  நின்றான்.

                                                           பாடல் 

சரவணத்    துச்சமர்    கண்டு     சஞ்சலித்த    விண்ணரக்கர்,

கரங்குவித்த         தணிகையாய்க்      கண்ணெதிரே   கண்ட     காட்சி 

தரங்கத்      தளிரன்     னமோதான்!     தனிச்சோலை      நனிமயிலோ ?

திறங்கொள்ளேன்      தீங்காரிகைத்     தோற்றத்தால்    ஐயுறு     மனமே .

                                                             பொருள் 

  சரவணைத்தே   அவதரித்த  முருகன்   இளம்பிராயத்தில்   விளையாட்டாய் 

வியன்பெருமை    உணர்த்தும்   விதமாய்ச்    சமர்  புரிந்தான்; போர்  

தொடுப்பது   இந்திரனோ? திருமாலோ ? யார்  எனத்  தெரியாது,  அறியாது 

தாங்களும்  போரிட்டுத்   தோற்றோடினர்  தேவர்களும்,அரக்கர்களும்.

தமக்கு முன்னே   போரிடுவது   யார்  எனத்தெரியாது  ஐயுற்று  அவதியுற்ற 

வீரனாம்  தணிகையான்  வீரச்செயல்போன்று, 

    தலைவனும்   தனது  கண்முன்னே   தோன்றுவது அலைகளுக்கு  இடையே 

தவழ்ந்து செல்லும்  இளமைவாய்ந்த   அன்னப்பறவையோ?  

வளச்சோலையிலே   தோகை விரித்து     ஆடும்   அழகுமயிலோ? என்னால் 

உணரமுடியவில்லை  இந்த   அழகுப்பெண்ணின்  தோற்றத்தை?  என 

ஐயுற்று  மன  நிலை  மாற்றம் உற்றான்;  

விளக்கம்......... சரவணத்து -----  சிவபெருமானின்  நெற்றிக்கண்  தீப்பொறியால்

சரவனத்தில்  அவதரித்த முருகனின்  இளம்பிராயத்தில் 

விண்ணரக்கர்-----  விண்ணவர்களும்,  அரக்கர்களும்,

தணிகையாய் ------   திருத்தணிகையில்   வீற்றிருக்கும்   முருகனாய் 

தனிச்சோலை -----மற்றவற்றிலிருந்து   வேறுபட்டு   அழகாய்  விளங்கும் 

சோலை.

                                                        பாடல்..3

                                                       தெளிதல் .

                                                           கொளு 

அழகால்     பண்பால்   அழகியவள்    அருங்குணம்

அறிந்து    தெளிந்து  மகிழ்ந்தது,

பொருள்;-   அழகமைந்த  பேச்சால், நன்மேனிப்பண்பால்   அழகுடைச் 

செல்வியிவள்  எனத்  தெளிந்து  மகிழ்வுற்றான்  தலைவன்.

                                                          பாடல் 

மான்மகள்       மணம்கொண்ட     மாமணிக்     குமரன்      தணிகைத் 

தேன்துளிர்     காடு,      தமிழ்முகம்          வாய்முத்து        சிந்தியதால் ,

மேனி    மென்னுடல்      மின்னழகு      வெளிப்பாட்டால்      தெளிந்து,

ஊனுருகி,     உளத்து      மகிழ்ந்து        கோனவன்      குளிர்ந்தான் . 

                                                           பொருள் 

மான்   ஈன்ற  மகளான,  வள்ளிப்பிராட்டியை   விரும்பி,வேண்டி  மணம் 

கொண்டவனாகிய   மணியொளிச்  சுடர் முருகன்  அமர்ந்திருக்கும் 

தணிகை    மலையின்,

   தேன்  ஒழுகும்  மலர்மரங்கள்   நிறைந்த சோலையிலே  அத்தலைவன் 

கண்ட  அழகு,அன்னமோ ,அருமயிலோ  என  ஐயுற்ற   தலைவன்,

அவ்வழகின்   வாயானது,  இனிமைமிக்க  தமிழ்  மொழியை   அழகாகப் 

பேசும் வாய்; முத்துச்சிதறல் போல்  தோன்றுவதாலும் , அத்தலைவியின் 

மென்மையான  மேனியின்  நளினமும், அழகும்  வெளிப்பட்டதாலும் ,

இவள்  அன்னமன்று;அருமயிலன்று;  என்மனம்  கவர்ந்த  அழகு 

தேவதையாம்   இனிய  தமிழ்மகள்  என்று   ஐயம்   தீர்ந்து,உள்ளம் 

மகிழ்ந்தான்  தலைவன்.

விளக்கம்;-        மான் மகள் ......இதனை   மானின்  வயிற்றில்   உதித்த  

                                                            திருமாலின்   மகள் ;இலக்குமியே  மானாக 

                                                            உருக்கொண்டாள். என அறிக .  

                                                         4. பாடல் 

                                                          4.நயப்பு 

                                                            கொளு 

கனமுலை    கனியிதழ்    அணையிடை   அணங்கை 

மனமுடன்    சுவைத்திட    மனமே!     முடிவெடு.

பொருள்;-      ஐயம்    தீர்ந்து   அழகியை   மையல் மனதில்  கண்ட தலைவன்,

பருத்த முலையும் ,  இனிக்குமிதழும் ,  இன்பத்தைத்    தேக்கிவைத்துள்ள 

இடை யும் ,கொண்ட  இப்பெண்ணை  மனத்தோடு   ஒன்றிச்  சுவைத்திட

வேண்டும்;  மயங்கும்   மனமே  நயந்த  நீ   அவளை   நாடிடுவாய்!  என 

விரும்பி  உரைதான்.

                                                                 பாடல் 

முரண்ட   முலையழ     கும்,முனி     மாற்றும்   சிலையழகும்,

திரண்ட    சுவைப்பா     லிதழும்,   மருண்ட மையல்     மான்நோக்கும், 

முரணரக்    கமரம்     பிளந்த      முருகவேள்     தணிகை

பரண்வாழும்       பாங்கு     கண்டு     பற்றிடவே    பாசமுற்றனன் .

                                                         பொருள் 

   நன்மைக்கும்,  மறைநெறிக்கும்  மாறுபட்ட   சூரபன்மனை    அழித்திட 

மாமுருகன்  போரிட்டகாலை    அவன்  மாயப்போர்  புரிந்தான்;  கடல்நடுவே 

மா மரமாகி நின்றான்;  அவனை,   அம்மரத்தை இரண்டாகப்   பிறக்குமாறு 

தனது  வேலினை  ஏவினான்  முருகன்.  அவ்வேல்  அம்மரத்தை   இரண்டாகப் 

பிளந்தது.  அவ்வேலுடைய    முருகவேள்  வீற்றிருக்கும்   திருத்தணிகைச் 

சோலையிலே  தினைப்புனம்  காவல்காக்கும்   பரணில்  நிற்கும் தலைவியின் 

ஒன்றோடொன்று  போரிடும்  அளவில்  பருத்துப்பெருத்த   முலையழகும்,

மிகுந்த தவம்   இயற்றும்   முனிவர்களையும்   மாற்றி அமைத்திடும்  கண்களின் 

காவலாக  வளைந்து நிற்கும்  வில்போன்ற  புருவங்களும், காய்ச்சக்காய்ச்ச 

நன்கு  பொங்கித்   திரளும்  பாலின்  இனிய சுவைபோன்று   இனிக்கும் 

இதழ்களும்,   மயங்கி  மனக்காதலை  வெளிப்படுத்தும்  மானின்  கண்போன்ற 

கண்ணின்   பார்வையும்  கண்டேன்;  வியந்தேன்; அவளைப்   பற்றிட  

அணைத்திட    மனம்  நயந்தேன் "  எனத்   தலைவன்  தன்  மனத்திற்குக் 

கூறினான்.

விளக்கம்;- முரண்ட =   ஒன்றுக்கொன்று மாறுபட்ட 

திரண்ட  =  கொதிக்கும்  பால்   மேலும்மேலும்  காய்ந்து திரண்டு  மேலே  வருதல் 

பரண்=  தினைப்புனக்காவல்  பந்தல்  மேடை .

                                                               5. உட்கோள் .

                                                                       கொளு 

கண்ணுற்ற     காரிகையின்    கண்ணுரைத்த  

மறைக்கருத்தை     மன்னவன்    மனம்கொண்டது.

பொருள்;-    மனம்   கவர்ந்த   தலைவியின்  மனஓட்டமும்   தனக்கு 

மறையை(இரகசியத்தை)  உணர்த்துவதை  அவளின்   கண்ணிலே 

கண்டான்.

                                                                    பாடல்...5.

பார்க்கும்கால்     தலையைக்      குனிந்தும்,     பாராதகால்       தான்பார்த்தும் ,

சீர்க்காதல்      சிறகடிக்கும்     செங்கண்     களாம்செந்     தாமரை 

ஊர்மா     யக்கிரௌஞ்     சத்துணைத்       தாரகனை     வீழ்த்தியவேல் 

கார்புனம்      கருத்துரை      காத       லுணர்கடி      மனமே. 

                                                          பொருள் 

           ஊர்,உலகமெல்லாம்    தன்வயப்படுத்தும்,  மாயக்   கிரௌஞ்ச   

மலையைத்   துணையாகக்  கொண்ட  மாயத்தாரகனை   அன்னை அளித்த 

அரும்வேலால்   வீழ்த்திய முருகனது   தணிகை  மலை த்   தினைப்புனத்தில்,

அத்தலைவியைக்   கண்டேன்;  அவளோ  நான் பார்க்கும்பொழுது  தலை 

குனிவாள்;  நான்  பாராத   பொழுது   தான்   பார்த்து  மெல்ல   நகைப்பாள் ;

தனது   மனத்திலே   தோன்றிட்ட   காதலைத்    தனது  படபடக்கும்  

இமைகொண்ட    செந்தாமரைக்   கண்களால்  காதல்  கருத்தை  

உணர்த்தினாள் ;  தவிக்கும்   மனமே   மயங்காதே;  எனத்தலைவன் 

தலைவியின்   மனத்தை  உள்ளத்தில்   கொண்டான்.

விளக்கம்;-     சிறகடிக்கும்=  இமை   படபடக்கும்.

கார்புனம்=  குளிர்ந்த  தினைப்புனச்சோலை .

உரைகாதல் =   வினைத்தொகையாய்   முற்பிறவி,இப்பிறவி. வரும்பிறவி 

                                என  மூன்றையும்  உட்கொண்டது.

                                                            6.தெய்வத்தை  மகிழ்தல் .

                                                                   கொளு  

கண்டிடக்    காரிகையைக்     காலம்      கூட்டிற்று;

காலமாம்    குமரன்    காலடி    போற்றுவன் .

பொருள்;-  தணிகைச்    சோலையிலே  தவழும்   மதிமுகத்   தலைவியை,

எங்கிருந்தோ  வந்த  நான்  காணவும்,கண்டு   மகிழவும்   காலமே   வழி 

வகுத்தது.  அக்காலக்   கடவுளாகிய   தணிகைவாழ்  முருகனுக்குக்  

காலமெல்லாம்  தொண்டு புரிந்து சேவடி   போற்றுவேன்.  என  மகிழ்வில் 

தலைவன்  தனக்குள்   சொல்லிக்கொண்டான்.

                                                          பாடல்  6.

வாழ்த்தி     நான்வழி     படும்வள     முருகன்    தணிகையில் 

ஆழ்தவ    முனிவனுக்     குவர      மருள்சிவன்      போலப் 

பாழ்மனத்     தான்பற்     றியொளிர்    பசும்வாழ்வு    பளிச்சிட 

ஏழாம்       உலகும்      வியக்கும்      இயலிசை        நிறுத்தினான் .

                                        பொருள் 

    காலம்  காலமாய்  அடியேன்   மாறாத  பற்றுகொண்டு   முருகனை  

வழிபட்டு வருகிறேன்;    அம்முருகன்   வீற்றிருக்கும்    தணிகை   மலையில் .

தினைப்புனச்சோலையில்   நீண்டநெடுங்காலமாய் க்   கடுமையான   தவம் 

இருக்கும்  நல்லமுனிவனுக்குச்     சிவபெருமான்   காட்சிகொடுத்து  

 நல்வரங்கள்    அருளுமாப்போல  பாசப்பற்றால்     பாழடைந்த   மனத்தைக் 

கொண்ட  அடியேனை,நல்வழிப்படுத்த  இனிமையான  இல்லறவாழ்வு 

எனக்கமைய  ஏழு உலகத்திலும்  காணமுடியாத  . நல்லொழுக்கமிக்க 

தலைவி  என்று   வியந்து  அவர்கள்   போற்றக்கூடிய  இந்த   அழகே 

உருவான  பெண்ணை   என்  கண் முன்   நிறுத்தி, அருள்    காட்டி 

உள்ளான்; என்று   தான்கண்ட   அழகுப்பெண்ணைத்  தனக்குமுன் 

காண்பித்தது  முருகனே.என்று   மகிழ்ந்து  கூறினான்.

விளக்கம்;-     பாழ் மனத்தான் =  உலக   ஆசை, தீய பழக்கம் , 

இறைபோற்றாமை,   போன்ற   குணங்கள்   நிறைந்த   மனத்தை  உடைய நான்.

பசும்வாழ்வு =   நல்லகுணமும், அன்பு நோக்கமும், இயற்கைப்பற்றும்  கொண்ட 

                                நல்ல வாழ்க்கை 

இயலிசை =   இயல்பாகவே  புகழுடையவள்;  இயலும், இசையும் போன்றவள்; 

                                            7.    புணர்ச்சி  துணிதல் .   

                                                                கொளு 

இயலழகு    இடைக்கொடியை   நயந்து    கந்தருவ 

மணம்கொள்வேன்   மனம் துணிந்தான்   மறச்செம்மல் .

பொருள் ;-    இயற்கை  போன்று  அழகு பொலிய   விளங்கும், கொடியிடை 

உடைய  இப்பெண்ணைக்    கந்தர்வ மணமுறையில்  மணந்து  தழுவுவேன்'

என  மனம்  கொண்டான்  வீரம் மிக்க  தலைவன்.

                                                            7. பாடல் 

பேறுற்றார்    போற்றி     நிற்கும்   பெருந்தணிகைப்       பேராளனின் 

சீரூற்ற      செவ்வருளால்     காருற்ற     தோர்கவின்     நிலவைத் 

தேருற்ற      தேவ     மணத்திகழ்     மனத்திற     னிசைந்து,

ஊரூடல்   மலைக்கூடல்  மனம்நிறை    மகிழ்ச்சி     தானே  .

                                                      பொருள்  

   திருத்தணிகையில்   வீற்றிருக்கும்   முருகனைப்   போற்றி வழிபட்டுப் 

பேறு  பெற்றவர்கள்   அனைவரும்  அவனது  சேவடியை நாளும்  போற்றிக் 

கொண்டே  நிற்பார்கள்; அப்படிப்பட்ட  தணிகைப்  பிரான்,  திருக்கழலை 

அன்றாடம்  தொழுதுவரும்  அடியேனுக்கு   அவன்   அளித்த  நல்லருள்,

சீர்மை  மிக்க   அருள்;   செம்மைவாய்ந்த  நல்வாழவு  சிறக்கும்   அருள்; 

 அதனால்  குளிர்காலச்   சோலையிலே   தோன்றிய  நிலவைப்போன்ற 

முகம்கொண்ட   தலைவியைச்  சந்தித்தேன்; காதலுற்றேன்; முருகன் அருளால் 

அவளைக்     காந்தர்வம்   என்னும்  மணவகை      தழுவிட ,  முடிவுற்றேன்;

தலைவியின்   மனதையும்  பண்பையும்  நன்கறிந்ததால்,  அவளது, 

மருதநிலத்து ஊடலையும் ,  குறிஞ்சிநிலத்துக்    கூடலையும்  நன்கறிந்து,

சுவைத்து.  அவளோடு   கலந்து,  மனம்  நிறைந்த  காந்தர்வமணத்தை  

நிகழ்த்தி  இன்புறுவேன்"  என்று  தலைவன்   தனக்குள்   கூறிக் கொண்டான்.

விளக்கம்;-   பேறு  உற்றார் =   இறைவனாம்     முருகனால்  அடியவர்கட்கு 

அருளப்பெறும்  அருள் திறம்.

செவ்வருள் =  சீர்மை  கெழுமிய  அருள்.   இங்கு  பாட்டுடைத்தலைவனுக்கு 

மிகுந்த  கருணை கொண்ட   முருகன்  காதல் தலைவியை  முன்னிறுத்தியமை.

தலைவன்  கண்டது.

ஊரூடல்=    ஊர் என்பது   மருதநிலத்தைக்குறிக்கும். மருதநிலம்   ஊடலுக்கு 

உரியது. 

மலைக்கூடல் =  மலை  குறிஞ்சிநிலத்தைக்குறிக்கும் . குறிஞ்சி  புணர்தலுக்கு 

உரியது. 

                                                            8. கலவி  உரைத்தல் .

                                                                          கொளு 

தேன்சுவை,   உடலுயிர்,   எனவிணைந்து    பெற்றசுகம் 

வானினும்     வளத்ததே    வண்ணத்தாள்    அளியின்பம் .

பொருள்;--      பிரிக்கமுடியாத   தேனும்சுவையும் போலவும்,  உடலும்  உயிரும் 

போலவும், தலைவியோடு   நான் இணைந்து   பெற்ற   கலவியின்பம்  

 சொல்லில்  நிற்பதன்று; அழமுடையாள்   எனக்களித்த  இன்பம்  வானவர் 

பெறும்  இன்பத்திலும் மிக்கது. (  வானெனும்  முக்தி பெறுவதினும்  உயர்ந்தது;

என்று  தலைவியோடு   தான்கலந்த   கலவியின்பத்தைத்  தலைவன்  வியந்து 

கூறினான்.

                                                                பாடல்..8. 

வள்ளியை  வேட்டுணர்ந்த      வடிவேலன்   வந்த      தணிகை 

துள்ளியோடும்     கலைமானைத்    தொடர்ந்து      பற்றி  அணைத்து ,

பள்ளியறைப்     பசுஞ்சோலை     படுத்துற்ற       பேரின்      பம் தான் 

முள்ளில்      தவமுக்திச்      சுவைமுந்தி      வந்து   நிற்குதம்மா!

                                                         பொருள் 

   மலைநாட்டில்  வேட்டுவர் குலமங்கை   வள்ளியை  விரும்பிவந்து, காடுமலை 

கழனிசுற்றிக்    காதலிலே   திளைத்த  அழகுமுருகன்  ஆண்டருளும்  

மலைநாட்டில் ,   துள்ளிக்குதித்தோடும்   மான்போன்ற   தலைவியைப் 

பின்பற்றித்    தொடர்ந்து   சென்று, மொழிபேசி,  வழிகூறி, அணைத்தபடிப் 

மலர்களாலும்,  தழைகளாலும்  உருவான   இயற்கைப்   பள்ளியறையில் 

பயின்று,பகிர்ந்து,  பதிந்த  இன்பச்சுவையால்  யான்   பெற்ற  பேரின்பம் 

காட்டு வெய்யிலிலும், கடும்குளிரிலும், காற்றிலும்,  அசையாது,கலங்காது,

நெடுநாள்  கடுந்தவம்  இருந்து, முருகனைக்கண்டு,   அவனருளால் 

முக்திப்  பேரானந்தம்   பெறும்   முனிவனது   பேரானந்தத்தைப்  பின் 

தள்ளிவிட்டு,  முதலில்   வந்து   நிற்கும்  "யான்  சுவைத்த  இக்கலவி "

என்று   கலவியின்பத்தைப்  பெரும்பேறாக  மதித்துப்  பேசுகிறான்  தலைவன்.

விளக்கம்;--     கலைமான் -   ஆகுபெயரால்   அழகே உருவான   தலைவியைக் 

                             குறிக்கிறது.

                           முள்ளில்  தவம் -  கடுமை  வாய்ந்த   காட்டில் ,வெய்யில், மழை 

பாராது, அசையாது,அகலாது, ஒரே  இடத்தமர்ந்து  கடுந்தவம்  புரிதல். முள்ளில் 

மேல்  நிற்பதைப்  போன்ற  கடுமை.

                         முக்திச்சுவை- மோக்ஷம் . இறைவனது  அடிப்பேறு. 

சிவசாயுஜ்யம் .   இறைவன்  சேவடி  அணுகிய  பேரின்பம்.

                                               9.  இருவயின் ஒத்தல். 

                                                             கொளு 

தொடுதொடு     இன்பம்   தொடர்நிலை   அருமை;

ஒடுங்குமனக்    கனதனத்தாள்     கலந்தபின்   வியக்குமே .

பொருள்;--    தொட்டுத்தொட்டு  அங்கங்களைச்   சுவைத்து, மாறாத  

இன்பத்தைச் சுவைத்த   தலைவன்,  அவளது மேனியையும், பெருத்த 

மார்பகத்தையும்  வியந்து,விரும்பி மேலும்  புகழ்ந்துரைத்தது.

                                                       பாடல்..9.

மயங்கில்     லான்முயங்     கியமலைக்     குறத்தி         நற்றணிகை,

அயல்நோக்கான்     புயவில்லான்     நயந்தே     யுணர்ந்த    நல்மேனி

வியந்தானே     விரியிதழ்,     வில்புரு    வமலர்,       மதி,முலை  

பயந்த     பரம்பொரு       ளாம் சுவை   பலகால்     பதிந்தன.

                                                     பொருள் 

ஆணவக்கன்ம  வினைகளால்  அணுகமுடியாதவன், இக,பர,  பாசங்களில் 

மயக்கம்   இல்லாதவன்,  மயங்கினான் ;  தொடர்ந்தான்;  காடுமேடு  

சுற்றினான்;  மலைநாட்டுக்   குறமகள்  வள்ளியின்  பின்னரே. மணந்தான் ;

மகிழ்ந்தான்  தணிகையிலே .  அத் தணிகையில்   வீற்றிருக்கும்  முருகனைத் 

தவிர   யாரையும்   வணங்க  விரும்பாத  தலைவன்;   கைகளிலே  வில்லேந்திய 

வீரன்;  தினைப்புனத்தே   கண்டு,மனம்  கொண்ட  காரிகையின்  இன்ப 

அனுபவத்தை  மனத்தில்   வியந்து  போற்றுகிறேன். அவளது   மேனியின் 

நலத்தை    வியந்தவன், சுவைத்துப்பருகிய  அவளது   இதழ்களை  மனதுள் 

சுவைக்கிறான்;  வில்போன்ற  புருவத்தை   மனக்கண்முன்   நிறுத்தியவன் 

குவளைமலர்போன்ற  அவளது   கண்களின்  குளிர்ச்சியைக்   காதல் 

நோக்கை  வியக்கிறான் ; மனத்தை  வருடும்   மதிமுகத்தை  வியந்து 

போற்றுகிறான்;  முத்துமாலையணிந்த  மார்பகத்தை  மனத்தகத்தே 

நிறுத்துகிறான்; அவள்  தந்த   இன்பச்சுவை  பரம்பொருளாம்   முருகன் 

அடியவர்களுக்கு   அளிக்கும்   பேரருட்சுவை  போன்று, மாறாமல்,

அழியாமல், அகலாமல்  மனத்திலே   என்றும்  நித்தியமாய்  நிற்கிறது"  என 

அன்பு  பாராட்டிப் போற்றுகிறான்.

விளக்கம்;-----     மயங்கில்லான் =   மயக்கம்  இல்லாதவன்; ஆணவக்கன்ம 

                                பாச  வினைகள்  தீண்டமுடியாதவன்; இகபர  சுகபோகங்களை 

நாடாதவன். 

அயல்நோக்கான் =   முருகனைத்தவிர   வேறு  கடவுளரை  வணங்காதவன் ;

                                         தலைவியைத்    தவிர  வேறு பெண்களை  நினையாதவன்.

                                        எனத்   தலைவனது   மாண்பு பேசப்படுகிறது.

பரம்பொருட்சுவை=    இறைவன்  அளிக்கும்   பேரருள்;  அதன்   சுவை 

                                             வரையறுக்க  இயலாதது;  அழியாதது;  நிலைத்து 

                                            நிற்பது; மாறாத   இன்பத்தை  நாளும்   வழங்குவது.

                                            அதுபோலத்     தலைவி  நல்கும்   இன்பமும்  விளங்கும்.

                                                                         10.  கிளவி  வேட்டல் .

                                                                                      கொளு 

செவ்வழகுச்     சீர்மேனிச்     சிறப்போடு      ஒன்றியவன் 

கொவ்வைக்       கிளிமொழியைச்     செவிகேட்கச்   சிந்தித்தான்.

பொருள்;--   தலைவியின்   அழகுமிகுந்த   உறுப்புகளின்  இன்பத்தைத் 

தொட்ட  தலைவன்,   அவளின்   கிள்ளைமொழியை, அமுதூறும்  சொல்லைக் 

கேட்டிட  விரும்பியது.

                                                                        பாடல்--10.

 மலைமான்     மகள்கலை      சுவைத்த    சிலைவேடன்   தணிகை,

அலைமீன்      உலைதீ ,   இலையிடை,    விளைகொழு      முலையே .

நலவமு     திதழ், நகை    வாயால்      கலவியில்   களித்துடன் 

கிளிமொழி     அளியினிமை      கிளர்ந்திட   உள்ளம்     கொண்டான்.

                                                                  பொருள் 

    மலைநாட்டில்   மானிற்கு   மகளாய்  அவதரித்த  வள்ளியம்மையைக் 

கண்டு,காதலித்துப்  பின் தொடர்ந்து மலையெல்லாம்  சுற்றிக்  காதலைச் 

சுவைத்த  வில்வேடனாகிய   முருகன்   வீற்றிருக்கும்  திருத்தணிகையில்,

காதலித்த  பெண்ணின்  அங்கங்களைச் சுவைத்த   தலைவன்,

விளக்கம்-------    மலைமான்மகள் =   மலையில்   வாழும்   மானிற்குப் 

                                பிறந்த   மகள் , என்றும்,

                                மலைக்கவைக்கும்  வண்ணம்  மானிற்குப் பிறந்தவள்,

                                என்றும்,  கொள்க.

அலைமீன்====    ஒரே இடத்தில்  நில்லாது   அலைந்தபடியே  இருக்கும்   மீன்;

                                     கடலில், நீர்நிலைகளில்  தவழும்  மீன்;

அளியினிமை =  அளி =கருணை. கருணைகொண்ட  இனிய மொழி;

                                                செவ்வாயால் மொழிந்து  அளிக்கும்  இனிமை.

                                

இங்குமங்கும்  அலைகின்ற  மீன்போன்ற   கண்களின்  காதல் நோக்கை,

கொல்லன்  உலைபோல்  எப்பொழுதும்  சூடாகவே   விளங்கும்  சுவர்க்கத் 

தடத்தை,  இல்லை  என்னும்  அளவு சிறுத்த  இடையை,  நான்குவிளைந்த 

கனிபோன்ற  மார்பகத்தை, இனிமையான  அமுதத்தை  வழங்கும் இதழை,

சிரிப்பால்   சிந்தைகவரும்  வாயை,  நேற்று,  களவுப்புணர்ச்சியில் 

தொட்டும், அணைத்தும் , பருகியும்  களித்தவன்  அவளது  கிள்ளை 

மொழியை,  அக்கருணை   அளிக்கும் இனிமையை  உணரவிரும்பினான்.

உள்ளத்தில்  அவள்  பேச்சு  கேட்கவேண்டும்   என்ற விருப்பம்  அவனிடம் 

மேலோங்கியது. 

                                                                11.நலம் புனைந்துரைத்தல் 

                                                                       கொளு 

மொழிந்த    மொழிகேட்டு, மென்முறுவல்  உடன்கண்டான்;

அழிமனத்து    அயர்வகற்றி   அழகினைப்   புகழ்ந்தனன் .

பொருள்;---   தலைவியின்    வாய்முத்துக்கள் சிதறி விழுந்தகாலை  அதனை 

உள்ளுணர்ந்த   தலைவன்,  அமுதவாயில்  புன்சிரிப்பு   தவழ, அவள்  அழகைப் 

புகழ்ந்து பேசலுற்றான்.

                                                                    பாடல்..11

பூத்துக்     குலுங்கிடும்     புனைமலர்ச்     சோலைப்பொன்       பூப்போல ,

ஏத்தும்        இளங்குமரன்     தணிகையான்      புகழைப்           போல ,

காத்தருள்    காதலித்தாள்     கனிவாய்க்      கடைப்புன்       சிரிப்பின்

பூத்தகுணப்     புதுமை     ஆம்பல்     பொலியுமோ ?      பூக்குமோ?

                                                                 பொருள் 

நன்கு  வளர்ந்த  செடிகளும்,மரங்களும்  நிறைந்த  வளமான  

 மலர்ச்சோலையிலே  மலர்ந்து திகழும்   பொன்மயமான  தாழம்பூ 

போன்ற  மங்களத்   தோற்றமும், மணம்  கலந்த  மஞ்சள்  நிறமும்  கொண்டு 

விளங்குமாப்போல,

       உலகோரேல்லாம்  உளமாரப்   போற்றிப்புகழும்  இளமையும், அழகும் 

வாய்ந்த  முருகன்   வீற்றிருக்கும்  தணிக்கை மலையின்  மாறாத  

மாப்புகழ்போல,

  என்னைக்காத்திடவே,  எனக்கு   அருள்  புரியவே, என்னை விரும்பிக் 

காதலித்தவளின்  கனிபோன்ற   நறுமணச்செம்மை   வாயின்  கடைப்பகுதியில் 

தோன்றும்  புன்சிரிப்பின், அழகு,  குளிர்ச்சி, கருணை, அன்பு, ஆகியவைகளை 

உள்ளடக்கிய  மலராக  அங்கு   மலரும்   ஆம்பல்  மலர்ந்திடுமோ?  அழகாய் 

விளங்கிடுமோ?  புதிதாய்  மலர்ந்திடுமோ?  எனத்    தலைவன்  தலைவியின் 

நலத்தைப்  புகழ்ந்துரைத்தான்.

விளக்கம்;--    பொற்பூ =  பொன்போல்  திகழும்   மலர்; இங்கு   தாழைமலர் .

                             வண்ணத்தால்  பொன் ;  பெருமைச்சிறப்பால்   பொன் ;

                           மலர்க்கூட்டங்களிலே   தனித்தன்மை  கொண்டது.

                           அது போன்ற   தலைவியின்  புன்சிரிப்பு.

தணிகைப்புகழ் =    மலைகளில்   உயர்ந்த  பெருமை  கொண்டது;  முருகன் 

                                         வீற்றிருப்பது; அமைதியும்    ஆனந்தமும்  தருவது; 

                                         புலவர்களால்   பாடப்பட்டது.  அதுபோன்றே 

                                         தலைவியின்   புன்சிரிப்பும்  திகழ்கிறது.

புன்சிரிப்பு =        தலைவனின்  கண்ணிற்கு   விருந்தாக, ஏற்றுக்கொண்டதின் 

                                   சான்றாக  வீசிய  புன்சிரிப்பு; 

ஆம்பல்  =  வாய்க்கும்.  அங்கு  தோன்றும்   சிரிப்பிற்கு   உவமை   ஆகலாம்; 

                      ஆனால்  எம்  தலைவியின்  பொன்மய,ஆனந்தப்புன்சிரிப்பிற்கு 

                     நிகராகாது,  என  வியந்து   போற்றுகிறான்ன்  தலைவன்.

                                                                    12.  பிரிவுணர்த்தல் .

                                                                                   கொளு 

பிரியும்   காலம்   பிறந்தது   எண்ணியே,

விரிகூந்தல்   வளம்போற்றிப்    பிரிவினை  உணர்த்தியது.

பொருள்;--      கூடிமுயங்கி மகிழ்ந்தகாலை ,   பிரியும்  நேரம்  வந்ததை 

உணர்ந்த   தலைவன்,  விரிந்த   கூந்தலால்   அழகுபொங்கும்  தலைவியிடம் 

அவளது   அழகைப்   போற்றியபின்னர்  பிரிதலை  மென்மையாய்க்  கூறினான்.

                                                                  பாடல்...12.

பிரிதலை       ஒருபோதும்  விரும்பாப்         பெருமை      அடியார்,

நெருங்கிச்    சூழ்பரங்     குன்றப்     பெருமானருள்   தணிகையில்,

கருங்குழல்   விரிதோகை!      மருள்மான் !  மலர்வாய்!    மதியே !  

பிரிவினை      ஏற்பேனோ?   அருவினை      யுன்திருக்        காதலே!

                                                      பொருள் 

   ஒருபோதும்   அகலாது,  பிரியாது, முருகனின்  சேவடியிலேயே 

வணங்கிப்போற்றியபடி  நிலைத்திருக்கும்  அடியவர்கள்  முருகன்  அருகே  

நெருங்கிச்    சூழ்ந்து  நின்றபடிப்   போற்றி  வழிபடும் அடியவர்கள்  நிறைந்த 

திருத்தணிகை  மலைச்சோலையில்  கருமையான  கூந்தல்   அழகால் 

மயில்போல்  விளங்கும்  பெண்ணே! மருண்ட பார்வை  கொண்ட  மானின் 

விழிகொண்டவளே!  மருவற்ற   மதிமுகம்   கொண்டவளே!  உன்னை  ஒரு 

கணமேனும்  பிரிவேனோ?  பிரியத்தால்   என்னால்   இயலுமோ? 

எனது  பணிகளில்  முதலிடம்   வகிப்பது   உன்னதமானது  உன்னோடு 

காதல்  பகிர்வதே  அல்லவா! எனக்கூறிய  தலைவன்   தான்   பிரியப்  

போவதைக்   குறிப்பால்   உணர்த்தினான்.

விளக்கம்;--  பேரடியார்கள்  நெருங்கிச்சூழ்   பரங்குன்று  ;--

      முருகனின்   அடியவர்கள்   ஒருபோதும்   முருகனைப்  பிரிய  விரும்ப 

மாட்டார்கள்; அப்படிப்பட்டவர்கள்   நெருங்கிச்சூழும்  பரங்குன்றம். 

என்பதால்  தலைவியை  விட்டு    ஒருபோதும்   பிரிய விரும்பாதவன்  தலைவன்,

தலைவியின்   அருகமர்ந்தே  அவளோடு  பழகும்  விருப்பம் நிறைந்தவன் 

தலைவன்,  என்பது  உள்ளுறை  உவமம்   ஆகிறது.

அருவினை;--     ஆற்றற்கரிய  செயல்  உன்னை மகிழ்விக்கும்   காதலே  ஆகும்;

அதைவிடுத்து  வேறு பணி   நோக்கிச்   செல்லமாட்டேன்; என்று  

பிரியப்போகும்   பிரிவைக்   குறிப்பால்  உணர்த்தினான்   தலைவன்.

                                                         13. பருவரல்   அறிதல் .

                                                                          கொளு 

பிரிவினை    உணர்ந்தாள்;பருவரல்   உற்றாள் ; 

அருவினைத்  தலைவன்  அவலம்   கொண்டது.

பொருள்;---     தலைவன்   கூறிய  குறிப்பால்   பிரிவினை  அறிந்த  தலைவி ,

பெருந்துன்பம்  உற்றாள் ;   அதனைக்கண்ட   தலைவன்  அவளுக்காக 

இரங்கியது .

                                                                    பாடல்--13 

வள்ளிமலைக்   கானகத்     தில்வரு     வேடர்   தான்மறைந்த 

தெள்ளமுது    காணாது  துயருற்     றஉளம்        தணிகை ,

நல்லநிலம்    நாடி       நிற்பின்   நலக்கேடு   தோன்றிடுமோ?

செல்லல்     துயராம் ;    செதுக்காச்சிலை   செம்மனம்    சீருறு .

                                                       பொருள் 

   வள்ளிமலையில்    வேடனாக  வந்த   முருகன்  வள்ளியோடு   ஆடிப் 

பாடுகையில்   வள்ளியின்   பெற்றோர்   வந்ததினால்  வேடமுருகன்  

மறைந்துபோக, நித்தியமான   அழியாத   அமுதுபோன்ற   தலைவன் 

சிறிது காலை   மறைந்தபொழுதே  அப்பிரிவைத்    தாளாது, வருந்திய 

வள்ளிப்பிராட்டியார்  மணந்து,மகிழ்வோடு  திருத்தணிகை   வந்தபிறகே 

மனம்  மகிழ்ந்தார்;  அந்த  நிலச்சோலையிலே    பிரிவைக்குறிப்பால்  

உணர்த்திய தலைவனது  செயலால் மனம்   நொந்து, இங்கேயே  இப்படியே 

தலைவனோடு  இனைந்து   நின்றால்   குடிப்பெருமை   குறையும்; 

தலைவன்   சென்றுவிட்டாலோ  நான் வருந்துவேன்"   என  வருந்தும்  

தலைவியைப்   பார்த்து,   செதுக்காத   சிலையே!  வருந்தற்க;  வாட்டம்  தவிர் ;

பிரிவு   இன்பத்தை  வளர்க்கும்;இதனை   மனதில் கொள்ளுக!  என்று 

ஆறுதல்   கூறினான்.  

விளக்கம்;--  வள்ளிமலை........   இவ்வரிகள்   உள்ளுறை   உவமமாகத் 

தலைவியின்   மனப்பாங்கை   விளக்குகிறது.  

நல்லநிலம்=    தலைவனோடு   ஆடிப்பாடிய   தினைப்புனம்  தணிகைச்சோலை 

இங்கேயே  நெடுநாள்  தங்கின்   குடிக்கு   அவப்பெயர்    தோற்றுவிக்கும் 

செல்லல்  துயர் ;--   தலைவன்   சென்றுவிட்டாலோ    அது   எனக்கு   அளவுகடந்த 

துயரைத்தரும்.  என  வருந்தினாள்  தலைவி.

                                                         14.  அருட்குணம்   உரைத்தல்.

                                                                            கொளு 

 களவியல்   காரிகை,    கடிமணக்      கடவுள்,

உளம்போற்றி     வாழ்வோர்   உறுதுயர்   அடையார்.

பொருள்;---   தலைவியே!  நாமிருக்கும்   இம்மலைக்    கடவுள் 

காதலுக்காகக்     காடுமேடு   சுற்றிக்  களவியல்  காத்த  கந்தபிரான் 

ஆவார்;  அவரது அருள்   நமக்கு உண்டு;   அவரைப்போற்றி வாழ்வோராகிய 

யாருமே   துயர்  அடையார்;  அங்ஙனமிருக்க,  நீ  பிரிவு  நினைந்து  வருந்துவது 

ஏன் ?  வருந்தற்க; என   மன வாட்டம்  போக்கினான்.

                                                            பாடல்..14.

தணிகை     மலைஅணி     யழகன்      கணித்த    நனிசெல்வம்

மணியே!     பிணிதீர்      மனமே !      முனியோ.   தனித்தெய்வமோ,

அணுகுமோ     பிரித்திடச்     சிணுங்கல்   பணிநீர்     மறைக்க; 

புனுகுக்    கனியிதழில்   இனிமையே ;    ஏது       துயர்தாம்;

                                                    பொருள் 

         தலைவியே!  நமக்கென   நற்காதல் செல்வம்,  திருமணபந்தம்  கணித்து 

அளித்தவன்   தணிகைமலையிலே    வீற்றிருக்கும்   அழகு முருகன். அவன் 

அளித்த  பெருஞ்செல்வம்    யாரால்   கவர  இயலும்? பறிக்க  இயலும்?

மணிபோன்றவளே!  என்மனத்தே  தோன்றும்  துயர்களை  எல்லாம்   போக்கி,

 என்னைக்காப்பவளே!  நமது    காதலைப்   பிரிக்க  முனிவர்    வருவாரோ? 

பிற தெய்வங்கள்   வந்து   தடுக்குமோ? என்றும்   பிரிவே  இல்லாத   நமது 

நல்மணத்தை   வாழ்வை  அவைகளால்   பிரித்திட   இயலாது; கவலை    நீக்கு;

கண்ணில்  வழியும்   கண்ணீரை  அகற்று; உனது   புனுகு போன்ற  நறுமணம்  

மிக்க    இனிக்கும்  இதழுற்ற  வாயிலே  முறுவல்  பூக்கட்டும்; இனிமை  

விளையட்டும்;  நமக்கு   இனி   துன்பமே  இல்லை; என்று இறையருளைக்  கூறித் 

தலைவியின் துயரைப்   போக்கினான்   தலைவன்.

விளக்கம்;---   கணித்த ==   தலைவன்   தலைவி   சந்திப்பையும்,   காதலையும் 

திருமணத்தையும்   விதியை   வகுக்கும்   மாமுருகன்  என்றோ  

வகுத்துவிட்டான்;  அதை   யாராலும்    மாற்ற  முடியாது.

நனி செல்வம் ==   அழகே   உருவான  அழிக்க   இயலாத  தலைவன்  

தலைவியின் இனிமைவாய்ந்த    திருமணச்செல்வம் .

பிணிதீர் மனமே ===   தலைவனது   துன்பத்தையும், சங்கடங்களையும்,

நோய்நொடிகளையும்  காதல் துயரையும்   தீர்த்துவைக்கும்  மனம்   கொண்ட 

தலைவி.

பணிநீர் ===    பணியாக,  வரிசைப்படுத்தப்பட்ட  மாலையாக   வழிந்தோடும் 

கண்ணீர்.

புனுகுக்  கனியிதழ் ==   புனுகு  என்ற ஒருவகைப்   பூனை; கற்புமிக்கது; 

தான்சார்ந்த தலைவனோடே    நாளும்   வாழ்வது;  அப்பூனையிலிருந்து 

எடுக்கப்படும்   நறுமணம் மிக்க   எண்ணெய்; அந்நறுமணமும்   இனிப்பும் 

கலந்த  இதழும்,வாயும்.தலைவிக்குச்சிறப்பு.

இனி மையே  ==  இனிமேல்   இனிமை  விளையட்டும்;  துன்பம்  தவிர்க்க. 

                                                             15 . இடம் அணித்துக்கூறி  வற்புறுத்தல் .

                                                              கொளு 

மருளும்   தலைவி   மனத்து  எளிமைக்கு,

நிலவுநிழல்   கலைகாண்    சிலையணித்தே  எனல் .

பொருள்;--   தன்னோடு   நெருங்க  அஞ்சிநிற்கும்  தலைவியிடம்  நான் 

உன்நாட்டின்    மிக  அருகில்   உள்ளவன்;  ஒருபோதும்  விட்டுவிடமாட்டேன்;

உன்மலை  நிலா வெளிச்சத்தில்  விழும்    உன் நிழல்   எம்  மலையில்  

அழகாக   வி ழுந்து  மேலும்  அழகூட்டும்   அருகில்  உள்ள  மலை   எம்  மலை.

அஞ்சவேண்டா; அருகில்  வா  !  என்றழைத்தான்.

                                                                     பாடல்..15.

கள்ளத்தார்     காண       வியலாக்    கயிலைவேல்  கனிவுற்ற 

வள்ளிமலை    கணநொடி    கண்டிசை   கருணை     காண்க  !

புள்ளிமான்   துள்ளி     விழினும்    உள்ளுமிடம்   இல்லருகு ;

கள்ள      மில்லாக்    கவிமதி  !   கலக்கமேன்?    கலந்திடு.

                                                   பொருள் .

    தீமைவாயந்த   மனம்  கொண்டோரால்  காண   முடியாத  சிவனாரின் 

கயிலைமலையில்  தந்தையோடு  வீற்றருளும்  முருகன்  மனத்திலே  

தோன்றித்    தனது  வேண்டுகோளை  விடுத்த   மால்மகளின்  காதலை 

ஏற்றுக்கொண்ட வன் ,  அவளுக்காக  மலைகள்,  மணல்மேடுகள்  தாண்டி, 

வள்ளிமலைக்கு,நொடிப்பொழுதில்   வந்தவன்  குறமகளாம்   வள்ளியின் 

காதல் வேண்டி,  வேடனாக வேடமிட்டு, முன்னும்,பின்னும்    சென்று, 

முட்காட்டிலே   அவளைத்  தொடர்ந்து சென்று, மரமாய்,  கிழவனாய், உருமாறி,

உலாமார்ந்து   காதலித்த   முருகன் காதலுக்காக  நீண்ட   நெடும்பாதையை 

ஒருநொடியில்   கடந்துவந்தவன்  ஆனான்;  அவனது  மலையில்   அவனது 

அடியவனாகிய  யான்   அவனது    தணிகை  மலையில்   கண்ட   உன்னை 

குற்றமற்ற  நிலவுபோன்ற   முகமுடையவளே!  எனது   நாடு வெகுதொலைவு 

என  வருந்துகிறாயா?  வருந்த  வேண்டா. உன்  வீட்டு வாயிலில்  மேயும் 

சிறுமான்குட்டி  துள்ளிக்குதித்தால்  எம்  ஊர்தான்;எம்  நாடு  தான்; கவலற்க.

என்னை  ஏற்றுக்கொள்!  என்று  தலைவன்   ஊர்   வெகுதொலைவோ? என 

வருந்தி  அருகில்   வராமல் தவிர்த்த   தலைவியை  விரும்பிக்   கலக்க  

முனைந்த   தலைவன்  அவளது   கலக்கத்தைப்  போக்கியது.

உள்ளுறை   உவமம்..;--   கயிலைவேல்  கனிவுற்ற 

                                                  வள்ளிமலை    கணநொடியில்    

இங்கு   கயிலையில்   வீற்றுள்ள   கந்தபிரான்  மனம்கொண்ட  வள்ளியைக் 

காண, நொடியில்  வள்ளிமலை   வந்து சேர்ந்தார். தலைவியின்   

அமைவிடத்தை     அடையத்     தலைவனுக்கு  எவ்வளவு   தொலைவு  ஆயினும் 

மிக  அருகே   ஆகும்.    அதுபோன்றே  என்  நாடும்  தொலைவில்   இருந்தாலும் 

நீ  உடனே  வந்துவிடுவேன்;  கவலற்க  என்று  தலைவியை  

அமைதிப்படுத்தினான்.

                      வணங்கும்   முருகக்   கடவுள்   வழியே  அடியவனும்   நடப்பான்  

என்பது    விளக்கப்படுகிறது.

                                                                          16.  ஆடிடத்துய்த்தல் .

                                                                        கொளு 

ஆடுதோழியர் அருகணைக; காடகன்று 

நாடுவன்   விரைவில்  நவின்றே  மறைந்தனன் .

பொருள்;---    தலைவியே! உனது   தோழியர்  கூட்டத்தோடு  இணைந்து 

விளையாடுக;  நானும்   இக்காட்டைவிட்டு  அகல்வேன் ; மீண்டும்  விரைவில் 

வந்து உன்னை  அடைவேன்/'  என்று  கூறியபடிக்    கானகத்திடையே  

மறைந்தான்    தலைவன்.

                                                           பாடல்-- 16

பற்றுடன்   பற்றி       யுழன்று   சற்,றெனமறை  வண்டுபோல் 

நற்றவனின்    பொற்றணிகைச்  சார      லிடைவிற்     புருவச் 

சொற்றே     னிதழ்!மற்      போர்முகம்!    சிற்றிடையே!     புற்றல்குலே! 

கற்றதுணர்!     உற்ற       வாயம்    சேராடு!   மறைமீள்வனே .               

                                                                பொருள் 

  வில்போன்ற  புருவத்தையும் , இனிக்கும்  தேன்போன்ற  சொல்லுடைய 

இதழையும், எப்பொழுதும்  மற்போர்  புரிகின்ற  மார்பகங்களையும்,

சிற்றிடையும், புற்றில்  வாழும்  பாம்பு   போன்ற  மறைவிடத்தையும் 

கொண்ட  தலைவியே!  கற்ற   புணர்வுச்சுகத்தை  நன்கே   உணர்வாய்.

இனிய நினைவுகளோடு  உனது  தோழியர்  கூட்டத்தோடு   இணைக ;

அவர்களோடு   நன்கு   விளையாடுக ;   அளவுகடந்த    ஆசையோடு 

மலர்களைப்   பற்றி, மலர்த்தேனில்  அழுந்தி,விழுந்து,புரண்டு,

இனியதேனைப்பருகிய   வண்டு , அடுத்தநொடி  காற்றோடு 

காற்றாகி   மறைவதுபோல, தவமுதல்வனாம்  முருகன்  வீற்றருளும் 

திருத்தணிகை  மலைச்சாரலிலே  நானும்  மறைந்துபோவேன்; உன்னை 

 விட்டுப்பிரிந்து    போவேன்; விரைவில்  மீண்டும்   உன்னை வந்து 

அடைவேன்; என்று  கூறித்  தலைவியை  விட்டுப்பிரிந்தான்.

--விளக்கம்;---    மெய்ப்பாடு----பெருமிதம் 

                                பயன்------இடம்குறித்து  வற்புறுத்தல் 

உள்ளுறை   உவமம் ;--  பற்றுடன்  பற்றியுழன்று  =  

         வண்டானது   மலர்களில்  தாவி,   அன்போடு பற்றி, இனியதேனை 

நன்கு  சுவைப்பது போல ,  தலைவனும்   தலைவியிடம்  நன்கு  இன்பச்சுவை 

பெற்றவன் என்பது  உணர்த்தப்படுகிறது.

                                                         17. அருமை அறிதல் .

                                                                   கொளு 

உறவும், உலகும், உடனமை    சூழலும்,

அறிந்தவள்   அருமை   மேன்மை  அறிந்தான்.

பொருள்;--    தலைவியோடு  இணைந்த   தலைவன்,  அவளை  ஆயர் 

கூட்டத்திடையே   விட்டகாலை  ,   அழகோடு,ஆன்ற செல்வமும்,   நல்ல 

உறவினர்களும்,அவர்களது   சிறப்புமிக்க  வாழிடங்களும் ,பண்புற்ற 

சூழலும்   கண்டு,  அவள்மீது   மேலும்  அன்பும், பாசமும்  ஈடுற்றது .

என    அறிந்து  மிகுந்த  உயர்வு   கொண்டான்.

                                                           பாடல்.....17 .

குறவர்தம்   குணநல  அன்பு    பாச  விருப்பீர்ப்பினால் 

உறவுற்ற   உயர்வேடத்    தணிகையான்   உள்ளம்     போலவே ,

நிறைகண்டான்   நித்திலம்     விளை நிலம்     கண்டான்  நிதிகண்டான்;

குறைவில்லாக்     குடிமேன்     மைமறை      யானான்    மனமொன்றியே .

                                                                 பொருள்   

     வள்ளிமலையிலே  குறவள்ளியின்   பின்சுற்றி, அவளைப்பற்றியவன் 

அந்த   வேடக்குடிகளிடம்   காணப்பட்ட  உயர்ந்த   குணங்களையும்,

வள்ளிமீது அன்பு  பொழிதலையும்,  பாசம்கொண்ட   மனத்தையும்,

கண்டு, அந்தக்குடியின்   உயர்ந்த  பண்புகள்  கவர்ந்ததால்  வள்ளியின்  மீது 

இயல்பாகவே  பெருமதிப்பும்,  அன்பும்  கொண்டான்  வேடனாகி   வேடமிட்டு 

வந்த  தணிகையான் . அவனது   உள்ளத்திலே  தோன்றிய   எண்ணம் போலவே,

அவன்  அடியானாகிய  தலைவனது   உள்ளத்திலும் தலைவியின்  மீது  

பெருமதிப்பு   தோன்றிற்று. நிறையறிவு,  மிகுந்த  சுற்றத்தினர், ஆயர்  கூட்டம்,

அவர்கள்  வாழ்கின்ற   பரந்துபட்ட  செல்வ  வள   நிலப்பரப்பு. நாடு,நகரங்கள், 

கண்டான்;   குறைவில்லாத   குடி   மேன்மை  கண்டான்; இவளை  நாம் 

அடைந்ததால்  பெரும்பேறு   பெற்றோம்" என  மகிழ்ந்தான்;அவளோடு  மனம் 

ஒன்றியதால்  உயர்  நலன்களும்  தம்மை  நாடியதாக   உணர்ந்தான்;

முற்றிலும்   உயர்  பண்பு கொண்ட   தலைவியை   நாம்   அடைந்தோம்;அது 

முருகன்  பேரருள்  எனவும்  உள்ளம்  உருகினான் .

விளக்கம்;----    

1.  உயர்வேடம் ==   தனது  உருவை,  தோற்றத்தை, கடவுள்   வடிவிலிருந்து,

                                      வேடனின்   வடிவமாக,   வேடம்  பூண்டான்;

                                     அவ்வேடமே   உயர்ந்த  வேடமாக,வேடனாக   முருகனைச் 

                                     சித்தரித்தது.

2..  விருப்பீர்ப்பினால்===    அக்குடியினரின்   அன்பு, பாசம், கண்டு,  அந்த 

                                                        ஈர்ப்பினால் ,  தானும்   ஒருவேட   வடிவம்                                                                                   கொண்டான்.

3.  குறைவில்லாக்குடிமேன்மை ==    தலைவியின்,  தோழியர், உறவினர், 

                                                                           போன்றோரின்  உயர்ந்த   பண்பாடுகள்;

                                                                            குடி ஒழுக்கம்   மிக உயர்ந்து                                                                                                            காணப்பட்டது.

மெய்ப்பாடு-------மருட்கை.

பயன்-------தலைவியின்   மேன்மை   உணர்தல்.

                                                                            18.  பாங்கியை  அறிதல் .

                                                                                                 கொளு 

கண்களே    காதலும்,  கனிவும்   காட்டுமோ!

பெண்களுள்  ஒருத்தி பெருமை  உணர்ந்தது.

பொருள்;--    தலைவியின்    கண்கள்   காதலை மட்டுமா  பேசும்; தனது 

மனக்கனிவைக்    கனிவோடு  வளரும்  நட்பையும்   வெளிப்படுத்துமோ?

தலைவியின்   கண்பார்வை   காட்டிய  ஆயர்கூட்டத்தே   ஒருத்தி; அகம் 

கவர்ந்த  தோழியைக்  கண்டு  தலைவனும்  அவள்பெருமை  உணர்ந்தான்.

                                                             பாடல்--18 .

எண்ணமெல்லாம்   அவளெண்ணம் ;  பண்ணெல்      லாம் அவள்     மன்னோ !

கண்ணசைவில்     காட்சி     யான   காரிகையை  அன்னம்பல 

மின்னசை      வில்வண்    ணமாகி    வாரியெடு  சரவணத் 

தணிகைப்     பொன்பொழிலில்   கண்டனன்   காரருள்    தண்முகம் .

                                                                 பொருள் 

ஆறு  அன்னப்பறவைகள்   ஒன்று கூடி, வானத்து  மேகமினல்களுக்கு  இடையே 

வண்ணமென  உருவெடுத்து, கீழிறங்கி , சரவணப்பொய்கையில்  மலர்ந்த 

தாமரை  மலர்களில்  அவதரித்த   ஆறு குழந்தைகளையும்   கண்டு,  மகிழ்ந்து,

பாசத்தோடு,எடுத்து, அணைந்து,முத்தமிட்டுப்    பாலூட்டிச்சீராட்டி   வளர்த்த,

திருத்தணிகையின்  பொன்மலர்கள்   பூத்துக்குலுங்கும்  சோலையிலே ,                       

             எனது   எண்ணமெல்லாம்    அவளே அவளே   ஆவாள்;  நான்    மனத்தில்  

நினைப்பது,சிந்திப்பது, செயலாற்ற விரும்புவது,  ஆகிய   அனைத்து 

நுண்ணுணர்வுச்   செயகைகளும்  அவள்   மனத்திலேயும்   ஒன்றாகவே 

உதிக்கும். அவளே   என்தோழி  உயிர்த்தோழி; என்று  தனது  

 கண்ணசைவினால்   தனது  உயிர்த்தோழியை க்    காட்சிபோல்  

எனக்குக்காட்டினாள்  தலைவி.  கார்மேகம்போல்    கருணை   பொழியும் 

அத்தோழியின்   முகத்தைக்கண்டு,  இவளே   நம்   காதலுக்கு   வழிகாட்டி"

இவள்  வழியே   தலைவியின்   சம்மதம்   பெறலாம் . என முடிவுற்றான் 

தலைவன்.

விளக்கம்;-- 1.  பண்ணெல்லாம்  =  பண்பாடு;  நினைத்தல் , சிந்தித்தல்,

                              முடிவெடுத்தல் ,போன்றவைகளைக்   குறிக்கும்.

2.  அவள்  மன்னோ!=  மன்  --குறி ப்பிடைச்சொல் ; எல்லாம்  அவளே  என்னும் 

                                                         பொருளைத்  தந்தது.

3.   கண்ணசைவில் =   கண்ஜாடை;  இதோ  என்னருகில்   நிற்கிறாளே   அவள்"

                                             அவனுக்கு  மட்டும்  தெரிவித்தல்.

4.   காரருள் முகம் =       கருமை  மேகத்தின்  வாரி  பொழிவுபோல                                                                                 கண்ணிலிருந்து தோன்றும்  இரக்கம்,கருணை.

மெய்ப்பாடு......பெருமிதம்.

பயன்;                 ஆற்றாமை  நீங்கல் .

                 இத்துடன்   இயற்கைப்புணர்ச்சி  என்னும்   தெய்வப்புணர்ச்சி 

முடிந்தது.

                                                    2.    பாங்கற்கூட்டம் .

      இயற்கைப்புணர்ச்சியில்  தெய்வத்தின்    அருளால்  கண்டு  காதலுற்ற 

தலைமகன், களவை  விடுத்துப்   பெற்றோர்  வழிப்போற்றி,அவர் வழங்க 

மணம்  செய்து  கொண்டு   வாழ்வது  சிறப்புடைத்தே;  ஆயினும்,


    தலைவியை  மீண்டும்  தனியே   சந்திக்க விரும்பிய   தலைவன், தமிழ் 

வழக்க  முறைப்படிப் பாங்கன்   உதவியோடு   சந்திப்பது  உண்டு. பாங்கன் 

தோழன்  அவனது   கூட்டம்  தலைவனுக்கு  உஹவிகள்   புரியும்;  அதுவே 

பாங்கற்கூட்டம்  ஆகும்.  இது  தொல்காப்பியப்படி   முப்பது  துறைகளைக் 

கொண்டது.

                                                   2..1.. பாங்கனை   நினைதல் .

                                                                         கொளு 

அருமை    உடைத்தென்று    அசாவுதல்   நீக்கும்,

பெருமைப்    பாங்கனைத்     திருமகன்   நினைந்தான்.

பொருள்;-------    தாமாற்றும்    செயல்  மிகமிகப்பெரியது    என  எண்ணி 

வருந்தாமல், அச்செயலில் வெற்றி அடைய , வரும்  துயர்களை   நீக்குவதில் 

வல்லவனான  தனது   தோழனை  மனத்துள்   நினைத்தான்   தலைவன்.

                                                          பாடல்-----18

பற்றடியார்     சுற்றமாம்      பழனி     மாமலைத்    தணிகையான் 

உற்றுயர்சீர்  கற்றவர்       பொற்றடியைப்    போற்றி      வாழ்தல்போல் 

எற்றோழனாம்   முற்றோதியை   உற்ற      காதல்    பற்றுரைப்பின் 

கற்புடைக்      கனிபெற்       றடைய   விற்பூட்டு       நற்றுணையாம்;   

                                                               பொருள்   

               தன்னை நாடிவந்து  பற்றோடு  பூசனை  செய்யும்  அடியவர்களைத்   

தனது   சுற்றமாய்    விளங்கும்,   அடியவர்களுக்கு   பேரருள்    புரியும் 

பழனிமலையில்   வீற்றிருக்கும்,  திருத்தணிகைமலைக்கடவுள்  பொன்னார் 

சேவடிகளை  அடைந்து, தொழுது,போற்றும்  கற்ற சான்றோர்  

போற்றிவாழ்தலைப்  போன்றே   ஒருபோதும்   பிரியாது  முருகன்  சேவடி 

போற்றும்   முதிய ஞானம் கொண்ட  எனது   தோழனை   அடைவேன்; 

அவனிடம்   எனது  காதலை, தலைவிமீது  நான்   கொண்ட   மோகத்தை 

விரிவாக  விளக்குவேன்; அவன்  எனக்கு  நல்வழி  காட்டுவான்; கற்புடைய 

கனியன்னாள்   பேரன்பை   நான்   பெற்றிடப்    பூட்டினைத்   திறக்க உதவும் 

சாவி  போல எனக்கு  வழிகாட்டி, நலச்செயல்  பல புரிவான்;  அவனை 

நான் விரைவில் காண்பேன்"  எனத்   தன்மனத்திற்குள்  எண்ணம்  கொண்டான் 

தலைவன்.

விளக்கம்;--    1.   பழனிமலைத்தணிகையான் =  திருத்தணிகையில்  

                                 வீற்றருளும்   முருகன்   பழனி மலையையும்   தனது 

                                 கோயிலாகக் கொண்டவன்.

                                  சினம்  கொண்டு  துறவியாய்  நிற்கும்  பழனியாண்டி;

                                  சினம்  தவிர்ந்து  மணக்கோலத்தில்  நிற்கும்  முருகன்.

2.   கற்றவர்  பணி =   கற்றதனால்  ஆய   பயன்  என்கொல்?  எனவினவும் 

வள்ளுவப்பெருந்தகை   வாலறிவன்   நற்றாள்  தொழாஅர்  எனின்" 

என்பதற்கேற்ப  கற்றவர்  பணி    முருகன்  சேவடி   தொழலே " என்கிறார்.

3.     பொற்றடி =  பொன்னடி  என்பதன்   வலித்தல்  விகாரம்.

4.   முற்றோதி =  அனைத்தையும்   கற்றவன்; 

      முற்றோதியை ==  உருபுமயக்கம். 

5.   விற்பூட்டு=      பூட்டு  திறக்க  முடியாமல்   தவிக்கும்  பொழுது, உதவ 

                                    வரும்   வில்=சாவி  போல, எனது   துயரைப்  போக்கிட 

எந்தோழன்   உதவுவான்.

மெய்ப்பாடு---------  அசைவு  பற்றி  வந்த   அழுகை.

பயன்------------------- ஆற்றாமை  நீங்குதல் .

                                                             2.2.பாங்கன்   வினாதல் .

                                                                            கொளு 

தளர்நடை    மெலிந்த    வலிதோள்  கண்டு,

நலப்பாங்கன்  நாடனை    நவின்றது.

பொருள்;--     மனத்தே   உருவாகிய   காதல்  நினைவால், தளர்ந்துபோன 

மிடுக்கற்ற   நடையும், மலையன்ன வலிமைத்  தோளி!ன்  மெலிவும் ,

நலம்மிக்க   நாடனே!  எதனால்  தோன்றிற்று? எனப்    பங்கன்  தலைவனிடம் 

வினவினான்.

                                                         பாடல்---19.

நிறைகனி    மறைத்த       மேகக்    குறமகளின்   நினைவேங்கி 

வரைசுற்றித்    தணிகை        வில் வேடன்      வடிவிழந்தாற்      போன்று,

பறைதொட்டாய்?   நிறைபோரில்     நீடு      நின்றாய்? மறைபயின்றாய்? 

உறைவலிமை     குறைந்த     முறைமை    நவில்க!    நாடனே .

                                                    பொருள்.

         பெருத்த,பழுத்த  மாங்கனியை,  மறைத்துவைத்துள்ள முந்தானை 

அணிந்த   குறமகளாம்    வள்ளியின்   அழகில்   மனதை  பறிகொடுத்த 

திருத்தணிகைவாழ்  வில்லுடைய  வேடன்  மலை,காடெல்லாம்   சுற்றிச் 

சுற்றித் துவண்டு  அழகிழந்ததைப்போன்று, மலைநாடனே!  நீயென்ன 

குறிஞ்சிப்பறை  தொட்டு  அடித்தாயா?  எங்கேனும்   நடைபெற்ற  

பெரும்போரில்   நடுவே   நின்று  போர்  புரிந்தாயா?  அல்லது  வேதம் 

பயில முற்பட்டாயா? இப்படி  உனது    வலிமை  மிக்க  தோளும்  

குறைவுற்றதுபோல்  மெலிந்து, வலுவிழந்து   காணப்படுகிறதே!

என்ன    காரணம்?  சொல்வாயாக. எனப்பாங்கன்   தலைவனிடம்  வினவினான்.

விளக்கம்;--   1. நிறைகனி =  பருத்த,பெருத்த  மார்பகம்.

                          2.  மறைமேகம் =  நிலவை மறைக்கும்   மேகம்போல்  அழகை 

                                                                மறைக்கும்  முந்தானை .

                         

                          3.  மறைபயிலல் =  நீரிலும்.நிலத்திலும்  நின்று, அதிகாலையில் 

                                                                 மடுத்தல் ,எடுத்தல் , விளித்தல்  

                                                                 (ஹ்ரஸ்வம், தீர்க்கம்,  ப்ளுதம் ) எனும்   

                                                                  எனும்   கடின  முறை . 

மெய்ப்பாடு ----அணங்கு  பற்றி வந்த அச்சம்.

              பயன் ------தலைமகனுக்கு  உற்றது  உணர்தல் .

                                                           2.3.உற்றது   உரைத்தல் .

                                                                         கொளு 

வினவிய   பாங்கனுக்கு   மனநிலை  புகன்றது.

பொருள்;--   தனது  மனதிலே  வந்து துயரப்படுத்தும்  தலைவியால் 

தான்  நோயுற்றேன்" எனத்தலைவன்  பாங்கனுக்கு  விடை  கூறினான்.

                                                         பாடல்--20.

நெற்றி      புரள்நெடு      முடியால்     நீள்காது  மற்றுளதோ?

உற்றகனி    ஒளிந்த,        உறுகார்ப்     படைகள்     எடுப்போ? 

நற்றணிகைக்     கொற்றவனின்    பொற்பாதம்  தொட்டே        அருளும் 

பற்றுளம்     தொற்றிட ,    வற்றிட     வடிவாழ்வு     வற்றிற்றே .

                                                      பொருள் 

   உனது   மனத்துயருக்குக்    காரணம்   யாது?  என  வினவிய   பாங்கனுக்கு ,

 நீண்ட   கருமுடி,  நெற்றியில்  விழுந்து புரளவும்,  நீண்ட  தோடணி  அணிந்த 

காதினை  மறைக்கவும், இனிமை  பயக்கும்  இருமார்பகங்களையும் 

தனக்குள்   ஒளித்துவைத்துக்கொண்டும் ,  வந்ததாகிய   கார்மேகப்  

படையெடுப்பால்    திருத்தணிகையில்  வீற்றிருக்கும்   கொற்றவனாம் 

முருகனின்  பொற்பாதங்கள்  பதிந்ததால் ,ஸ்பர்ச   தீக்கையால்  பேரருள் 

பெற்ற   என்  மனத்தை ப்   பற்றிக்கொண்டது;  தொற்றிக்கொண்டது;

அந்த இளமைப்  படையெடுப்பில்    நான்   தோற்றுப்போனேன்; உடல்   

மெலிந்தேன் ; வலிமையிழந்தேன்; அந்த  இனிய  நினைவால்   நாளும் 

வாடுகிறேன்; அன்புடைப்  பாங்கனே!   இதுவே   என் நிலை. என்று  தனது 

காதலை  அவனிடம்   எடுத்துரைத்தான்.

விளக்கம்;---     1.  உறுகார் =  குளிர்வும், கருமையும்  வண்ணமும்   நிறைந்த 

                                                           கார்காலம். கார்,  காலத்தையும்,  கருமேகத்தையும் 

                                                             கொண்டு, தலைவியின்   கூந்தலைக்  குறிக்கிறது.

                                                              மும்மடி  ஆகுபெயர்.

2.தொட்டேயருளும்  =   பதிந்து,  தொட்டு,தங்கி,   எனப்பொருள்கொள்ளலாம்.

                                      அடியவரின்    மனத்தடத்திலே   கால்   பதித்தல்;

                                      ஸ்பர்ச    தீக்கை"  எனப்படும். அந்த   தீக்கையால் 

                                       முருகன்   ஆட்கொண்ட  அடியவரின்   மனம்.

3. பற்றுளம்  =  இறைவனாம்   முருகனிடம்   பற்று கொண்ட மனம் ;

                                  அம்மனத்தைப்   பற்றிக்கொண்டதே  பாவையின்  மனம்.

                                   பாவையின்    மனத்தைப்  பற்றிக்கொண்டதே  இப்பாவியின் 

                                   மனம்.

4.   வடிவாழ்வு=   இறைவனையே   போற்றிவந்த   நல்வாழ்வு;

                                  கலக்கமின்றி  வருத்தமின்றி   வாழ்ந்த   வாழ்வு ;

                                  அது  இம்மங்கையின்   வரவால்  வடிவிழந்ததே" எனல்.

மெய்ப்பாடு......    அழுகை.

               பயன் ...... பாங்கற்குணர்த்தல் .

                                                               2.4. கழறியுரைத்தல் .

                                                             கொளு 

தலைவனின்     தவிமனச்    செயலை,   அழகிலை ;

அளவிலை    அன்புருப்    பாங்கன்    கழறியது .

பொருள்;--     தனது தலைவனின்  காதல்பற்றுள்ள   மனத்தில்  தோன்றிய 

செயல்பாடுகளைக்   கண்டு, உனது  உயர்விற்கும்,  பண்பிற்கும்  இச்செயல் 

தகுதியாகாது,  எனப்பாங்கன்   சாடியது.

                                                     பாடல்- 21.

வள்ளியோடு புள்ளினமும் ,  அள்ளியணை   உள்ளத்    தன்னான்  

கள்ளவிழ்    சொல்லா      லருளான்     நற்றணிகைப்      பொற்சாரலில் ,

மள்ளரிணை     முலையாள்    கள்ளமனப்     பெண்மான்     விழியால்  

பள்ளிய     றைதனில்   புள்ளியா?  முள்வலிமை;  கொள்கிலேன். 


பொருள்;--     வள்ளி    மலையிலே  அவதரித்த   வள்ளிப்பிராட்டியாம் 

குறமகளை  விரும்பித் தேடிச்சென்று  காட்டுமலையெல்லாம்   சுற்றிவந்து 

காதலித்து,அள்ளியெடுத்து   அணைத்துக்கொண்டவன் ; 

   தன்னை     எதிர்த்துப்   போர்புரிந்த    அரக்கனாம்   சூரபன்மனின்  மீது 

அளவுகடந்த    கருணை   கொண்டு,    மரமாகி நின்ற  அவனைத்   தனது 

வேலால்   இருகூறாக்கி  ,அவ்விரண்டையும்  சேவலும்,மயிலும்   ஆக்கி,

ஏற்றுக்கொண்டவன்; தன்னூர்தியாகவும்,கொடியாகவும்   தன்னோடே 

வைத்துக்கொண்டவன்; தேன்வடிகின்ற   இனிய  அருள்பொழியும் 

பேச்சினைக்   கொண்டவன்; வீற்றிருக்கும்  திருத்தணிகை   முருகனது 

மலைச்சோலையிலே   ,  இரண்டு  மற்போர்  வீரர்போல்  எப்பொழுதும் 

போர்புரிகின்ற  இரண்டு    மார்பகங்களை  உடையவளின்  காதல் 

மொழிகளைப்   பறைசாற்றும்   விழிகளை  உடைவயவளின்   பார்வைக்கு 

அடிமையாகி,  அவளோடு   உறவுகொள்ளும்   அளவு  ஒரு புள்ளியாக,

குற்றமாக  உனது  கூர்மையான   வலியவீரம்   பலியாக்கலாமோ?

  இதை   நான்   மனம்   கொள்ள மாட்டேன்; என்று  வீரமிக்க   தோழனின் 

செயலைக்  கடிந்து கொண்டான்   பாங்கன் .

விளக்கம்;---     புள்ளினம்=   சேவலும்,மயிலும்.

2.  கள்ளவிழ்  சொல்லால்=    முருகனின்   கருணைமிகு   அருள் மொழி,

                                                          தேன்   வழிகின்ற  ,கருணை  கொண்டுவிளங்கும் 

                                                          தன்மை கொண்டது.

3.   பொற்சாரல்=     பொன்மயமாக   மலர்ந்துள்ள மலர்கள்,  பொன்னிற                                                             மாலைப்பொழுது. கூடிய  மலைதாழ் வரை.

4.    கள்ளமனம் =   காதலை  மறைக்கும்   திருட்டுப்பார்வை கொண்ட மனம்.

5.  புள்ளியா? =  குறியீடு   வலிமைக்குக்    குறைபாடு .

             மெய்ப்பாடு......      எள்ளல்  பற்றி வந்த   நகை.

                         பயன் .........   கழறுதல் .

                                                      2.5.கழற்றெதிர்  மறுத்தல் .

                                                                  கொளு .

கண்டனை     யாயின்     உன்சொல்     மாறிடும்;

நொந்தே    தளர்ந்தோன்    விந்தை    உரைத்தது.

பொருள்;----     இடித்துரைத்த   பாங்கனிடம் , துயருற்ற   தலைவன்  தனது 

வருத்தத்துடன், தலைவியின்  அழகைப் புகழ்ந்து  ,நீ  அவ்வழகைப் 

பார்த்துவிட்டால்  உன்  சொல்லையும்   மாற்றியுரைப்பாய்!  என்றது.

                                                  பாடல்..22.

எழுகன்      னியர்கள்       விழுதுயர்      பழுதறக்       கொழும்பூச்    

செழுநீர்     செழித்தமலைத்   தணிகையின்    செம்மைச்        சோலையில் 

கொழுந்துபொன்      மழுக்கண் ,     பழுத்த        விருகனி     பார்த்திடின் ,

தொழுவாய்!            பழிக்காது      மொழியும்,     மனமும்           மாறுவையே !

                                                     பொருள் 

   விண்ணுலகில்    வாழும்   பிராம்மி. மாகேஸ்வரி ,கௌமாரி,வைஷ்ணவி,

வாராஹி, இந்திராணி,சாமுண்டி,  எண்ணப்போற்றப்படும்   ஏழு 

கன்னியர்களும்   தங்களுக்கு   வந்த தாகிய   சாபத்திலிருந்து   விடுபடவும்,

முருகனது    அருள்பெறவும், திருத்தணிகை    மலையில்  ஏழு  நீலமலர்கள் 

மலரக்கூடிய  ஏழு  நீர்த்தடாகத்தை   உருவாக்கி, நாள்தோறும்   தவறாது 

முருகனைப்    பூசித்து  வந்தனர்;  அப்படிப்பட்ட  தணிகைச்    சோலையில் 

பொன்னின்   கொழுந்துபோலவும்,  அழகாயும், அழிக்கும்   மழுவாயுதம் 

போலச்     சுட்டெரிக்கும்   கூர்மையான   விழிகளும்,  நன்கு பழுத்ததாகிய 

இரண்டு  கனிகளாகிய  மார்பகங்களும்  கொண்டு விளங்கும், 

அழகுதத்தலைவியை   நீ    பார்த்துவிட்டால்   அவளைத்தொழுதிடுவாய்!

பழித்த மொழிகளைப்    பேசமாட்டாய்!  உனது  பேச்சும்   மாறும்;  உனது 

கழறல்  மொழியும்   மாறும்;  எனத்    தன்னைச்சாடிய    பாங்கனின் 

கழறல்   மொழிகளைக்   கேட்டு  நொந்த   தலைவன்  பதில்   விடுத்தான் .

விளக்கம்;----    1.   எழு கன்னியர்=    சப்தமாதாக்கள்   எனப்படும் தேவதைகள் 

2.  விழுதுன்பம் =   முனிவரால்   உண்டான   சாபம்..

                         மெய்ப்பாடு......இளிவரல் 

                                     பயன்......பாங்கனை    உடம்படுவித்தல் .

                                                   6.    கவன்றுரைத்தல் .

                                                                    கொளு 

சிங்கவேறு   தங்குறை     நயந்தே    உரைப்பப் ,

பங்கனோ     பொங்கு    கவலையால்   பகன்றது.

பொருள்;---      வீரத்தில்  இளஞ்சிங்கம்போன்ற   தலைவன்,  தலைவியிடம் 

மனத்தைக்  கொடுத்துவிட்டு   வருந்தும்    துன்பத்தைச்    சொல்ல,

அதுகேட்ட   பாங்கனோ, வீரம் மிக்க தலைவனின்  துயரத்தைப்  போக்கும் 

வழிதேடிக்  கவலையுடன்  சொன்னான்.

                                                             பாடல்....23.

தேவர்     குறையைத்      தீர்த்திடப்    பாவரழி   படைகொண்டு ,

மேவும்     புகழுடைச்      செந்தூர்     சிறப்புற்ற   தணிகைவேல் ,

நாவுற்று      ஆவி       யவனே   என்றிருக்கும்  எம்தலைவன்  

பாவையினால்   நோவடைதல்     ஆவ       செய்வேன்    கவலற்க .   

                                                        பொருள் 

    தேவர்களது   துன்பத்தைப்  போக்கிடவே   சிறைமீட்டு   அவர்களை 

வாழவைக்கவே, தீயவர்களான   சூரபன்மாதி    அரக்கர்களோடு  போராற்றி,

அவர்களை    அழித்திட்டத்   திருச்செந்தூர்   மாமுருகன்  செந்தூரில்  படை 

திரட்டிப்   போருக்குக்கிளம்பினான்.  வெற்றி பெற்ற  வீரமகனான 

 திருத்தணிகை   முருகனை,அன்றாடம்    தம்நாவால் போற்றுபவனும் 

தனது   உடல்,பொருள்,  ஆவி  எல்லாம் முருகனே   என   இருப்பவனும்   ஆகிய 

எம்   தலைவன்    ஒருபாவைமீது   கொண்ட   காதலினால்   துயரடைவதோ?

ஆவன   செய்து,  தலைவனது   துயரைப்போக்குவேன்"  என்று  மனத்தால் 

முடிவெடுத்தான்   பாங்கன் .

விளக்கம்.... 1.  தேவர் குறை =   அரக்கர்களின்    அடக்குமுறை,  சிறையில் 

                                                            அடைத்தது,  மறை  போற்றாமை   முதலியன.

2.   பாவரழி =      தீய   பாவங்களைப்   புரியும்   அரக்கர்கள்;   அவர்களை 

                                 அழித்துத்      தேவர்களைக்  காத்தல் .

3.    படைதிரட்டி =   அரக்கர் படையை  வெல்வதற்காக  போரெடுத்தல்.

                                        தானே    படைத்தளபதியாகி  தேவர்களை  ஒன்று கூட்டிப் 

போருக்குப்   புறப்படுவதற்கான   செயல்கள்.

             மெய்ப்பாடு ......இளிவரல் 

                          பயன்........  வருத்தம்   தணிவித்தல் (கழறுதல்) 

                                                                       7.வலியழிவுரைத்தல் .

                                                                                   கொளு 

ஐந்தூண்   நிறுத்திய   சால்பும்     மறைந்திட,

நைந்தனன்     வாடினன்    பைந்தளிர்    நோக்கிற்கு.

பொருள் ;----   கழறிய     பாங்கன்  சொல்    கேட்ட  தலைவன், தனது  

சான்றாண்மையை  நிலைகுலையைச்  செய்தது  மலைமங்கையின் 

நோக்கு"  என்று  அவன் கண்ட  தலைவியின்  பார்வையில்   தான்  வாடுவதை 

தனது   வலிமை  குன்றுவதைப்     பாங்கனிடம்   எடுத்துரைத்தான். 

                                                             பாடல்...24

ஐங்குணத்       தாறுமுகன்   ஏழு         பிறவி    எண்தலைவன்,

பைங்குவளை   விண்பொய்கைத்  தணிகை      போற்றியே       வாழ்பவன்  ,

நைந்து        நைந்து    பைநாகப்    பேரல்குல்     பனிமதிமுக

வைவிழிக்குச்       சால்பும்,    இழந்து      வலியிழந்தேன்       வாடி.

                                                 பொருள் 

   அன்பு,நாண் ,  ஒப்புரவு,கண்ணோட்டம்,வாய்மை என்னும்   ஐந்து

குணங்களிலும்  நிறையாக  நிற்பவனும்,  ஆறுமுகங்களை  உடையவனும், 

ஏழேழ்  பிறவியிலும், எனது   தலைவனாக   இருப்பவனும், (எட்டுகுணங்கள்  

கொண்டவனும்)  பசுமைவாய்ந்த   குவளைமலர்கள்  ஏழு  மலரும்  

 பொய்கையை   விண்ணவர்  தலைவன்   இந்திரனால்  தோற்றுவிக்கப்பட்ட 

பொய்கையை  உடைய    திருத்தணிகையிலே   வீற்றிருக்கும்  

முருகனைப்  போற்றிவாழ்பவனும் ஆகிய   நான், உள்ளமெல்லாம்  உருகி,

அந்த  அழகுமிகுந்த  பாம்புபோன்ற  பேரல்குலிலும் ,குளிரிந்த  மதிமுகத்திலும் 

கூர்மையான   வேல்போன்ற   கண்களுக்கும்  அடிமையாகி, அதேநினைவில் 

பண்பிழந்தேன்; வலிமையிழந்தேன்; வாடிதுன்புற்று   விழுந்தேன்"  என த் 

தான்   வலிமை குன்றியதற்கான  காரணத்தைப்    பாங்கனிடம்  சொன்னான் .

விளக்கம்.......1.  ஐங்குணத்தான்=   ஐந்து  குணங்களிலும்   நிறையானவன் 

முருகன்;   அவனது   அடிமை  நான்;  ஆனால்  இன்று  இவ்வைந்தையும்   இழந்து 

வாடுகின்றேன் "எனக்கூறுதல்  சிறப்பு.

2. பைங்குவளை  விண்பொய்கை=     புராண   வரலாறு  ...

3.   வைவிழி =    உரிச்சொற்றொடர் .  வை=கூர்மை  விழியின்  நோக்கால் 

                                 வீழ்த்தப்படுதல் .காதல் பார்வையில்   மயங்கல் . 

மெய்ப்பாடு..............அழுகை.

              பயன் .........ஆற்றாமை  உரைத்தல்.

                                                   8.  விதியொடு   வெறுத்தல் .

                                                                    கொளு 

சீர்தூக்கிச்     சாடிய     பாங்கனின்   சொல்லால் 

சீரிழந்த     தலைவன்     செய்விதி   நொந்தது.

பொருள்;--     தலைவனின்  காதல்   நோக்கத்தையே  சாடினான்  பாங்கன் .

தனக்கு    உதவும்    அவனே   இவ்வாறு  உரைத்ததும், தன்னிலை  தனக்கு 

வந்துள்ள   துயரை  நீக்கத்    தான்  செய்த  புண்ணியம்  கூட    உதவாத 

நிலையில் நொந்துபோனான்  தலைவன்.

                                                               பாடல் ...25.

வில்வேல்        கண்ணுள்      பாய்சரம்     தொல்மரபழி    பண்பாளனோ !

சொல்பாங்கன்   வல்லுளத்தைக்     கொல்லெனச்      சொல்ல         வள்ளிநாடி  

கள்ளம்        புரிந்து,      இல்நீக்கிட     முள்வேடர்    சொல்பொறுக்கா,

வள்ளி         வளமலைத்       தணிகையான்      தன்மைத்      தத்துவனே !  

                                                        பொருள் 

     வில்லும்.வேலுமாய்   வந்து  பாய்கின்ற   கண் நோக்கு, என்னும்   அம்புகள் 

தலைவனின்   தொன்மை  மரபுகளை  அழிக்கமுனைகிறதே!  அதுபற்றிக் 

கவலைப்படாத  தலைவன்   அவளையே   விரும்பும்  பாங்கில்  உள்ளானே !

என   நினைத்ததைமணத்தோடு வைக்காமல்  தலைவன்   நோகுமாறு 

கூறவும்  செய்தான்   பாங்கன் . அச்சொல்    பாங்கனின்    வாய்ச்சொல் 

தலைவனின்  மனத்தை   வாட்டியது;  வள்ளிமலைக்காட்டிலே   வள்ளியை 

நாடிச்சென்று,  பலகால்  அவளோடு   காட்டு மேடெல்லாம்   சுற்றிய  முருகன்,

அவளோடு   உடன்போக்கு  மேற்கொள்கிறான்; அதனை  அறிந்த  வேடுவர்கள் 

முருகனைச்சாடுகிறார்கள்; வழிகாட்டும்    நீயே  இப்படிச்செய்யலாமோ?

எனக்    கேட்டகாலை   அவர்களது  சொல்லைப்    பொறுக்கமுடியாது  

வேதனைப்    பட்ட    முருகனின்   தன்மைக்கு    இன்று   அவன்   அடியவனான 

தலைவனும்  பாணனின்   சொல்லால் துவண்டு   போனான்.

விளக்கம்....      1 வில் ----   முதலாகுபெயர்.  வில்லில்  பதியும்  அம்பு ;

                                                  அம்பு  போலவும், வேல்   போலவும்   கூர்மையாய்த் 

                                                  தாக்குவது. இங்கு  இவையிரண்டும்   உவமை.

2...... தொல்மரபு =    வழிவழி   வரும்  தமிழ்ப்பண்பாடு ; வீரச்செயல்கள், 

                                      பொருள்தேடல்,  போன்றவை  விடுத்து,  ஒருபெண்ணின் 

                                      கண்  பார்வைக்கு    அடிமை  ஆதல்.

3.  கள்ளம் புரிந்து =   யாருக்கும்    தெரியாமல்    இரவோடு  இரவாக  

                                   உடன்போக்கு   செல்லுதலாகிய   திருட்டுத்தனம்.

4.   முள்வேடர் =   வேடர்களின்   வாயில்  இருந்து   தோன்றும்   கொடுமையான 

                                  சொற்கள்;  முள்  போன்று  மனத்தில்   தைப்பதால் .  

மெய்ப்பாடு.......இளிவரல் 

             பயன் .....ஆற்றாமை   உரைத்தல் .

                                                  9.  பாங்கன்     நொந்துரைத்தல் /

                                                                      கொளு 

மகச்சனித்      தகவை    மனத்தகக்   குணத்தனே!

உகத்தன்மை   உன்குடி   உணர்ந்திலை   என்றான்.

பொருள்=     மக    நாளில்   புகுந்த    சனிக்கிரஹம்   போல,  உன்  வாழ்வில் 

நுழைந்துவிட்ட   தலைவியை  மனத்தினில்   நிறைத்து வைத்துள்ளாய்;

யுகம்  யுகமாய்ப்   பெருமை வாய்ந்த   உன்குடிப்பெருமையை  

நினைக்கவில்லை.  எனப்பாங்கன்   வருத்தத்தோடு  கூறினான்.

                                                     பாடல் ..26.

வேடர்கள்   வினாவெழுப்பி,   வேட்டை  விரிவுப்    பாணியில் .

காடுவளை    காலத்துக்   காய்மரத்    தணிகை      வழியில் 

பீடிழந்து,   வாடி      ஈடில்லாக்  கொங்கை   மேலுற்றவா 

தேடிடும்   தலைவ!  பாடுபுலவர்    புகழைப்    பாராய் !

                                                     பொருள் 

        வள்ளிமலையில்   வள்ளியை விரும்பி  வந்த   வேடமுருகன்  அவளோடு 

பேசிப்பழகுவதையறிந்த   வேட்டுவைத்தலைவனும்,   பிறரும்  முருகனைக் 

கையும்   களவுமாகப்   பிடிப்பதற்கு,  தேடு!  எங்கே!  விடாதே!   போன்ற  

கூச்சல்களை எழுப்பி, வேட்டையாடும்   பாணியில்   சுற்றி  வளைத்த 

காலத்தில்   காயத்துக்குலுங்கும்   மரமாகி  நின்ற   தணிகைவேலன்  வழியில் 

 அவனது   அடியவனான   தலைவனும், தணிகைச்சோலையில்   தலைவியைப் 

பார்த்து,  அவள் நினைவாகவே   வாடி, பெருமையிழந்து,   அவளின்  பின்னரே 

ஒடி,  நிகரற்ற   அவளது  மார்பகங்களில்   கொண்ட  அ ளவற்ற  ஆசை  

   கொண்டவனே! விடாது    அவளையே  தேடிடும்    தலைவா!  உனது   

பெருமை,புகழை   எண்ணிப்பார்!  புலவர்கள்   போற்றும்  புண்ணியனே! 

அப்பொற்றால்.குடிப்பெருமை  போன்றவற்றை   எண்ணி. இவ்வாறு  நடத்தலை 

விட்டுவிடு !  அதுவே  உனக்குப் பெருமை தரும்"  எனப்    பாங்கன்  நொந்து 

கூறினான். 

விளக்கம்.....  வினாவெழுப்பி =   வேட்டை  ஆடும்   காலத்து    எழுப்பும்    கூச்சல்.

2.  காய் மரம் =  வேடர்கள்  பார்வையிலிருந்து  மறைய,முருகன்   எடுத்த  

உருவம்.  அப்பகுதியில்   இல்லாத  காய்த்துக்குலுங்கும்   மரம்.

3.    மேலுற்றவா =   மார்பகத்தின் மீது  கொண்ட   ஆசை கொண்டவனே!

                                                          

             மெய்ப்பாடு.....இளிவரல் 

           பயன் .......தலைவனைத்  தெருட்டல் .

                                                      10.  இயல் இடம் கேட்டல் .

                                                               கொளு 

மனமது   துயரோனே!   மலரது    பொழிலிடம் 

குணமது   கூறிடின்    குலமது   சிறக்கும்.

பொருள் ;------     தலைவியின்   நினைவால்   துயருறும்  தலைவ !  அம்மங்கை 

தோன்றிய  பதி,    வாழ் இடம்,  அம்மையின்  பண்புநடவடிக்கைகள்   பற்றிக் 

கூறுவாயின்   உன்   துயர்   தீரவும் ,உன்குலம்   சிறக்கவும்  பாடுபட்டு,

முயல்வேன்'   என்று    பாங்கன்  கூறினான். 

                                                                பாடல்..27.

வள்ளல்      மகிழ்வள்     ளிமலை ?   வளம்நிறை    வண் தணிகை  ?

கள்ளமன    நல்லிதயப்    புள்ளி       மானின்   தொல்பதிதான்.

சொல்லுறை      நல்லிலக்       கணம்அள்     ளியுரை !    முள்ளில்விழு 

புள்ளிற       குபோல்துள்     ளுநல     வல்லவாம் ;     நற்றலைவ!

                                                                பொருள் 

    எனது   இனிய    தலைவனே!   உனது   மனத்தைக்    கொள்ளை   கொண்ட 

நல்லமனம்   படைத்த  புள்ளிமான்போன்ற   விழியும்,அழகும்  கொண்ட 

தலைவி,    வாழுமிடம்  அவளது  ஊர்,  முருகனாம்   வள்ளல்  வள்ளியைத்  தேடிச் 

சென்ற    வள்ளிமலையோ?  அல்லது    வளம்  மிக்கதாகிய  அமைதி நல்கும் 

தணிகை   மலை யோ?     என்பதையும்,  அவளது   குண  நலன்களையும்  

முறையே   கூறுவாயாக.  அப்படிக்கூறின்   முள்ளிலே  விழுந்த    சேலையைப் 

பக்குவமாய்க்     கிழியாமல்  சேதம்  அடையாமல்   எடுப்பதைப்போல 

மனவருத்தம்  இல்லாமலும்,  தடைகளைத்    தவிர்த்தும், உன்மனம்  

 கவர்ந்தவளை    உன்னருகு   இணைத்துவைப்பேன்; உனது   துயர்   நீக்குவேன்"

எனப்பாங்கான   தலைவனுக்கு   நற்சொல்  கூறினான்.

விளக்கம்;-------    1. புள்ளிமான் ......உவமை  ஆகுபெயர் 

2.     நல்லிலக்கணம் =   தலைவியின்    குண நலன்கள்;

3.    முள்ளில்  விழு  புள்ளிறகுபோல்  ....  உவமையணி . முள்ளில்  விழுந்த  சேலை 

                                              போல,  என்பது   உவமை. வேற்றூரில்  வாழும்   காவல் 

                                              மிக்க   தலைவியைத்     தலைவனோடு   சேர்த்தல் ,                                                              

                                              என்பது பொருள்.  இங்கு 

                                              பறவையின்   இறகுபோன்ற  மென்மை,அழகு கொண்ட 

                                             சேலை,  என   விரிவாக்கிக் கொள்க .

4.வல்லவாம் =        தலைவியை     உன்னோடு   சேர்த்து  வைக்க  நீ   கூறும் 

                                      சொற்கள், ஊர்,இடம்,பண்பு போன்றவை  எமக்கு  நல்ல 

                                      துணை  செய்யும்;  எனப்பொருள்.

மெய்ப்பாடு ..........அச்சம்.

             பயன்...........தலைமகனை   ஆற்றுவித்தல் .

                                                       11. இயலிடம் கூறல்.

                                                                         கொளு .

அழிந்தமன     வாருயிர்ப்   பாங்கன்   அறிந்திடச் 

செழுமனச்      செம்மல்     செவ்வுரை     செப்புதல்.

பொருள்; -------      தனக்காக  வருந்தி, வளத்தாள்  வாழ்விடம்  வினவிய 

உயிரன்ன    பாங்கனுக்கு ,  நல்லமனம்   கொண்ட தலைவன்,தலைவி  பற்றிய 

மென்மை   உரைகளை  விளக்கமாகக்   கூறியது.

                                                             பாடல்...28.

மானின்      விழி,மயிற்        சாயல்    மரகதக்     கிளிப்பேச்சு,

கூனிலாக்       குளிர்மதி         முகம்கொண்      டுலாவும்,   கார்மின்னல் 

வான்நிலா        வுடன்,வர       மருள்,வனி      தை,வள்       ளிமலை 

மான்மக        ளணைத்தணி      கையான்    மலர்ச்சோலை     மணமாம் .

                                                                பொருள்.

           விண்ணகத்து   உதித்த   இந்திரன்மகளான  தேவயானையுடன், தனது 

வரமருள்கின்ற   மற்றொரு சக்தியாக,   வள்ளிமலையிலே   அவதரித்த  

மானின்  மகளாகிய  வள்ளிப்பிராட்டியையும் அணைத்துக்கொண்ட 

திருத்தணிகை   மாமுருகன் வாழும்  மலர்ச்சோலையிலே    மானின் 

விழிகளையும், மயிலின்  சாயலையும்,  பசுங்கிளியின்  மொழியையும் 

முழுநிலவுக்குளிர்   முகமும்   கொண்டு   உலவுகின்ற   மின்னலன்ன 

இடையாள்  நறுமணம்   வீசும்  நல் மலராவாள் '    என்று இயலிடம்  கேட்ட 

பாங்கனுக்குத் தலைவன்   கூறினான்.

விளக்கம்;------ 1 கூனிலா =   கூன் + இல்லா   மூன்றாம் பிறை  போன்று, 

                                                          குறை மதியன்று;  நிறைமதி .

2.  வான்நிலா =  விண்ணகத்தில்   உதித்த  நிலவு;இந்திரனின்    மகளாய் 

                                  அவதரித்த  தேவயானை.

3.  வனிதை =  கன்னி ; முருகனுக்கு  இரண்டு  மனைவியர்; அருட்சக்தி 

                             இருவர்; தேவயானை,வள்ளிப்பிராட்டியார்.

                                                          12.  வற்புறுத்தல் .

                                                                         கொளு 

இயலிடம்   உரைத்த   இசைகெழு   தலைவனை,

மயல்தீர்      பாங்கன்    ஆற்றுப்    படுத்தியது.

பொருள்;------    தலைவியின்  இயல்புகள்,   வாழ்  இடம்  போன்றன    கூறிய 

தலைவனை,  ஆற்றுப்படுத்த, எடுக்கும்   முயல்வுகளைக்   கூறி,  அமைதிப் 

படுத்தினான்.

                                                                 பாடல்--29.

குறமகளிர்    கூடி     நிற்கக்    குழுவாட்டம்  ஆடுமயில் 

சிறையெடுத்த   சீர்த்தணிகை    செஞ்சோ      லைப்புனத்       தினிலே 

பறைகொட்      டும்,பைங்        கரமும்,    பனிமுகமும் ,      பசுங்கிளி 

விரட்டும்  விரியழகைக்      கண்டே         வருவன்;    கவலற்க.

                                                             பொருள்.

     வள்ளிமலையின்    தினைப்புனத்திலே   வேடுவப்     பெண்கள்   சூழ்ந்துநிற்க,

நடுவே   நின்றபடிப்   பறைகளின்     ஒலிக்கேற்பக்   குழுநடனம்   ஆடுகின்ற 

மயிலன்னாள்   வள்ளியை   விரும்பிவந்து, மலைமேடெல்லாம்   ஆடிப்பாடி 

உறவினர்களுக்குத்    தெரியாமல்  வள்ளியோடு   உடன்போக்கு  மேற்கொண்டு,

வள்ளியின்   பெற்றோரின்    வேண்டுகோளுக்கிணங்க  அவளை   மணம்  

 முடித்துக்   கொண்டு, திருத்தணிகை  வந்தமர்ந்த  தணிகையான்  மாமுருகன் 

மலைச்சோலைத்   தினைப்புனத்திலே காவல்  புரிகின்ற  தலைவியின்  

புள்ளினம்   ஓட்டும்  பறையடிக்கும்  பசுமைக்கரங்களும், பனிபோல்  குளிரும் 

நிலவென்ன  முகமும்,  பைங்கிளி   விரட்டும்   அழகும்   நேரில்   கண்டு 

தலைவியின்  பண்புநலன்களைக்  காண்பேன்; கண்டுவந்து  உனக்கு 

நல்வழி   காட்டுவேன்;  நான்  வரும்வரை   காத்திரு! மனம்  கலங்காதே!

எனத்     தலைவனை    ஆற்றுப்படுத்தினான்    பாங்கன் .

விளக்கம்;---1.  ஆடுமயில் =   மயில்போன்ற   வள்ளி. ஆடுதல்  மயிலுக்கும் 

                              வள்ளிக்கும்   பொது. மயில் ..உவமை. உவமைத்தொகைப் 

                              புறத்துப் பிறந்த   அன்மொழி.

2.... சீர்த்தணிகை =   பாலசிறப்புகள்   கொண்ட  தணிகை;  வள்ளியோடு,

                                          உடன்போக்கு  சென்றதும், பெற்றோர்   கண்டதும், 

                                         அவர்களது   வேண்டுகோளுக்கிணங்க  வள்ளிமலையில் 

                                        அவளை  மணம்  புரிந்துகொண்டதும்   ஆகிய  பல 

                                        சிறப்புகள்  கொண்டதால்   சீர்மை  பெற்ற  தணிகையான் .

மெய்ப்பாடு.........பெருமிதம்.

             பயன்.......வற்புறுத்தல் (  ஆற்றுப்படுத்தல்)

                                                       13.  குறிவழிச்சேறல் .

                                                                           கொளு .

தலைவன்    கூறிய    மலைபுனல்    வழியே 

தலைவியைக்     காணக்     கலைப்பாங்கன்    சென்றது.

பொருள் ;----     திருத்தணிகைச்   சோலை  செல்லும் வழியை  முறைப்படி,

மலை,ஆறு, நிலம், காடு  கடந்து  செல்லவேண்டிய வழியைத்  தலைவன் 

விளக்க, அவ்வழியிலேயே   பாங்கனும்  சென்றான்.

                                                      பாடல்...30.

நாரதன்    கூறிய      நாட்டுவழி    அறிந்து   நலத்தாள் 

கார்மலை    கான்யாறு   கடந்தே   கண்டவன்   தணிகையின்,

சீர்ப்புனம்    செஞ்சோலை   நறுநீர்   உறுகுளிர்   மலர்கள்  

வார்முலை    வண்ணத்தாள்    சேரிடம்    பார்த்தபடி த்        தெளிந்தான்.

                                                         பொருள் 

  முருகா!   உன்னையே   கணவனாக  வரித்து,  நெடுநாள்   தவம் இருந்த 

மால்மகளின்   இளையவள்  உன்னருள்படி   வள்ளிமலையிலே 

வேடுவர்   குலத்திலே   மான்மகளாய்ப்பிறந்து   வளர்கிறாள்;  அவளைக் 

கண்டு   வர   இதுவே   நல்ல தருணம்"  என   நாரதர்  கூறிய   நாடு, செல்லும் 

வழி, மலை  ஆறு  போன்றன   அறிந்து, வேடனாகிப்   புறப்பட்ட வன் 

வள்ளிமலையைக்   கண்டு,  அங்குவாழும்  வள்ளியைக்கண்டு,  காதல் 

கொண்டவன்  வீற்றிருக்கும்   தணிகை   மலையான்   ஆவான்;   அவனது 

மலைச்சோலையில்  அமைந்துள்ள   தினைப்புனம்,  அது சார்ந்த   பொழில்கள் 

நறுநீர்ப்பொய்கை,  குளிர்ந்ததும்,நறுமணத்துடனும்  விளங்கும்  மலர்க 

கூட்டங்கள் ; அவர்களிடையே   உலவும்   அழகே  உருவான  தலைவியோ  !

இல்லை!  மாறுபட்டவளோ?  என  முதலில் கலங்கிப்   பின்  நல்ல  முடிவுக்கு 

வந்தான்.  

விளக்கம்;---  1.  நலத்தாள் =   வள்ளிப்பிராட்டியார்.

2.வண்ணத்தாள் =  தலைவி. அழகேயுருவானவள் .

3.... சேரிடம் =  காவல்  காத்தும்,  ஆடிப்பாடியும்,  வாழும் இடம்.

   மெய்ப்பாடு..... பெருமிதம்   சார்ந்த   மருட்கை.

                பயன்...... உசாவி   உணர்தல் .

                                               14.குறிவழிக்காண்டல் 

                                                             கொளு .

சிலம்பன்   சொல்லிய   மலைவழிச்    சென்று,

நலம்புனை    மெல்லியல்       தலைவியைக்    கண்டது.

பொருள்;----      மலைநாட்டுமன்னன்   மகிழ்  தோழன்   கூறிய   வழியே  சென்ற  

பாங்கன்   அழகினால்   புனையப்பட்ட   மென்மை   இழையோடிய  

 தலைவியை     மறைந்திருந்து    கண்டான்.

                                                         பாடல்...31.

கொழுங்கா      செழுநாவல்   பழுமரம்   விழுதமிழ்ப்     பாட்டி,

முழுமுதல்       பழுதில்லா     வரக்கனித்       தணிகை     போல,

விழிவேல் ,     சுழிமுடி,     மொழித்தேன்    பொழியருள்   முகத்தாள் 

செழியன்      உழுதுளம்     கவர்ந்தாள்    கண்டனன்     அழிவிலை . 

                                                  பொருள் .

   நன்கு  வளர்ந்த  செழிப்பான    காட்டினிலே   வழிச்சென்ற  முதிய  தமிழ்ப் 

பாட்டியான   அவ்வைக்கு,  நாவல் மரத்தேறி ,  நாவல்கனியை  

 அளிக்கவிரும்பிய  முருகனாம்   வேடச்சிறுவன் சுட்ட பழமா? சுடாத பழமா?

எனவினவி  நல்லகனியாகிய   நல்வரங்களை  அளித்த   தணிகையான் போல் 

          வேல்போன்ற   விழியும்,  சுருண்ட   கூந்தலும்,  தேன்பொன்று   இனிக்கும் 

மொழிபேசும்   வாயும்,  பொழிகின்ற அருள்கொண்ட  முகத்தையும்   கொண்டு,

செழியனாம்  பாண்டியன் போன்ற  எனது   தலைவன்   மனத்தைத்   தனது 

பார்வையால்   கவர்ந்தவள்  இவள்தானே!  ஐயமில்லை;  தீமையில்லை;

அத்தலைவியும்   இவளே;    இடமும்  இதுவே;;  என்று  பாங்கன்    தன் 

மனதிற்குள்  சொல்லிக்கொண்டான்.

விளக்கம்;   1.  விழுதமிழ் =   எளிமையும்,  உயர்க்கருத்தும்,  அறச்சார்பும்,

                                                         நீதிநெறியும், இறைபோற்றலும்  கொண்ட  தமிழ்.

2.  முழுமுதல் =  அழிவேயில்லாத   நிலைத்திருக்கும்  முதல்வன்;                                                                    

                                  அரி,அயன்,அரன்   ஆகிய   மூவர்க்கும்  முந்தையவன்;

3.  பழுதில்லா வரக்கனி=    குற்றமற்ற   நன்கு பழுத்த  நாவற்கனி; அதுபோல 

                                                        அழிவில்லாத  தாகிய  நிலையான  நற்கதி  நல்கும் 

                                                        வரங்கள் .

4.  செழியன்  =   தமிழ் வளர்த்த  பாண்டியன்போன்று,   வீரமும்,  விவேகமும் 

                                கொண்ட  தலைமகன்.

5.  உழுது=   தலைவனின்   மனதில் வேட்கையும்,  விருப்பும், காதலும்  வருமாறு 

                       நன்கு,இனிமையுடன்   பழகுதல்.

  மெய்ப்பாடு......   பெருமிதம்.

               பயன்....தெளிதல் 

                                                             15.தலைவனை  வியந்துரைத்தல் .

                                                                            கொளு 

அழகும்  உருவும்,  பண்பும்  கண்டவன் 

பழகியோன்   தன்னை  வியந்து  போற்றினான்.

பொருள்;---  தணிகைச்  சோலையிலே  தான்   கண்ட  தலைவியின்  அழகும்,

பண்புநலன்களும்  கண்டவன்  தனது  தலைவன்  பெருமையை  வியந்து 

சிறப்பித்தது.

                                                         பாடல்....32

வானசாரி     வருணித்த    வள்ளி    வடிவால் ,  வந்தவன் 

தானமளி    தண்ணழகால்      மோனம்      மாறாத    தணிகை  

பூணணி     பொலிவாம்      புத்தழகு   பொற்பொடு  பேசிய 

மாண்பணி    மாமலையான்   மேதக்க   மேன்மையே   மென்மையாம். .

                                                       பொருள் 

    எப்பொழுதும்    உலகெல்லாம்    சுற்றிக்கொண்டே   இருக்கும்   நாரதன்,

மாலின் மககளான   இருவரும்,  முருகனையே  மணவாளனாக  விரும்பித் 

தவம்  இருந்ததையும், அருள்புரிந்த  உனது   சொற்படி மூத்தவள் இந்திரன் 

மகளாகவும், அடுத்தவள்  நம்பிராஜன்   என்ற  வேட்டுவமன்னன்   மகளாகவும் 

அவதரித்து, இன்று,   வள்ளிமலையிலே  உன்  வரவிற்காக   ஏங்கிநிற்கும் 

வள்ளியின்  அழகைப்   பண்புநலன்களைச்   சொல்லி மாளாது;  அவளை  

உடனே  சென்று  கண்டு,  மணமுடித்து   வருக"   என்று கூறினார்.  

அது  கேட்ட முருகன்  அங்கு சென்று, வள்ளியைக்கண்டு  காதலித்து,  ஆடிப் 

பாடி, அவளழகை   வியந்தபோதும்  ஞான  வழியிலேயே  திருத்தணிகை  வந்து 

தாங்கினார்;  அதுபோலவே,

    அவனடியவனான   எம்   தலைவனும்   இத்தலைவியைக்   கண்டு, அவளின் 

அழகைவியந்து,  அவளோடு பேசி, காதலுற்றான்;  ஆயினும்  தனது  உயர் 

பண்பிற்கேற்ப நடந்துகொண்டான்;  அவன்   கூறிய   அவளின்  அழகும்  பண்பு 

நலன்களும்  அப்படியே   அவளிடம்  உள்ளன;  மேன்மை மிக்க  தலைவனின் 

மேன்மையை  எவ்வளவு   போற்றினாலும் தகும்!   எனப்    பாங்கன்   வியந்து 

கூறினான்.

விளக்கம்;--1.வானசாரி =  தத்பவ  வடசொல் . வான்   வழியே   சுற்றிக்கொண்டே 

                                                      இருப்பவர்; மூன்று  உலகிலும்  செல்பவர். இதனால் 

                                                      அவருக்கு,"திரி லோக சஞ்சாரி "என்ற  பெயரும்                                                                    

                                                      உண்டு.

2. வந்தவன் =     நாரதரின்   அழகு  வருணனை  கேட்டு, வள்ளியைக்   காண 

                                வள்ளிமலை   வந்த  முருகன்.

3.   பொற்பு =      அழகும்,பண்பும் இயைந்த  தலைவி.

4.  மேதக்க மேன்மை =  உயர்ந்ததாகிய  பண்பு நலன்கள் ;தலைவனின் குடிக் 

                                                 குலப்பெருமைகள்.

இப்பாடல்  எடுத்துக்காட்டு   உவமை அணி   ஆகும்.

மெய்ப்பாடு ....மருட்கையைச்    சார்ந்த   அச்சம்.

             பயன் ... தலைமகனை  வியத்தல் .

                                                             16.கண்டமை   கூறல் 

                                                                            கொளு 

தலைவியின்    தனிமைத்   துயரைத்   தலைவன் 

விளங்கும்  வகையில்   விரித்து   உரைத்தது.

பொருள்;-----   தான் கண்ட  தலையின்  அழகு,பண்பு  போன்றவற்றைப் 

பாராட்டிய   பாங்கன் ,  உன்னையே   நினைந்து  தவிக்கும்  தலைவியின் 

துயரம்  அறிந்து   ஆவன  செய்க"  என்று தலைவனிடம்  கூறியது.

                                                              பாடல்--33.

தணிகை      மணியின்   நனிமனத்தே   நல்லிடம்   வேண்டியே 

பிணியுறு    காதலால்   பணிந்து,நாள்    போற்றிடும்     வள்ளிபோல்

துணையென,    மணமென ,  இணையென   ஏங்கித்    தவிக்கும் 

மனமுடை        மாண்பின்    மதிமுக      மலர்விழி    மறவேன்.

                                                               பொருள் 

வள்ளி  மலையிலே   வேடனாக   வந்து, தன்னோடு  ஆடிப்பாடிய  வேடமுருகன்,

திருத்தணிகையிலே   வாழ்கின்ற   மாமணி; அத்தலைவனின்   மனதிலே  

தனக்கு  ஓரிடம்  வேண்டும்"  தன்னை   அவன்    மணம்  புரிந்துகொள்ள

வேண்தும்"   என,அவன்மீது   கொண்ட   காதலால்   நாளும்   போற்றும் 

வள்ளிமலைக்   குறமகள்   வள்ளிபோல,

   உன்னைச்   சந்தித்த பின்னர்   நீயே  துணை;  நீயே  தன்னை   மணம்  செய்து 

கொள்ளவேண்டும்;  தனக்குக்    காவலாக   இருக்கும் இணை   நீயே;  

என்றெல்லாம்   ஏங்கித்தவிக்கும்  மனத்தோடு  நிற்கின்ற  பண்புகொண்ட 

நிலவுபோன்ற  முகமுடையாளை. குவளைமலர்போன்ற  கண்ணுடையாளை 

நான்   கண்டேன்; மறக்கமுடியாத   அப்பண்புடைய  குலமகளை   நீயும் 

ஒருபோதும்   மறவாதே!  எனத்   தான்  கண்ட தலைவிபற்றிக்  கூறி, 

அவளே   உனக்கு    ஏற்றவள்  என்பதையும்   உணர்த்தினான் பாங்கன் .

விளக்கம்;---  1..மதிமுகம்,மலர்விழிகள் ==  உவமைத்தொகைகள் .

  இப்பாடல்  உவமையணி .

மெய்ப்பாடு..... உவகை

பயன்....தலைமகனை  ஆற்றுவித்தல் . 

                                       17. செவ்வி செப்பல் .

                                                   கொளு .

அழகுறு   அன்னம்   அசைவதைக்   கண்டேன்",

தழலோன்   தணிகை ;  விழுப்பாங்கன்   விளம்பியது.

பொருள்;----    தலைவனே!  மலைநாட!   உன்மனம்   கவர்ந்த  அழகே 

உருவான   அன்னம்போன்று  மென்னடை   கொண்ட  தலைவியை   நான் 

கண்டேன்"  என்று  தலைவனிடம்  பாங்கன்   சொன்னான்.

                                                        பாடல்..34.

காயாத    கானகத்தே   கவின்மாங்   கனியொன்று   கண்டேன் 

பாயருவிப்     பைந்தமிழ்ச்    செந்தணிகைச்    செவிசார்    செய்திபோல் 

மாய்மன      மருளது  நீங்கி,   வாய்பவள   வேய்முத்து 

சேய்வில்கண்  சீர்கனிமுலை தேயிடை  சேர்பொழில்   கண்டேன்.

                                                      பொருள் 

   நன்கு  வளமான  பசுமை    மாறாத   வள்ளிமலைக்   காட்டினிலே  

அழகும்,இனிமையும் ,  கொண்ட  பக்குவமாய்ப்   பழுத்து   விளங்கும் 

கனி போன்ற  வள்ளியம்மையைக்  கண்டேன்"   எனப்படிவந்த   நாரதரின் 

சொல்  கேட்டு, மனமெல்லாம்  வள்ளியைத்   தேட , வள்ளிமலை   நோக்கி 

நடந்த  பைந்தமிழ்க்காதல்  முருகன்,  திருத்தணிக்கை   வீற்றிருக்கும்  முருகன் 

வள்ளிமலை   நோக்கி    நடந்தானே ,அந்தப்   புனித  நிகழ்வுபோல ,

            பாசங்களில்  இருந்து, கலந்து,  மாயத்தில்  மூழ்கிய  மயக்கமனத்தில் 

கலக்கமற்ற   நோக்கும்,  தெளிவும்   தோன்றிட, பவளம்  போன்ற   செவ்வாயும்,

மூங்கிலில்தோண்றிய  முத்துபோன்ற  பல்வரிசையில் விளங்கும்  ஒளியும்,

தீமை அழித்து,நன்மை   அளிக்கும் முருகனது  வில்  போன்ற புருவம்  சூழ்ந்த 

கண்களும்,ஒருங்கே  பழுத்த  மாங்கணிபோன்ற  மார்பகமும், இக்கனிகளைத் 

தாங்கியதால்,  தேய்த்து   சிறுத்த  இடையும் ,கொண்ட  அழகுப்பொழிலை 

தணிக்கைச்   சோலையிலே   கண்டேன்; நீகூறிய    வருணனைகளின்   தலைவி 

அவளே.  என உணர்ந்தேன்"  என்று, தான்   கண்ட   தலைவியின்   அழகை 

அப்படியே   தலைவனிடம்   எடுத்துரைத்தான்.

விளக்கம்;----   1.   காயாத=   காய்ந்து  போகாத  என்பதே  பொருள்;  ஆயினும் 

                                                         அதனுள் வளமை  மிகுந்த ,   செழுமை  மிக்க                                                                         மரங்கள்  நிறைந்த, மனதின்  மகிழ்வு                                                                                         நிலைத்திருக்க, முதுமை  சாராது,இளமை சார்ந்து,

                                                       எனப்பல   பொருளும்  சேர்ந்து  விளங்கும்.

2.  மாங்கனி =      மாம்பழம்.  இனிமையும்,வளப்பமும்   நிறைந்தது;                                                                                      அழுகாதது; என்றும்   இளமை  நிலைத்தது.

3.  மாய்மனம்=    ஆணவம்  கன்மம்   மாயை  நிறைந்த  மனம்;  மாயையினால் 

                                   செம்மையிழந்த   மனம்.

4.    தேயிடை =   தேய்ந்துபோய்  சிறுத்து ,இல்லாததுபோல்   தோன்றும் இடை .

                                  இணைமாமுலைகள்   பாரம்  தாங்கமுடியாமல்   தேய்ந்து 

                                   சிறுத்த  இடை .

   மெய்ப்பாடு.......உவகை.

               பயன்  .....தலைவனை ஆற்றுவித்தல் .

                                                           18.  அவ்விடத்து   ஏகல் .

                                                                             கொளு 

என்னுயிர்   மன்னவன்"  எனவேங்கும்   இயலுணர் 

தென்னவன்   தென்தணிகைத்      தென்றல்   நாடியது.

பொருள்;------     தலைவியின்    மனநிலையை, மனம்  கொண்டவன் இவனே"

எனப்போற்றும்  பாங்கினைப்    பாங்கன்   வழியே   உணர்ந்ததும், அவளைக் 

காணத்    தணிகைச்சோலைக்குப்   புறப்பட்டான்.

                                                           பாடல்....35.

சூரமயில்    சேவல்கொடி    வீரன்   தாரிலொளி  வள்ளி

ஈரமனக்     கார்த்தணிகைப்    பேரருள்    சோலை    நாடியே ,

ஆருயிர்     அன்னத்தைக் ,   கூரம்பைச் ,  சீரிதழைக் கனியை 

ஈரிடை    கண்டபின்   வீறுயிர்   சிறக்கும்;       எனச்சென்றான். 

                                              பொருள் 

   சூரனாகிய     அரக்கனை  அழித்து,  அவனுக்கும்   அருள்  செய்யும்  முகமாக,

ஈருடலான   அவனது  இருகூற்றையும்   மயிலும்,சேவலும்   ஆக  மாற்றி.

ஊர்தியாகவும்,   கொடியாகவும்  கொண்ட வீரன்;  அவனது    மாலையணிந்த 

மார்பிலே  ஒளிவீசும்  மாலையாக  வந்தருள்புரியும்  வள்ளிப்பிராட்டியின் 

கருணை  மனம் போல்   விளங்கும்   தணிகை   மலைச்     சோலையை  

நாடிடுவேன்; அங்கு 

            எனது   ஆருயிர்   அன்னம்போன்ற  நடையாளை,  கூர்மையான  

அம்புபோல்   நோக்கும்  கண்ணுடையாளை,  வரிசை வெண்பற்கள்  சூழ்ந்த 

இதழ்  உடையாளை, கனிபோல்  இனிமையும், தோற்றமும் கொண்ட  

முலையாளை , ஈர்க்கு  போல் மெலிந்த   இடையாளைக்   காண்பேன்;

அவளைக்கண்டபின்னரே   என்னுயிர்  என்னுடலில் நிலைக்கும்"  என்று 

சொன்னான்.

விளக்கம்;------   1.கார்த்தணிகை =   குளிர்ச்சி நல்கும்  திருத்தணிகை ;

                                 முருகனின்  அரக்கன்   அழித்த  சினத்தை   மாற்றி,

                                 வள்ளிக்காக    வேடுவர்களோடு   போரிட்ட  சினத்தை  மாற்றி,

                                 குளிர்ந்த  மனதை   அளித்தது;  வழிபடுவோர்க்கு  வரமருள் 

                                செயலால்  நல்வாழ்வு   அளிக்கும்  முருகன்   வீற்றிருப்பது.

2.   அன்னம்,  அம்பு,  கனி.  =    உருவகங்கள்.

3.    வீறுயிர் =   வாழ்வும், வளமும், ஏற்று, துன்பத்துயர்களை   அனுபவித்தும் 

                              வாழ்வை   எதிர்கொள்ளும்  எழுச்சி  பெற்று  விளங்கும்   உயிர்.

                             (ஆன்மா)

மெய்ப்பாடு...........உவகை.

            பயன்..........ஆற்றாமை   நீங்குதல்.

                                              19.மின்னிடை மெலிதல் .

                                                               கொளு 

கலைமான்    மெலிந்தனள்    தலைவனை    நினைந்து.

பொருள் ;-------     பிரிந்த   தலைவன்   வாராமை   நினைந்து   தலைவி 

வாடி, மெலிந்தாள் . 

                                                     பாடல்-- 36.

வேடுவர்    நிலைப்பாட்டால்    காடு   நீங்கிய   தணிகையான் 

நீடுதுயர்ப்      பிரிவால்   வாடுமன       வள்ளிபோல்    வாடி 

ஈடில்லாக்     கூடல்     திளைத்திட    வருங்கால்     பீடுவழி 

நாடிடா    மயக்கமோ?    தேடிவரு  பேடுயிர்      தாங்கா.

                                                        பொருள் 

   வள்ளிமலையிலே  வள்ளியை  விரும்பிவந்து,  அவளோடு   ஆடிப்பாடி 

ஆடியகாலை  வேடர்களின்   இடையூற்றினை   மாற்ற,  மரமாகி, முதியோனாகி 

மாறியபின்னரும்,   தொல்லை  நீளவே  அவளைச்சிறை  எடுத்தபொழுது, 

அங்கும்   வந்தவேடர்கள்   மணக்காமல்   இவ்வாறு   உடன்போகல்  

 பண்பாமோ?   எனவினவ ,அதனால்  சினந்து  சென்றுவிட்ட  முருகனைப் 

பிரிந்து,தவித்த   வள்ளி,  வாடி   வதங்கியதுபோல்,

          தலைவியும்   தன்னோடு  கூடி,முயங்கி   இன்பம்   துய்த்த   தலைவன்,

பிரிந்து சென்று  மீண்டும்   தன்னை  நாடி   வராதகாலத்து   வாடி  வதங் கினாள் 

  நிகரில்லாத   காதல்  கூடலில்   திளக்கவேண்டும் என்ற விருப்போடு  

தணிகைச் சோலை  நோக்கி வரும்    தலைவனே!  வருங்கால்   மனதிலே 

வந்த   காதல்நினைவுகளால்   மயக்கத்தால்,  கூடும் சோலையை  மறந்தீரோ?

மீண்டும்    வழிதேடி   நீவிர்  வரும்வரை  இவ்வுயிர்   நில்லாது; பிரிவினத் 

தாளாமல்  எனது உயிர்  போய்விடும்"  எனத்தலைவி  வருந்திக்கூறினாள் .

விளக்கம்;  1.  வேடுவர்  நிலைப்பாடு=   வள்ளியைக்   காதலிக்க   முருகன் 

முயன்ற  காலத்தே   உடன்  பிறந்தார்,  நம்பிராஜன்   இவர்களால்  ஏற்பட்ட 

செயற்பாடுகள். மரமாகி மறைந்து,  கிழவனாகி  மறைந்தது ;  ஆயினும் 

உடன்போக்குக்  காலத்தே  பண்பாடு  கூறித்  தடுத்தது,   போன்றவை.

2.  ஈடில்லாக்கூடல் =    நிகரற்ற   காதல்  செயற்பாடுகள்;  காண்டல்,

                                              ஐயம்,தெளிவு, தழையளித்தல், புகழ்தல், தீண்டல்,

                                               கலவி,இன்பநுகர்வு.போன்றன கொண்ட  கூடல்.

3.   பீடுவழி =     பெருமை  மிக்கதாகிய    தணிகைத்    தினைப்புனச்சோலை 

                                செல்லும்   பெருமை மிக்க வழி.

4.      தேடிவரு =  தேடிவருகின்ற   காலம்   வரை"   என்பதை    உள்ளடக்கிய 

                                  சொற்றொடர்.

    மெய்ப்பாடு............அச்சத்தைச் சார்ந்த  மருட்கை.

                  பயன்............உசாவி   ஆற்றாமை  நீங்குதல்.

                                        20.  பொழில்கண்டு மகிழ்தல் .

                                                               கொளு 

வண்ணச்       சோலைப்      பண்ணவள்    வண்ணம்;

மன்னவன்   மனத்தில்    மயக்கம்    மறைத்தது.

   பொருள்=      தலைவியைக்   காணத்   தினைப்புனச்சோலை     வந்தவன் 

காணும்    மயிலும்,  பிறவும்   தலைவியாகவே   காட்சி அளித்தளின் 

தலைவியைக்  கனதுபோலவே   மகிழ்வடைந்து   சோர்வு நீங்கி  நின்றான்.

                                                   பாடல்--  37.

தணிகைமலை    வணங்கியே     பணிவோர்   கண்ணின்   விருந்தாய் 

மணிமயில்     மற்றையன    முருகனாய்த்   தோன்று   மாப்போல 

அணிமலர்,      அம்கொடி ,  ஆலிலை,   குவளை,   கருமேகம் ,

கணித்தன   இனியாள் ;  களித்தன   மனமே!  பிணிஏன் ?.

                                                        பொருள் 

    திருத்தணிகை  வீற்றிருக்கும்      முருகனை   வணங்கிப்   போற்றச்செல்லும் 

அடியவர்கள்.  முதலில்   மலைமீது   ஏறிச்   செல்வர்;  செல்பவர்களுக்கு 

மனதிற்கும்  கண்ணிற்கும்   விருந்தாய் இயற்கை  அங்கு   காட்சி   தரும்.

அருவிகள்,   அகழ்பொய்கைகள் ,குவளைமலர்கள்,  தாமரை மலர்கள், 

சோலைகள்,  மயில்,  அன்னம்,  போன்ற   பலவகையானவற்றைக்  காண்பர்;

அவைகள்    எல்லாம்   அவர்கள்  மனதிலே   முருகனையே  கொண்டுவந்து 

நிறுத்தும்; [ஆன்றவரங்கள்   அருளும்  குளிரருவி ; ஆழ்ந்த  கருணை,இரக்கம் 

கொண்ட பொய்கைமனம்,  குவளை மலர்க்கண்கள் , செந்தாமரை  முகம்,

பசுமை    வாய்ந்த   அருள்பாலிப்பு, ஊர்தியும்,சாயலுமாய்   விளங்கும்  மயில்,

அருகே   நிற்கும்  வள்ளியும்,  தேவயானையும்  அன்னமென விளங்குபவர்கள்;]

   அக்காட்சிபோல ,

           இச்சோலையும்   என்னவளை  எனக்குமுன்   காட்டுகின்றன;  இங்கு 

மலர்ந்துள்ள   தாமரை,  அவள் முகத்தைக்  காட்டுகின்றன; கொடியோ  

அவளது   இடையை  நினைவூட்டுகின்றது ; ஆள ,அரசமரத்து   இலையோ 

அவளது  அல்குலை  நினைவூட்டுகிறது; குவளைமலரோ   கண்ணைக் 

காட்டுகிறது; சோலையின்    மேற்பரப்பு  மேகங்களோ   கூந்தலை  

நினைவூட்டுகிறது.  தலைவியை   என்முன்   காட்டிய   சோலையால்  

எனது    துயரும்   என்னை விட்டு   நீங்கிவிட்டது. என  மகிழ்ந்தான்  தலைவன்.

      விளக்கம்===   1.மற்றையன=   அருவி,பொய்கையை,மலர்கள்,பறவை 

                                                                போன்றன.

2.  கணித்தன =   கண்முன்னால்   கொண்டுவந்து  நிறுத்தி  மகிழ்வை 

                                   முடிவு செய்தன.இது முகம்,இது  இடை இது  அல்குல்பரப்பு,

                                   இதுகண் ,  இது  கூந்தல்.   எனக்கணித்தன.

3.    இனியாள் ==   இனிமை  மிக்க   தலைவி.

       மெய்ப்பாடு.....உவகை 

                    பயன்.....மகிழ்தல்.

                                                                21.  உயிரென   வியத்தல் .

                                                                              கொளு 

நறுமணச்   சோலையின்   நன்மலர்    அருகே,

திருமணத்    தேவியின்    தரிசனம்  வியந்தான்.

பொருள்;-----      தணிகைமலைச்   சோலையிலே, பூத்துக்குலுங்கும்  மலர்களின் 

நடுவே  நல்மனத்தோடும் மணம்   விரும்பும்  நிறைவோடும்,என்    உயிரன்ன 

தலைவி  காட்சி  தருகிறாள்"  எனத்    தலைவன்   வியந்து  கூறினான் .

                                                   பாடல்---  38.

தேயம்    தணிகைமலை   ;  ஆயமோ    ஆறிரு     கரங்கள்;

நேயமோ       நீலமயில் ;   ஈயல்   எழிலாறு    முகங்கள்;

தூய காதல்       புணர்வில்   சாய்ந்தாய்ந்து    மகிழ்ந்த   நெஞ்சத்தாள் 

தோயமிழ்தாய்    காய் நிலவாய்க்     கண்முன்    காட்சி     தருகிறாள்.

                                                   பொருள் 

திருத்தணிகை    மலையைத்     தனது  இருப்பிடமாகவும்,  மலைக்கடவுள் 

அருள்பாலிக்கும்   பன்னிரண்டு   கரங்களின்  பாச உணர்வைத்    தனது 

தோழியர்களாகவும்,  அன்பும்,அரவணைப்பும்   மிக்க  ஊர்தியாகிய 

மயிலின்  பண்பாட்டைத்   தனது  நேயமாகவும்,  உலகோருக்கு   வரையாது 

அருளும்,கருணையும்   வழங்கும்   அழகுபொங்கும்    ஆறுமுகங்கள்  போல 

எதலைக்  கொண்டும்   விளங்குபவள்,  முந்தையநாள்   நானும்,அவளும்  

கொண்ட   தூய்மையான  இன்பச்சேர்க்கையிலே  என்மீது  சாய்ந்து,  என்னைத் 

தழுவித்தழுவி மகிழ்ந்த   மனத்தைக்  கொண்டவள், இதோ    என்முன்  அந்தச் 

சோலையிலே   தோய்ந்த  அமுதம் போலவும், முழுநிலவு  போன்றும் ,

என்னுயிர்போன்றவள்   காட்சி   தருகிறாள்"   என்று  தலைவியை   வியந்து 

பாராட்டுகிறான்.

விளக்கம்===   1.  ஈயல் =   அளித்தல் .   அடியவர்களுக்கு  அவரது   மனத்துயர்  

                                                     நீக்கி அருளும், முகங்கள் ;

2.  சாய்ந்தாய்ந்து=    கலவி   நுணுக்கம்;  

3.   தோயமிழ்து==    தோய்ந்த   பக்குவமான  சாவை  அறவே நீக்குகின்ற   அமுது.

                                           தலைவனின்   மனமறிந்து,செயல்பட்டு,                                                                                   மாறாதகுணம்கொண்டு,  துன்பமதுயர்  அறவே                                                                    நீக்குபவன்  தலைவி.

4.  காயநிலவு======   துளியும்   கருமை  படறாத, இருள் பரவாத   நல்நிலவு 

                                             மென்மையும், வண்ணமும்,  ஒளியும்   நிறைந்த  நல்லுடல் 

                                             கொண்டு விளங்கும் தலைவி.

  மெய்ப்பாடு.........      உவகை.

               பயன்..........      மகிழ்தல்.

                                                22.தளர்வு அகன்று   உரைத்தல் .

                                                                       கொளு 

பிறைநுதல்    பெண்மான்    பொழிலதில்    தனியே 

நிறைமதியாய்   நிற்கக்    குறையகன்று  நிறையானான்.

பொருள்==       மூன்றாம்பிறை   போன்ற நெற்றியை  உடைய வளாகவும்,

மானின் விழிகள் போன்ற கண்ணை  உடையவளாகவும்   விளங்குகின்ற  

தலைவி,  ஆயர்   கூட்டம்  சூழாமலும், ஆடிப்படாமலும்  தன்னந்தனியளாக 

நின்றிருப்பதைக்   கண்டு, தனது    மனத்துயரை அகற்றி,மகிழ்வுடன் 

தலைவியை எளிதாக   சந்திக்க  வாய்ப்பு  கடைத்ததை  எண்ணி  மகிழ்ந்து 

நின்றான்.

                                                   பாடல்--39.

தணியா ச்    சினத்தும்   தனைநாடி   வருகின்றோர்க்    கருளும் 

தணிகைச்    சோலையிலே    தவழ்மதி    தனிநின்ற    தென்ன,

அணியருவி   குடையார்; பந்தாடார் ;  அலர்மலர்  கொய்யார்;

நனிசுகம்   சொல்லார்;   நற்றவ நிற்றலோ !பொற்றொடி யே .

                                                     பொருள் 

     அரக்கர்  அழித்த பின்னரும்,வேட்டுவரது   முரண்பாடு நீங்கியபின்னரும்  

மாறாத   சினத்தைத்   தணிக்க  இங்கு  வந்து  தங்கியபோதும்,  தங்களது 

துயரைப்போக்கவேண்டித்      தன்னை  நாடிவரும்    அடியவர்களுக்கு 

வாரமும்,வாழ்வும்   அளிக்கும்,  தணிகைமலையான்   சோலையிலே,

  வானத்துத்    தவழ்கின்ற   மதியானது   தனியே   நிற்பதைப்போன்று,

ஆயர்கூட்டத்துடனே   அருவி   ஆடச்செல்லாமலும், பந்து  ஆடாமலும் ,

மலர்ந்த    சோலை மலர்களைக்   கொய்யாமலும், இனிய  கிளிகள்  போன்று 

இசைமொழி   பேசாமலும், முருகனிடம்   வரம் வேண்டித்   தவம்  செய்ய 

நிற்கின்றவர்போல     அழகிய  பெண்ணே!  இப்படித் தனிமையில்   நிற்பது 

எனோ?  எனவினவிய   தலைவன்   அவள்   தன்னந்தனியே   நிற்பது   தமக்கு 

நல்ல  வாய்ப்பு"  என்று   கருதினான்.

விளக்கம்;------  1தணியாச்சினம் =  குறையாத   சினம்;  மனா அழுத்தம்;

                                                                          தேவர்களுக்கு  உண்டான  துயரத்தை  

நீக்கிடப்   போர்புரிந்து  அரக்கர்களை   அழித்தபின்னரும்  தணியாமை ;

வள்ளிக்    காதல்நிகழ்வால்    வேடுவர்கள்  நடந்துகொண்ட முறையால் 

ஏற்பட்ட  சினம்.

2.  தவழ்  மதி =  அன்மொழி;  

3.   அணி  அருவி  =  அணி=அழகு.அருவி=  நீர் வீழ்வு  

4.   பொற்றொடி=   பொன்னாபரணங்களை    அணிந்த  தலைவி.  அன்மொழி.

5. நனிசுகம்=  இனிமை வாய்ந்த   கிளி; நனி----- உரிச்சொல். சுகம்---தத்பவ  

வடசொல் 

    மெய்ப்பாடு.......உவகை 

                 பயன்........ மகிழ்தல் .

                                                          23.  மொழிபெற  வருந்துதல் .

                                                                              கொளு 

கூடல்   விரும்பியோன்   வாடலுற்று    உரைத்தது;

பொருள்;----   மனத்துயர்  நீங்கித்   தலைவியைக்   கண்டவன் , அவளோடு 

இணைந்திட   விரும்பினான்; அது   இயலாமற்போகவே  மனம்  வாடி  

உரைத்தான் , என்னுயிர்   நிலைக்க    ஒருசொல், கூறுவாய் ! என்றான்.

                                                            பாடல்----   40.

மண்ணில்   நல்ல   வண்ணமாம்   வளத்தணிகை   மாமுருக !

புண்ணெனத்     துயரழிப்    பெருவரம்    கேட்கும்     பக்தன்போல் 

கண்ணெனக்    கண்டவுன்     களிகூடல்   கொண்டிடக்     கூர்மனப் 

பண்ணிசைத்து   விண்ணக   விரிவே!  வியன்முத்     துதிர்ப்பாய்!

                                                           பொருள்.

   இவ்வுலக  நிலப்பரப்பில்   நன்மை,அருள், கருணை  என்ற  நன்மை  மிக்க 

தன்மைகளைத்   தனது   குணமாகக்    கொண்டுள்ள  திருத்தணிகை  

முருகனைப்   போற்றிடும்    அடியவர்கள் ,  முருகா!  எமது   வாழ்வில்  

தோன்றும்,  இல்லாமை, பிணி, போன்ற பற்பல  துயர்கள்  எம்மை   வாட்டி 

வதைக்கின்றன;   அவைகளை   நீக்கி,  நன்மை  அளிக்கும்   நல வரங்களை 

எமக்கு   அளிப்பீராக "  என  வரம்   கேட்கும்    அடியார் போல,

      விண்ணகத்தின்    நிறைந்திருக்கும்   இன்பமயத்தின்   விளக்கமே! 

உன்னைக்   கண்டேன்;  கண்போலக்கண்டேன்;  இன்பமும்,இனிமையும் 

நல்கும்   இருகண்ணாய் க்கண்டேன்; உன்மீது  காதலுற்ற   நான்   உன்னோடு 

கலந்து   இன்பம்  துய்க்க விரும்பி, உன் முகம்  நோக்குகிறேன்; கூர்மையான 

விழியைக்   கொண்ட நீயோ  கொல்லும்   கூரம்புபோல்  மனமும்   

கொண்டுள்ளாய் ! அந்த மனத்திலே  இன்மைமிக்க இசைபோன்ற  

கருணையைச்  சேர்த்து,  என்மீது,இரக்கம்   கொண்டு,உன்  வாயினால் 

ஒரு  நல்ல சொல்   கூறுவாய்! என்னுயிரைக்  காப்பதே   அந்த   சொல்தான்;

என்று தலைவியின்   சம்மதச்சொல்  வேண்டி நின்றான்  தலைவன்.

விளக்கம்;----   1.  மண்ணில்  நல்ல  வண்ணம் =  திருஞான   சம்பந்தரின் 

                                                                                                   சீகாழிப்  பதிகச்   சொற்றொடர்.

2.   கண்ணென==  கண்போல.  அன்று   கண்ட   கண்   இன்றும்  கண்டது;

                                      கண்பெற்ற   பாக்கியம் உன்னைக்கண்டேன் ;கண்ணைக் 

                                      காப்பதுபோல்  உன்னைக்காப்பேன்; 

3.  பண்ணிசைத்து =  மனம்,எண்ணிட,  வாய்  இசைக்கும்  இனிய சொல்.

                                            சைவ  அடியார்கள்  இசைத்த   பண்   பலப்பல 

                                            நன்மைகளைப் புரிந்தன ;  அவைபோல்   உன்வாய் 

                                           அருளும்   சம்மதச்சொல்  என்  உயிர்   காக்கும்.

  மெய்ப்பாடு.........  அழுகை'

               பயன்............ ஆற்றாமை உணர்த்தல் .

                                        24,  நாணிக்கண்  புதைத்தல் 

                                                           கொளு 

பேதையைப்     போற்றிப்   பெரும்புகழ்   கேட்டவள் 

கோதை    நாடிக்     குலமன    நாணுற்றாள் .

பொருள்;------    தன்னை   மிகவுயர்த்திப் பேசி  நலம்   பாராட்டிய  தலைவன் 

புகழ் மொழியைக்   கேட்டதும், தனியே  நின்றிருந்த   தலைவி, பெண்மைக்கே 

உரிய  நாணம்  கொண்டு, அங்கு  மலர்ந்திருந்த  மலர்க்கொடியைப் பற்றிக் 

கொண்டு, மறைந்து   வெட்கித்தலை குனிந்தாள்.

                                                                      பாடல்--41.

தணிகை         மலையான்     தவழ்புகழ்   மணிச்சொல்    நலம்கேட்டுத்

தணியா      நாணத்தாள்     கொடிக்குலம்     மறைந்த    குணம்போல ,

அணியழகே!     அடைக்கலம் ;  அடிதாழ்    அவ்வுரை    கேட்டுப் 

பிணிநாண்    வெட்கமுற ப்  பெருஞ்சோலைப்  புதருள்     மறைந்தாள் .

                                                                 பொருள்.

        வள்ளிமலையிலே   வந்து, தன்னைக்கண்டு,  காதல்மொழி பேசித் 

தன்னோடு  ஆட்டிப்பாடிய  தணிகைவேலன், இன்பப்புணர்ச்சி  

நிகழ்ந்தகாலை,  வள்ளியின்   நலம்   பாராட்டினான்;  அந்தப்  

புகழ்ச்சொல்லைக் கேட்டுப்  பெரிதும்   நாணமும்,வெட்கமும்   அடைந்த 

வள்ளிப்   பிராட்டியார்,  ஓடிப்போய்   தளிர்க்கொடிகள்   சூழ்ந்த  புதருள் 

தன்னை  மறைத்துக்கொண்டு   நாணியபடி  நின்றாள் , அதுபோல 

       அணியே!   அழகே!   உனது   அடைக்கலம்  நான்;  நீபார்க்காவிடில், 

மொழி   பேசாவிடில்  நான்   வாழேன்;  எனத்தன்னை   வியந்து   பாராட்டிய 

தலைவனின்   புகழ்மொழிகளை க்    கேட்டு, குலக்குணமாம்  நாணம் 

அடைந்த   தலைவி, அச்சோலையில்    பின்னியிருந்த   கொடிப்புதருள் 

தன்னை  மறைத்துக் கொண்டாள்; 

விளக்கம்..1. தவழ் புகழ் மணிச்சொல் =   தணிகையான்   நாவிலே   தவழ்ந்த 

                                                                                      வள்ளியின்  நலம் பாராட்டிய  சொல்;

2. கொடிக்குலம் =   அடர்ந்து  நெருங்கித்  தவழும்  பசுமையான  கொடிகளின் 

                                          கூட்டத்தொடர்.

3.  அணியழகே! =  தலைவியின்  நலம்  பாராட்டும்   தலைவன்,  அணியே!                                                     

                                       அழகே ! என  வருணித்தல்.

மெய்ப்பாடு..... அச்சம்;

            பயன்......   ஆற்றாமை  நீங்குதல்.

                             25.கண்  புதைக்க   வருந்தல் .

                                            கொளு 

வேற்கண்  வீச்சால்  வீழ்த்தும்    விரிவே!

கூற்றாம்  மேனி  கூற்றும்     ஆகும்.

பொருள்;-----நாணத்தால்  கண்ணை மறைத்துக்கொண்ட  தலைவியைப் 

பார்த்துத்   தலைவன்   தனது  ஆற்றாமையைக்கூறல் ;  வேல்போன்ற  

கண்ணினால்   என்னை   வெற்றிகொள்ளும்  அழகின்  விரிவே!  கருணை 

அளித்த  கண்ணையும்   மறைத்த  நீ  கூற்றம்போல்   என்னை   அழிக்கும் 

மேனியையும்   மறைத்துவிடு !  என   விரக்தியில்  கூறினான்.

                                                    பாடல்----42.

பேருருவம்   காட்டியும்   மாறாத  சூரன்  பொல்மனமும் 

நீறாகி    நிலைமயில்   சேவலருள்   தணிகைப்    பேறு;

ஏருழு    வயல்போல்    இருகண்ணும்   மறைத்த   திருவே !

சீர்மேனி    போர்த்திடின்   தீர்ந்திடுயிர் ; கார்மனம்  கசிக.

                                                 பொருள் 

  தனது   விஸ்வரூப [பேருருவ]  தரிசனம்   காட்டியும்  மாறாத  இரும்புமனம் 

கொண்ட  சூரபத்மனும்,   மனம்  உருகிப்பொடியாகுமாறு அவனுக்கு 

அருள்புரிந்து,மரமான   அவனுடலை  இருகூறாக்கி,அதனை,மயிலும் ,

சேவலும்  ஆக்கி,நாளெல்லாம்   தன்னருகே   இருத்திப்   பேரருள் வழங்கிய 

தணிகையான்  கருணை  போல,

       கூர்மையான  ஏர்கலப்பைக்  கொழு   கொண்டு  வயலை   உழுதல்போல் 

கூர்மையான  உன்னிருகண்ணால்   என்னை வீழ்த்தியபின்னும், அருள் 

புரியாமல், அக்கண்ணின்  ஒளியையும்   மறைத்துக்கொண்ட   தலைவியே!

உன்கணனோடு   உனது   செம்மேனியையும்   மறைத்துக்கொண்டுவிடு !

இன்முகம்,உன்திருமேனி  காணாத   இவ்வுயிர்   மாளட்டும்; கடுமை 

புரியினும்  கருணை  கொண்ட உன்மனம்  எனக்கு   அருள் புரியுமாறு 

குளிர்ச்சி   அடையட்டும்.  என விரும்பிப்   புலம்பினான்.

விளக்கம்[----  1. பேருரு =  சூரனின்  மனம்  நன்னிலை  கொள்ள  முருகன் 

                                                      அருளிய   விஸ்வரூப  தரிசனம்.

2.  பொல்மனம் =    ஆணவம்  கொண்ட சூரனின்   அரக்க மனம்.

3.  பேறு ====    கொடிய   சூரன்   பெற்ற   நன்னிலை;பாக்கியம்.

4.   ஏருழுவயல்===    கூர்மையான  கொழுவால்   வயலை  ஏர்  உழுவதால் 

                                          கடினமான  நிலம்   மென்மை   பெற்று விளைநிலம் 

                                          ஆகிறது; அதுபோல்   உனது  கண்களின்    பார்வை 

                                           சுட்டாலும், காதல்  என்னும்  செழுமையைத்   தரும்.

மெய்ப்பாடு....... அழுகை.

           பயன்..........ஆற்றாமை   உணர்த்தல் .

                                                 26.  நாண்   விட   வருந்துதல் .

                                                                       கொளு .

நாடனின்   நாடல்   நன்மகள்   மனத்தை 

வாட்டவே  விட்டனள்;   நாணம்;  விரிமுகம்.

பொருள்= =    தலைவனின்   நிலைகண்டு,  அவன்மொழிந்த  மொழிகேட்டு ,

மனம்   கசிந்த   தலைவி,  தன்னோடு    ஒன்றிநிற்கும்   நாணத்தை  விட்டுவிட்டு 

மலர்ந்த  முகத்துடன்  சற்றே  தலைவனை   நோக்கினாள் .

                                                                 பாடல்===43.

வந்த       வேடன்   தணிகையான்   தந்தமலர்ச்     சந்ததங்கள்  

வந்தனை,    வள்ளி      வளநாணம்   விலக்கிணை   பந்தம்போல்,

சிந்தனை,    செயலெலாம்   தலைவி    சொந்தம்    என்றுநின்ற 

சுந்தரன்    விந்தையில்   முந்தைநாண்   சிந்தை   தவிர்த்தனளே .

                                                      பொருள் 

  வள்ளிமலை  வள்ளியைத்    தேடி   வந்த   மாமுருகன், காடுமேடெல்லாம் 

அவள்   காதல்   பார்வை வேண்டி  சுற்றிச்சுற்றி   வந்தான்; மலர்கள்,

தழையாடை, போன்றவற்றைக்    காணிக்கையாக்கினான்;  மலரடி 

வீழ்ந்து  வணங்கினான்;  இ வைகளை   எல்லாம்   ஒருங்கே   நோக்கிய  வள்ளி 

தன்னோடு  பிறந்த   தன்குலப்  பெருமை மிக்க   நாணத்தை   மெல்ல 

விட்டுவிட்டு  அவனோடு   இணைந்து  காதல்மொழி  பேசி, உறவான 

தன்மை போல,

        மலைநாடனாகிய    தலைவனும், தனது   எண்ணம், மூசசு,  செயல் 

எல்லாம்  தலைவியே;  அவளே   என்  உறவு; என்று  நினைந்து, நாளெல்லாம் 

தினைப்புன   வாயிலில்   மறைத்தபடி நின்று  தவம் கிடக்கும் விந்தையைப் 

பார்த்தாள்   தலைவி. தன்னை   அடக்கி    ஆளும்   தன்னோடு பிறந்த 

நாணத்தைத்   துறந்தாள் ; நாணை  மனதைவிட்டு  அகற்றி   அவ்விடத்திலே 

தலைவனை   இணைத்தாள் ; கொடிப்புதர்  வெளிவந்து  மெல்லிய   புன்னகை 

வீசினாள் .

விளக்கம்==  1, வந்த= =  வள்ளியின்  பெருமை  கேட்டு, வள்ளிமலை   வந்த ;

2.  சந்ததங்கள் = =  காதலிக்குத்   தலைவன்   தரக்கூடிய தழையாடை, மலர்கள்,

                                        இன்னும்  பற்பலப்   பரிசுப்பொருட்கள்.

3.   இணை  பந்தம் = =  முருகனின்  காதலை   ஏற்று ,அவனோடு   இணைந்து 

                                               துணைவி  ஆனாள் .

4.விந்தையில்  = =-   மலைநாடன்   தன்னிடம்  காட்டிய   பண்பில், பணியில் '

மெய்ப்பாடு..........   அழுகை 

             பயன்..........    ஆற்றாமை   நீங்கல் .

                                     27. மருங்கணைதல் .

                                                      கொளு .

சிற்றிடை   நோகும் !  செந்தேன்   வண்டுகாள் !

நற்றவள்   கூந்தலைப்    பற்றியே   நெருங்கினான்.

பொருள்;----    தலைவியின்   குறுநகைப்   பொருளுணர்ந்த   தலைவன்,

சற்றே   தலைவியிடம்   நெருங்கி,  அவளது    கருங்கூந்தலில்   மொய்க்கும் 

வண்டுகளைநோக்கி,  வண்டுகளே!   கூந்தலில்  தேன்  சுவைக்க  அமர்ந்து  

தலைவியின்   மெல்லிடை   துன்புறுமாறு   பாரமாக   அமராதீர்கள் !

என   வண்டுகளை   விரட்டுவான்போல  அருகு,சென்று   அணைத்தபடி 

இன்பத்தொடல்   [சுகஸ்பர்சம் ]  புரிந்தான். 

                                                பாடல்---44.

அருளண்   ணன்கருங்     களிறு    நெருங்கிடத்    திருமார்பில்   

பெருமுலைத்      தழுவச்சம்  மருங்கணைத்    தணிகை   போல ,

அருநிலவு    முகமோ?  இருள்பூ    விழியோ?  என்றுரை 

மருதன்     நெருங்கியே     அணைந்து    மகிழ்முகம்    நோக்கினான்.

                                                       பொருள் .

    வள்ளிமலையிலே   வள்ளியை  நாடிச்சென்ற    தணிகையான்  வள்ளியின் 

கருணைப்பார்வை   கிடைக்காமல்   வருந்தித்    தன்   அண்ணன்   விநாயகப் 

பெருமானை   நினைந்தான்;  அவர்   அருளால்   வள்ளியின்முன்   பெரிய  

 யானை ஓடிவர   அஞ்சிய  குறமகள்  முருகனின்   மார்பிலே  தனது  

மார்பகங்கள்   பதியுமாறு,  அச்சத்துடன் சாய்ந்து  கட்டிக்கொண்டாள்.

அவளை  அப்படியே   அணைத்துக்கொண்டு   மகிழ்ந்த  தணிகை 

முருகன் போல ,

      தலைவியின்   மெல்லிய  புன்னகையைக்  கண்ணுற்ற  தலைவன், 

அப்படியே     தலைவியின்    அருகே சென்று,  இந்த   அழகிய   முகத்திற்கு,

நிலவு   உவமை  ஆகுமோ?  இந்த   கருணை   வாய்ந்த   குளிர்ந்த  கண்களுக்கு 

நீலக்கருங்குவளை மலர்   உவமை   ஆகுமோ?  என்று   பேசியபடியே 

தலைவியின்  பக்கத்தில் சென்று, தொட்டபடிப்   பேசினான்;  இதனை  அவள் 

ஏற்றுக்கொள்கிறாளா?  என்பதுபோல்   பார்த்தான்; அம்முகம்  மகிழ்ச்சி 

முகமாகக்   கண்டான்.

விளக்கம்---  1.அருளண்ணன்  =  விநாயகப்பெருமான்.

2..  திருமார்பில்   பெருமுலைத்தழுவு ==  காமாட்சி  அம்மையின்   முலைக்குறி 

                                                                                     வளையல்குறி  பெற்ற   தந்தை ;

                                                                                      தானும்   வள்ளியின்   முலைக்குறி 

                                                                                       பெற்றார்  .

மெய்ப்பாடு........   உவகை.

             பயன்..........   சார்தல் .

                                                                    28.இன்றியமையாமை   கூறல்.

                                                                                   கொளு .

வேலன்    தொண்டன்     வாலை    தமக்கு,

நாளும்   எமக்கு    நல்வடிவே    நற்றுணை.

பொருள்;---   காலம்காலமாய்  முருகனைப்  போற்றும்   அடியனான   எனக்கு,

இன்பம்வழங்கி,  என்னை மகிழ்ச்சி  மயமாக்கும்   உன்மொழி,இதழ், 

கொங்கை  என்னும்  வசீகர   வடிவே  துணை  ஆகும்; இவைகளையும்,

உன்னையும்   ஒருபோதும்   பிரியேன்"  என்று இன்றியமையாத  துணை 

ஆகிய   தலைவியிடம் போற்றும் முகத்தான்   தனது   பிரிவையும்  நினைவு 

கூர்கிறான் தலைவன்.

                                                        பாடல்---45.

குறமகள்       குவியிதழ்,  கொழுந்தேன் , குணக்கனி,  கூட்டும், 

சிறப்பே    சிந்தனை   விருந்து"  அறத்தணிகை  சொல்போல்,

 குறைமதி,   சிறைமுலை ,  மறைமடு ,  கொண்டு,   வென்றிடும்,

நிறையே!  நீயே   எனக்கெல்லாம்; நித்திலன்     நெகிழ்ந்துரைத்தான் .

                                                  பொருள் 

    வள்ளிமலைக்   குறத்தியோடு   இன்பம் துய்த்தபின்  தன்வாழ்வில் 

இன்றியமையாத   இடம்பெற்ற   வள்ளியைக்   குவிந்த   கோவைப்பழம்போன்ற 

இதழை   உடையவளே!  அவ்விதழில்    ஊறும்  இனிமைமிகுந்த  தேன்  

 சுவையே ! பரம்,  அபரம்   என்ற ஞானத்தை   உள்ளடக்கிய   மார்பகங்களை 

உடையவளே!  இவைகளெல்லாம்   ஒருசேர்ந்து, உருவாக்கிய  இனிமைச் 

சிறப்பை  எனக்களித்த,  என்மனதில்   மகிழ்ச்சியை    விருந்தாய்  அளிப்பவளே!

என்று நலம்பாராட்டிய  தணிகை   வேலனது   செம்மைமிகு  சொல்லைப்போல 

          மலைநாட்டுத்   தலைமகனும், தலைவியைப்   பாராட்டி,  அவளே  

தனக்கு   அனைத்துமாய்  விளங்குகிறாள்   என்கிறான்;  

மூன்றாம்பிறைச்சந்திரன்   போன்ற நெற்றியையும், கச்சையால்  சிறை 

வைக்கப்பட்ட   மார்பகத்தையும், மறைந்து   விளங்கும்   அல்குலையும்,

கொண்டுள்ள நீ    வென்றாய்  அழகை;அத்துடன்   என்னையும்   வென்றவளே!

அனைத்தும்  நிறைந்தவளே !   எனக்கு    எல்லாமும்   நீயே    ஆவாய்;  

உன்னைவிட உயர்ந்த பொருள்  உலகில்   எனக்கு   எதுவும்  இல்லை.   என த் 

தூய்மைமிக்க   தலைவன்  நெகிழ்வோடு   உரைத்தான்.

விளக்கம்.....1 ..  குணக்கனி =  குணங்களைக்   கொண்டுவிளங்கும்  

                                                              கனிபோன்ற  முலை  உடையவள்; உருவகம்.

                                                               பரம்,   அபரம்   என்ற  ஞானங்களைக்  

                                                                கொண்டவை. இரு மார்பகங்களும்.

2.  அறத்தணிகை =  அறத்தின்   தலைவனாம்   முருகன்   வீற்றிருக்கும்  

                                           தணிகை . 

3..சிறைமுலை =  மார்பில்   கட்டப்படும்   கச்சை   என்னும்   அணியால் 

                                    வெளியே  வர,[பிதுங்க] முடியாமல்    அடக்கிக்  கட்டப்பட்ட 

                                     சிறை   வைக்கப்பட்ட   மார்பகம்.

4. நெகிழ்ந்துரைத்தான்=  உணர்ச்சிவயப்பட்டு  அழகை  விவரித்தான்.

                                                      அவளை விட்டு  விரைவில்   பிரியப்போகிறான்;

                                                        அதனை   மனதிற்குள்   அடக்கியபடி  வெகுவாகப் 

                                                     பாராட்டினான்.

மெய்ப்பாடு......உவகை.

            பயன்.......நயப்புணர்த்தல்.

                                                   29.   ஆயத்து    உய்த்தல் .

                                                                    கொளு .

மனம்நிறை    தலைவியை   மகிழாயம்   சேர்த்தது .

பொருள்;---    மகிழ்வோடு   தன்னோடு  இணைந்திருந்த   தலைவியை,

எப்பொழுதும்   மகிழ்வோடு   விளங்கும்   அவளது   தோழியர்   கூட்டத்திலே 

சேர்த்தது .

                                               பாடல்---46.

தனிவேல்     தணிகை     அணிச்சோலை  முல்லை    மணம்விரிய 

நனிமாலை        நல்வண்ண  மலர்க்கூட்டம்   இணைப்பது   போன்று ,

தனியாம்       தன்னுயிர் ,   தளிர்மேனித்      தண்ணணங்கைத் ,  தலைவன் 

பனிமலர்!   பைங்காவல்     பசுமை   ஆயத்துச்   சேர்க  என்றான்.

                                                     பொருள்.

      நிகரில்லாப்    பெருமையிலும்,  அழித்தபின்னரும்    அருள்புரியும் 

கருணையிலும், மூவேழ்  உலகிலும்   தனிப்புகழுடன்    விளங்கும்    வேலைக் 

கையிலேந்திய  முருகன்  வீற்றிருக்கும்   திருத்தணிகை    மலையில் 

அணியாய்   விளங்கும்     சோலையிலே   பூத்த    முல்லை மலரை, அதன் மணம் 

சிறக்கவும்,  பாதுகாப்போடு  இதழ்விரித்து  மணம்   வீசவும், பலப்பல    வண்ண 

மலர்களோடு   இணைத்துக்   கட்டிப்   பாதுகாப்பதுபோல.

        தனியாக    வந்து,  தன்னோடு  இணைந்து , உறவாடிய  தனது  

உயிர்போன்றவளை, அழகிய   மேனிகொண்ட  தெய்வத்தை, மலைநாடனான 

தலைவன், எனது   இனிய   மலரே! நீ    உன்னை நன்கு   பாதுகாக்கும்,  உனக்கு 

நன்மை   புரியும்  உனது   தோழியர்   கூட்டத்தோடு   சேர்ந்து கொள் !

என்னை விட்டுப்பிரியும்   உனக்கு   அவர்களே   உற்ற   துணை    ஆவார்கள்!

என்று   ஆயர்கள்   கூட்டத்தோடு  சேர்த்துவிட்டான் .

  விளக்கம்.....1.  தனிவேல்===    நிறைய  தேவர்களிடம்   வேல்  இருந்தாலும்,

                                                              முருகனது  கைவேல்   தனிச்சிறப்பு   பெற்றது;

                                                              நிகரற்றது; அன்னையின்  தவத்தால்  உருவானது 

2.  தனியாய்= =   தன்னைக்காணத்    தனியே   வந்தவள் தலைவி; தன்னோடு 

                                  தனியே   இருந்தவள்;  இனி  அவள்  பாதுகாப்போடு இருக்க த் 

                                  தோழியர்   கூட்டத்தோடு   இருக்கவேண்டியவள்.

3. பைங்காவல்= =  தலைவியின்   நல்ல  பாதுகாவலர்கள்  தோழியர் கூட்டமே;

                                      நட்பும், ஆதரவும்  கொண்டு விளங்கும்  கூட்டம்.

மெய்ப்பாடு......     பெருமிதம்.

              பயன்.......    பிரியலுறும்   தலைமகன் வற்புறுத்தல் .

                                           30.  நின்று    வருந்துதல்.

                                                                  கொளு .

ஆயத்துச்    சேர்த்தோன்   அம்பொழில்   அகலா 

அருமை   எண்ணி  நின்று   நினைந்தது. 

பொருள்;----   தோழியர் கூட்டத்தில்   தலைவியைச்    சேர்த்த   தலைமகன் 

அப்பொழிலோடு   ஒன்றிவிட்ட   தலைவியை  நினைந்து,  பிரிய மனமின்றி 

வருந்தியது.

                                                       பாடல்....47.

மனமெல்லாம்   மாமுருகுத்   தணிகை   மாண்புறு     முதலும்,

மனமெல்லாம்     மாசாகி   மதியிலார்  தாமுறு    அழிவும்,

குணமாம்   பிணையைக்     கனியைக்    காரிருளைக்  கற்பகம்வாழ் 

மணச்சோலை  இணைந்தால்,  துறந்தால்  பிறப்பதால்   பிரியேன்.

                                                          பொருள் 

  மனமெல்லாம்   தணிகையில்   வீற்றிருக்கும்  மூவர்க்கும்   முதல்வனான 

முருகனை, நினைந்து,வழிபட்டால்   அழிவில்லாத  முத்தியும் , 

போகபோக்யங்களும் ,  கிடைக்கும்;

       மனத்திலே     ஆணவ,மாயக்   கன்மம் கலந்திட, அழியும்  பொருட்களின்  

மீதே    ஆசை கொண்டு,  முருகனை  வணங்கிப்   போற்றாத   அறிவற்ற 

நெறியுடையார்   அழிவினையே    அடைந்திடுவார்.

விளக்கம்;------    1.  மாண்புறு  முதலும்=   சிறப்புமிக்க ,அழிவற்ற  முத்தி,

                                                                                   போகபோக்யங்கள்.

2. மாசாகி =    ஆணவம்,கன்மம்,மாயை   என்ற  மாசிற்கு   அடிமையாகி.

3.  இணைந்தால்=   நாடியடைந்தால் 

4.  துறந்தால்=  பிரிந்துசென்றால்.

5.  இணைந்தால்  முதலும்,  துறந்தால்   அழிவும் "   எனக்கூட்டிக் கொள்க.

        மெய்ப்பாடு..........     அழுகை.

                  பயன்.............   ஆற்றாமை நீக்குதல்.

  அதுபோல .

          உயரிய   பெண்மைக்குணங்கள்   நிறைந்த  மான்போன்ற  தலைவி;

கனியன்ன    செவ்விதழாள் ;  கார்மேகஒளிபோன்ற  குழலுடையாள் ;

எனக்கு  எல்லாம் நல்கும்   கற்பகம்  போன்றாள் ;  குடியிருக்கும்  இந்த 

சோலையைத்    தழுவிநின்றால்    நன்மையெல்லாம்   கிடைக்கும்;

       இச்சோலையைப்    பிரிந்துசென்றுவிட்டால்    தீமையும்,  அழிவுமே 

வந்துசேரும்;   ஆதலின்   இச்சோலையை  விட்டுச்  செல்லேன்; என் 

தலைவியையும்   விட்டு நான்  பிரியமாட்டேன்"  எனத்    தலைவன் 

கூறினான்.

                                           பாங்கற்கூட்டம்   முற்றிற்று.

                                             3.     இடந்தலைப்பாடு 

  தலைவன்   தலைவியை    முதன்முதலில்    சந்தித்த  இடத்தில்   மீண்டும் 

சந்திக்க   முற்படுதலே   இடந்தலைப்பாடு   ஆகும். 

    இது இயற்கைப்புணர்ச்சிக்குப்   பின்  நிகழ்தல்  உண்டு.  மாணிக்கவாசகர் 

இதனை பாங்கற்கூட்டத்தின்  பின்னரே  அமைத்துள்ளார்;  அவர்வழி  சார்ந்து 

அடியேனும்   அப்படியே   அமைத்துள்ளேன்;  

    பொழிலிடைச்சேறல்   என்னும்   ஒரே  துறையைக்கொண்டது  இது.

                                              3--1.  பொழிலிடைச்   சேறல் .

                                                                கொளு 

மதிமுகத்    தலைவியை,   மலர்முகச்  சோலையில் 

அதிரணி    ஆடல்    கூடத்தில்   காண்பனே .

பொருள்;---  நிலவன்ன   முகம் கொண்ட  தலைவியை, முன்பு   கண்டுபழகிய 

மலர்கள் நிறைந்த  சோலையின்   ஆடுகளத்தில்   மீண்டும் சென்று  

 காண்பேன்"  என்று     எண்ணியபடித்    தலைவன்   பொழில்   நோக்கி  

நடந்தான்.

                                                      பாடல்---48.

காலம்     கணித்த      காதலைக்    களைநீக்கிப்   பயிராக்க,

ஆலமாம்;   ஆலம்     அமுதான     அறவழித்     தணிகைக் 

கோலமகள்   குறவள்ளிச்    சோலை  மால்தரு    மனத்தை 

ஏலக்குழலி   இடையொளிர்  இன்பச்   சூழல்   பதிப்பேன்.

                                                  பொருள் 

    எனக்கும், என்தலைவிக்கும்     ஏற்பட்ட   காதல்  காலத்தால், விதியால் 

உருவானது;  அக்காதலை   எனது   முயற்சியால்  மென்மையாக   வளர்க்க,

பிரிவு,  துயரம்   போன்ற  களைகளை   நீக்கிவளர்ப்பேன்;  அது   ஆலமரமாய் 

வம்சம்  வளர்க்கும்   மரமாக  வளரும்.  

       நஞ்சையும்     அமுதாக  மாற்றி   அருந்தி   உலகைக்காத்தவனின்  

அறவழிகளை   அவர்வழியிலேயே    வளர்க்கும்  மகன்   திருத்தணிகையில் 

வீற்றிருக்கும்    முருகனது.மனம்    கொள்ளை   கொண்ட  குறமகளாம் வள்ளி 

அருள்பாலிக்கும்    தணிகைச்   சோலை   செல்வேன்;  மயக்கம்   தரும் 

மனக்குழப்பங்களை  நீக்கிவிட்டு, அச்சோலையில்   முன்னர்க்    கண்ட 

அந்தத்   தலைவியின்   நறுமணம்  மிக்க   கூந்தலின்  நறுமணம்   உணர்வேன்;

மெல்லிடையையும்,  அங்கே   ஒளிந்து  ஒளிர்விடும்    இன்பத்தையும் 

உணர்வேன்;  அவளது   அழகிற்கு   எனது   வாடிய  மனதை நீக்கிய  மகிழ்ச்சி 

உணர்வுகளைக்    காணிக்கை  ஆக்குவேன்;   அது   என்   காதலை  மீண்டும் 

வளர்க்கும்"   எனத்    தலைவன்  கூறினான்.

விளக்கம்----   1.  களை  நீக்கி= =  பயிரைப்பாதுகாக்கக்    களை  எடுத்தல்;

                                                                    காதல்  பயிர்  வாழ , பிரிவு, துயரம்,                                                                                                காலம்தவறுதல்    போன்றவற்றை நீக்குதல்.

2.  அறவழி= =  தந்தையாகிய   சிவபெருமானின்    அறவழிகளை    மகனும் 

                              மேற்கொள்ளல்.

3.  மால்தரு= =  மயக்கம்,கலக்கம்  போன்றவற்றைத்   தரும்   மனத்தை  நீக்கி.

                               என்பது  ஒருபொருள்;  இதனையே  மால்தரு    குறவள்ளி  என 

                               கொண்டுகூட்டாகப்  பொருள் கொண்டால்   திருமாலின் 

                              மகளாகிய   வள்ளி"  எனவும்  பொருள்  கொள்ளலாம்.

மெய்ப்பாடு..........    பெருமிதம்.

            பயன்...........   இடம்  தலைப்படுதல்  .

                                               4,மதியுடம்படுத்தல் .

மதி=    தோழியின்    அறிவை 

உடம்படுத்தல்  =  தன்காதலுக்குத்    தலைவன்  பயன்படுத்திக்   கொள்ளுதல்.

1.  இயற்கைப்புணர்ச்சியில்    தெய்வத்தின்    அருளால்  தலைவன்   தலைவியைக் கூடினான்;

2.   இடந்தலைப்பாட்டில்    பாங்கன்    உதவிடத்   தலைவன்   கூடினான்.  

3.   தோழியைத்  துணையாகக்கொண்டு   களவொழுக்கத்தை  நீளச் 

       செய்தல்   மதியுடம்பாடு   ஆகும்.  பத்துத்    துறைகள்  கொண்டது.

                                                  4.    1.   பாங்கியிடைச்   சேறல் 

                                                                            கொளு 

உள்ளக்     குறிப்பை    உணர்சொல்லில்    உரைத்து,

நல்லதோழி    நல்லுதவி   நாடுவோன்   நடந்தான்.

பொருள்;----     எனது    தலைவியோடு   மீண்டும்   உறவை   வளர்க்க த் 

தோழியின்   உதவியை    நாடிட  விரும்பிய  தலைவன்   அவளிடம் 

உள்ளக்குறிப்பை   எடுத்துரைப்பேன்"   என்று   தோழியை  நாடிச்சென்றான்.

                                                    பாடல் ---49.

முன்னம்   தனியேதான்    அன்னம்    கண்டவன்  வண்ணமறிய 

பொன்னிளம்    தோழியைப்    புகலுற்ற    தணிகை   மன்னன்போல் 

கன்னல்     கனிச்சுவை    மின்னலிடை     என்னவளைப்     பின்னும் 

நண்ணிடவே    நற்றோழி    நல்லுதவி   பெறுவேன்  என்றான் .

                                                            பொருள் 

     வள்ளிமலைச்சாரலிலே   தினைப்புனம்    காக்கும்   வள்ளிப்பிராட்டியை 

அங்கு    சென்றவுடன்  பார்த்து,   இந்த  அழகு   அன்னம்   தனியே   நிற்கிறதே.

அதன்   ஊர்   எது?  பேர்   என்ன?  அதன்  குணநலன்கள்   எப்படிப்பட்டது? 

என்றெல்லாம்  அறிய விரும்பிய    வேடனாகிய    முருகன் ,   அவளது 

அன்பு கெழுமிய   தோழியை   அறிந்து, அனைத்தும்    அறிந்திட, அத்தோழியை 

அடைக்கலம்  அடைந்து  வள்ளியம்மையின்    குணநலன்கள்    அறிந்த 

தணிகைப்  பிரான்  போல,

      இவனும்,   நானறிந்து   சுவைத்த   கரும்புச்சாறு,  சுவைமிக்க   கனியினிமை,

மின்னலென்னும்படியான  இடையைக்கொண்ட    என்  தலைவியை,  மீண்டும் 

அணுகிப்   பழகி  இன்பம்  துய்க்கவேண்டும்   என்ற எண்ணமுற்ற   தலைவன்,

அவளை    அடைந்திட    அவளின்   உயிர்த்   தோழியை    அடைந்து, அவளைப் 

புகழ்ந்து, அவளையே   பற்றுக்கோடாகக்   கொண்டு, தலைவியை   நான் 

அடைவேன்"   என   மனத்தில்  கூறிக்கொண்டான்.

விளக்கம்;---1.முன்னம்= =  முன்பு;   வள்ளிமலை  நாடிவந்த  அந்த                                                                                        முதற்பொழுதில் 

2.  வண்ணம் = =     வள்ளி பற்றிய   அனைத்துக்  குண நலன்களும், 

3.  நல்லுதவி =  =   தலைவியின்   குண   நலன்கள்,  தினைப்புனம்    காக்க 

                                    வருதல்,  துணையாக    வருவோர்  போன்றவற்றை  

                                  நன்கு விளக்குதலே   பேருதவி.

மெய்ப்பாடு.....  அழுகை    சார்ந்த   பெருமிதம்.

            பயன்.......     தோழிக்கு    உணர்த்தி, அவளால்   முடிப்பேன்"  என 

                                      ஆற்றாமை    நீங்குதல். 

                                               4.2. குறையுறத்துணிதல் .

                                                                கொளு 

பொழிலிடையே   எழிலிருவர்    இணைந்து   இருக்க,

அழிமனம்    அவரிடம்      மொழிந்திட்டான்  மலைநாடன் .

பொருள்;---    சோலைப்பொழில்களுக்கிடையே   தலைவியும்   அவளது    உயிர்த் 

தோழியும்   உலவிவர, இருவரும்   சேர்ந்து வரக்கண்டு,  தனது  பிரிவுத்   துயரை 

அவர்களிடம்   மலைநாட்டுத்தலைவன்   கூறலுற்றான்.

                                                 பாடல்----50.

சினம்மிகு   வள்ளியும்,  செவ்வுயிர்த்    தோழியும்   சேர்ந்துவர ,

மனக்காதல்  உரைத்து,   மகிழ்முகம்   நோக்கிய  தணிகை,

வனப்பூ   வண்ணமாம்    தனக்கொப்பாள்  எனநினை  தலைவி

குணமறி    சீர்நாடன்   கொடுந்துயர்  கூறிட  முனைந்தான் .

                                                    பொருள் 

    வள்ளிமலையிலே   பலகால்   காடும்,மேடும்   காதல் வள்ளிவதனம்   நோக்கி,

அலைந்தவன்,  தன்பின்னால்   சுற்றுகிறானே ,  சுற்றத்தார்   பார்த்திடின் 

தீமை வருமே  என்றஞ்சிய   வள்ளி   மிகுந்த  சினத்துடன்   செல்ல,

அவளது  நன்மை   நன்கு  காக்கும்   உயிர்தோழியும்   உடன்  செல்ல,

 அக்காட்சி  கண்ட   வேடமாமுருகன்   தணிகையான் , தனது   மனத்திலே 

தோன்றித்    தன்னைப்   பாடுபடுத்தும், காதலை  விரிவாக   எடுத்துரைத்தான்;

அந்த  மகிழ்ச்சிமிக்க  வள்ளியின்  முகத்திலே   தோன்றக்கூடிய  மகிழ்ச்சியை 

எதிர்நோக்கி   நின்றான்;  அதுபோலவே,

           காட்டுப்பூ   போன்று, வளத்தோடும்,  தடுப்பார்   இல்லாமலும்   வளர்ந்த 

நல்லுடல்,  அழகு, அறிவு,இவைகளோடு   விளங்கும்   தனது  

மனதிற்கொத்தவளாகிய  உயிர்தோழியோடு செலவத்தைக்   கண்ட  

 தலைவன்,  இவளோ   அவளின்  உயிர்த்தோழி ! அவ்விருவரையும்  ஒருங்கே 

கண்டுவிட்டேன்;   எனது   மனக்காதலை,  அதனால் வந்த   மனத்துயரை 

அவ்விருவர்முன்    எடுத்தியம்புவேன்; என்றபடி,அவர்கள் முன்   வந்து 

நின்றான்.

விளக்கம்;---1.  சினம் மிகு =  தன்னையே    சுற்றிச்சுற்றி வரும்   வேடனாகிய  

                                                          முருகனைக்   கண்டாலே   சினம்; வேடர்களால் 

                                                        அவனுக்கு    வரும்    துயரை    அறியாது வருகிறானே 

                                                         என்னும்   அன்புசார்ந்த   சினம்.

2.  மகிழ்முகம்=  =     தானுரைத்த    காதல்  அவள்முகத்திலே  தோற்றுவிக்கும் 

                                         மகிழ்வை  எதிர்பார்த்து  அந்த  முகமகிழ்ச்சியை 

                                         ஆவலோடு   எதிர்பார்க்கும்  முருகன்.

3.  தனக்கொப்பாள் ==    உயிர்த்தோழி   தனக்கு   நிகரானவள் ; எண்ணத்திலும்,

                                                 செயல்பாட்டிலும்  தன்னோடு    ஒத்தவள்"  என 

                                                  நினைத்தாள்   தலைவி.

4.  சீர் நாடன்==பெருமையும்,  சிறப்பும், செல்வ வளமும் நிறைந்த   மலைநாடன். 

   மெய்ப்பாடு........  அழுகையைச்   சார்ந்த பெருமிதம்.

              பயன்..........   மதியுடம் படுத்தற்கு  ஒருப்படுதல் .

                                                     4.3.வேழம்  வினாதல் .

                                                                           கொளு 

ஆழவகல்   மனக்காட்டில்   வேழமொன்று   சூழவந்ததோ?

ஏழிசையீர்!  வாழிய  நும்புகழ் . வாய் திறவீர் !

பொருள்; -----     ஏழு  சுரம்போல்   இனிமையாய்ப்   பேசும்  இனிய   குரலை 

உடையவர்களே!  நீண்டும்,  அகன்றும்   விளங்கும்    ஆழ் மனம்போல்   

விளங்கும்   இந்தக்  காட்டினுள்   என்னால்   எறியப்பட்ட   வேலினை 

ஏற்று,அஞ்சி   ஓடிவந்த   யானை  ஒன்றைக்   கண்டீரோ?  நிறைந்த  புகழுடைய 

பெண்களே!  உமது    வாய்  திறந்து   சொல்லுங்கள்!   எனத்    தலைவன் 

தலைவியிடமும்,தோழியிடமும்   சேர்ந்து  வினவினான்.

                                                   பாடல்--51.

அடியவர்   தேடியலை   அருளளி   ஆன்ற   தந்தைபோல் 

துடியிடை   புனத்துக்    கொடிமான்  தேடிவந்த  மகன்போல் 

கொடிமின்னல்   மேகச்   செடிமலர்கள்  நெடிமுன்னம்   நேயன்

வடிவேல்      நடுப்பாய்ந்த      கடிக்களிறு   கண்டீரோ?   என்றான் .

                                                         பொருள் .

   தன்னை   விரும்பிப்போற்றும்    அடியவர்கள்  வீடுதேடிச்சென்று, அவர்களது 

பிறவித்துன்பத்தை   நீக்கிட  அலைந்ந்துதிரியும்   மிக  உயர்ந்த   பண்பு 

கொண்ட   தனது    தந்தையாகிய    சிவபெருமான்போல,

     வள்ளிமலைக்கானகத்தில்   தினைப்புனம்  காக்கும்  வள்ளியைத் தேடி 

அங்கு  வந்து,   அவளின்  காதலைபெறுவதற்காக தினைப்புனத்துள்  நுழைந்து,

எனது  மான்;  நான் விரட்டிவந்த    மான்;  இங்கு  வந்ததோ?  என  வினவி,  அதன் 

வழியே  பிராட்டியைத்  தன்வயப்படுத்திய   தணிக்க முருகன்போல,

  நமது   மலைநாட்டுத்தலைவனும்   கொடிமின்னல் போன்ற   தலைவியும்,

கார்மேகம்போன்ற   தோழியும்   காட்டுமலர்களாய்   விளங்கிய  

அக்காட்டினுள் சென்று,   அவர்கள் முன்   நின்றபடி.  நறுமணம்   கமழும் 

மலர்போன்றவர்களே! இவ்வழி   என்னால்  வேல்பாய்ச்சப்பட்ட  கொடிய 

யானை   ஒன்று   வந்ததோ?   அதனை   நீவிர்   கண்டீரோ?  என 

வினவினான். 

    அவர்களைத்   தொடர்பு   கொள்ளத்     தலைவன்  யானையைப் 

பயன்படுத்தினான்.

விளக்கம்;----   1.  இரண்டு   உவமைகள். "  அடியவர்  தேடியலை   அருளளி 

ஆன்ற   தந்தைபோல்"   என்ற உவமை   

"துடியிடை  புனத்துக்   கொடிமான்  தேடிவந்த   மகன் "  என்ற பொருளுக்கு  

உவமை   ஆகிவருகிறது.

2.  "துடியிடை   புனத்துக்   கொடிமான்   தேடிவந்த  மகன்போல"

என்ற  உவமை,

"கொடிமின்னல்  மேகச்   செடிமலர்கள்  நெடிமுன்னம்  நேயன்,

வடிவேல்  நடுப்பாய்ந்த   கடிக்களிறு "  என்பதற்கு  ஆகும்.

அடியவரை   ஆண்டவன்  ஆட்கொள் வதும்,  

வள்ளியை   முருகன்    ஆட்கொண்டதும்,   ஆன்மிகப்   பேருண்மை;

தடுத்தாட்கொள்ளுதலே     தந்தையாகிய   சிவபெருமானுக்கும்,

தணிகை  மகனாகிய   முருகனுக்கும்  தலையாய   கொள்கைகள்   ஆகும்.

                                                   4.4. கலைமான் வினாதல் .

                                                                    கொளு .

மான்விழி   மங்கையரிடம்   மான்வருகை  வினாதல்.

பொருள்;----   மானின்  விழிபோல்  அழகுக்கண்ணுடைய  தலைவி,

அவளுடைய தோழியரிடம், அங்குவந்த   தலைவன், என்னம்பு  பட்டு 

வருந்தும்  நடையுடைய   மான்  ஒன்று   இவ்வழி   வந்ததோ?  என 

வினவினான்.

                                                      பாடல். 52.

மான்மகள்    தேடி,  மானேந்தி  மகனவன்   வேடனாகி,

மானதையே   தேடி   ஆடிய    தீந்தமிழ்த்     தணிகையில்,

மான்விழி      மங்கையீர் !    கூன்வில்சரம்    தாங்கிய         மானொன்று ,

வான்தோய்      மின்னலாய்த்    துள்ளிவரக்    கண்டீரோ?   வாய் திறவீர்!

                                                  பொருள் 

  திருமாலின்  மகள்   மானின்  மகளாகத்    தோன்றி, உனக்காக  

வள்ளிமலையில்   வாழ்கிறாள்"  என்று   கூறிய  நாரதன்   சொல்  கேட்டு,

மானைத்    தன்கரத்திலே   வைத்திருக்கும்  சிவபெருமானின்   மகனாகிய 

முருகன்,  வேடனாக   மாறி,  அந்த  வள்ளிமானைத்    தேடி  வந்து, 

காடுமேடெல்லாம்   அவளோடு   சுற்றி, அவளையே  மணந்துகொண்ட 

திருவிளையாடல்கள்    நடத்திய   தமிழ்ப்போற்றும்   திருத்தணிகைச் 

சோலையில்,

    உலவுகின்ற   மான்போன்ற   கண்களை   உடைய   பெண்களே!  எனது 

வில்லால்  அடிக்கப்பட்ட  அம்பினைத்   தாங்கிய  மான்  ஒன்று,

நிலத்திற்கும்   வானத்திற்கும்   மின்னல்போலத்  துள்ளி  ஒடி  வந்ததைக் 

கண்டீர்களா?  திருவாய்  திறந்து   விடை   கூறுங்கள்!  எனத்தலைவன் 

தலைவியிடமும்,    தலைவியைச்   சார்ந்துநின்ற  தோழியிடமும் வினவினான்.

விளக்கம்;---  1.  மான்மகள் =   மால்+ மகள் =  திருமாலின் மகள் .

                                                                சாபத்தினால்  மானான  இலக்குமியின்  மகள் .

                                                                 மான்போன்ற  மகள் "  என                                                                                                               உவமைத்தொகையாகவும்  கொள்ளலாம்.

2.  கூன்வில்சரம்  =  வளைந்த   வில்லில்  பூட்டப்பட்ட   அம்பு.

3.வான்தோய்  மின்னல்  =   வானமேகத்திடையே   தோன்றும்  மின்னல் ஒளி.

                                                        அதுபோல்  நிலத்தில்  தொட்டு, வானில்  தாவும் 

                                                       மிக விரைவான  துள்ளல்  உடைய   மான்.

4.  இப்பாடல்    சொற்பொருட்பின்வருநிலையணி  ஆகும்.

                                               4.5. வழி வினாதல் .

                                                         கொளு 

தோழியின்  மாறுபாடு   நாழிகை   மாற்றிட,

வாழியீர்!   வாழும்   பதிவழி   வினாவினான் .

பொருள்;---    களிறும்,மானும்  பற்றி  வினவிய   தலைவனின்  வினாவில் 

வேறுபொருளைத்    தோழி   உணர்ந்ததை   அறிந்த  தலைவன்  அதனை  மாற்ற 

பெண்களே!   தாங்கள்  வாழும் ஊருக்குப்   போகும்   வழி   யாதோ?  அதை 

நான்   அறியலாமோ?  என வினவினான்.

                                                   பாடல்...53.

மறைந்தான்;  மரமானான்;   மதிமுகத்தான்; முதியோன் ; மூவர் 

நிறையானான்  நிலையாமோ?    மருண்ட  தணிகை    வள்ளிபோல் 

மறைமருள்      தோழியின்  மனமுணர்   தலைவன்  மங்கையீர் !

அறைக !    மரைவாழ்  குவளைசேர்   குலத்தூர்  நலவழி .

                                                  பொருள் 

    என்னைத்தேடி   தினைப்புனம்   வந்தான்; எனது   உறவினர்கள்  

வந்துவிட்டால்   மறைந்துவிடுவான்;   ஒரு   சமயம்  என்தந்தை,மற்றும் 

உறவினர்கள்   வந்து   சூழ்ந்தகாலை  நின்ற  இடத்தில்   மரமாக   மாறி 

நின்றான்;  நிலவு   போன்ற   முகமுடைய  அழகன்;  அவனொருனாள்  

கிழவனாக   மாறிநின்றான்; மூவர்களான   அரி,,அயன்,சிவன்   என்னும் 

மூவரும்  போற்றும்   நிறையாக   விளங்கினான்; நிலையானவனோ?

ஏமாற்றுக்காரனோ? என்றெல்லாம்  மருண்ட   திருத்தணிகை  வள்ளி 

போல,

     தலைவியின்    தோழியும்  என்னைப்பற்றி  மருண்டு  மாறுபட்ட  கருத்தைக் 

கொண்டுள்ளாள்;  என்பதை  உணர்ந்த  தலைவனும்,களிறு,மான்,  போன்ற 

வினாக்களை  வினவாமல்,   அழகிய   பெண்களே!தாமரையும்,  குவளையும் 

போல்  விளங்கும்   செலவியரே! நல்ல  குலத்து  உதித்தவர்களே!  தங்கள் 

வாழும்   ஊரின்  பெயரென்னவோ? அருள்கூர்ந்து   சொல்லுங்களேன்!  என 

வேண்டினான்.

விளக்கம்;----  1. மரமானான்=   தினைப்புனத்திருந்த   வள்ளிக்கு   உணவு  

போன்றவை   கொண்டு        அறிவிப்பு    இல்லாமல் வந்த   தந்தை  

 நம்பிராசனைக்   கண்டதும்  ஒளிய    இடமில்லாமல்  நின்ற   இடத்திலேயே 

மரமாகிப்  போனான் வேட முருகன். 

2.   முதியோன் =  மறுநாள்   குடிலுக்குள்   வள்ளியருகே   வேடன்  நின்றிருந்த 

பொழுது,   தந்தையும்,உறவினரும்  வந்த   காலை, வேடன்   முதிய  கிழவனாகி 

நின்றான்;

3.  மறை,மருள்  தோழி =     தலைவனின்   களிறு  கண்டீரோ?  

மானைக்கண்டீரோ?  என்னும்   வினா  நிகழ்வால்   மருண்டு   போன 

மனத்தை ,   வெளியே  காட்டாமல்   விளங்கிய  தோழியை   அறிந்த 

தலைவன்.

                                                   4.6. பதி   வினாதல் .

                                                           கொளு .

தோழியின்   துணைவேண்டி   வாழியூர்ப்    பெயர்கேட்டு 

ஏழிசைத்       தலைவியை    இணைந்திட   முயன்றான்.

பொருள்;----   பெருமை  மிக்க   தலைவியை  அடைந்து  இன்பம் துய்க்க 

விரும்பிய  தலைவன், அதற்கான   துணையாகத்   தோழியை  நாடினான்;

பெண்களே!  நீங்கள்  வாழும்   ஊர்  எது?  அதன்பெயரை  அடியேன்  தெரிந்து 

கொள்ளலாமா?  என வினவினான்.

                                                   பாடல்--54.

வள்ளிமா    மலையை    உள்ளிய  கள்ளன்நான்   புதியவன் 

முள்ளில்லா   மூதூர்வழி   முன்னுரை   என்றுரை   தணிகை

உள்ளமோ?   இல்லமோ?  அள்ளித்தரின்   தொல்லன்பு   வல்லதாம்;

நல்லூர்     நற்பெயர்     நானறிய    நன்மொழி    நவின்றிடு .

                                                 பொருள் 

  தணிகை   மாமலையான்   தன்னுள்ளம்   கவர்ந்த   வள்ளியைத்தேடி 

வள்ளிமலை   சென்று,  அவளின்   முன்னும்பின்னும்  சுற்றிவந்தகாலை,

குறமகளே !  உன்னைத்   தேடிவந்த  காதற்கள்ளன்  யான்; இந்த 

மலைக்கும், இடத்திற்கும்   புதியவன்; உன்னைப்பார்க்க    உன்னூர் 

வரவிரும்பின்,  வழி  தெரியாது; ஆதலின்   உனது   ஊரின்   பெயர்,

செல்லும்நல்ல வழி போன்றவற்றை   எனக்கு   எடுத்துரைப்பாய்!

என்று  வேண்டினான்.  அது போன்றே ,

             தலைவியின்   காதலைப்  பெறத்    தோழியின்  உதவியை   நாடிய 

தலைவன், தோழியே!  தலைவியின்    உள்ளம்,   தலைவியின்   இல்லம் 

இரண்டுமே   எனக்கு வேண்டும்; உன்வழியில்   அது கிடைப்பின் 

தொன்மைக்காதல்  வளரும்; அவ்வகையில்     நான்   தலைவியின்   ஊர் 

செல்ல , ஊர்ப்பெயர்,செல்லும் வழி   போன்றவற்றை நின்   திருவாயால் 

சொல்வாயாக!   என  வேண்டினான்.

விளக்கம்;----   1.கள்ளன்=  வள்ளியின்  உள்ளத்தைக்  கொள்ளை  கொண்டவன்;

                                              அடியவர்களின்  உள்ளத்தைக்  கொள்ளை   கொண்டவன்.

2.  புதியவன்=   இம்மலைக்குப்   புதியவன்;  இத்தொழிலுக்குப்   புதியவன்;

3.  உள்ளமோ?  இல்லமோ? =    உள்ளம்=   தலைவன்   குடியிருக்கும்                                                                                                                   தலைவியின் மனம்.

                                                             இல்லம்=   தலைவி  குடியிருக்கும்  வீடு.

                                                     4.7. பெயர்   வினாதல் .

                                                             கொளு .

ஊருரையாப்     பேரழகியர்   பேர்கேட்டான்   சீர்தலைவன்.

பொருள்;---      அழகியர்   இருவரும்   ஊர்   பற்றி   ஒன்றும்   உரையாத  

நிலையில்   அவர்களின்   இனிய   பெயர்களை  உரைக்குமாறு   விரும்பி,

வேண்டினான்  பெரும்புகழ்த்தலைவன்.

                                                       பாடல்--55.

திரைகடல்    அமுது,,  நரைமலர்   நன்மணம்  நின்னலம் ;

மறைவழி     மாப்பெயர்    விரும்பித்   தணிகை      கேட்டதுபோல்,

தரைப்பெயர்   உரையாத்    தவழழ   குடையீர் !  தருமப் 

பெரியவர்   இட்டநல்   லரும்பெயரைக்     கூறுக   என்றான்.

                                                     பொருள் 

  குறமகளே !  நீ   கடலிலே   தோன்றிய   அமுதம்  ஆவாய்;  தேன்சொரியும் 

மலர்க்கூட்டத்தின்   நறுமணம்  ஆவாய்;  ஆயினும்   உன்னை   நான்  விரும்பி 

அழைக்க  உன் பெற்றோர்  பெயர்சூட்டு  விழா     மறைவழி  நடத்தி, உனக்குப் 

பெயரிட்டார்களே ,  அந்த   அழகுப்  பெயரை   எனக்கு  அறிவிப்பாயா?  எனக் 

கேட்ட   தணிகை  வேலன்போல,

     தலைவனும்,  நிறைந்த   அழகுமிகுந்த   பெண்களே!   உமது   ஊர்ப்பெயரைத் 

தான்   சொல்லவில்லை; உங்களுக்கு  ஊர்ப்பெரியவர்கள்   ஒன்றுகூடி  

நாமகரணம்"   என்னும்  பெயர்சூட்டுவிழா   நடத்தியிருப்பார்களே  , அன்று 

அவர்கள்   உங்களுக்கு   சூட்டிய   அழகுப்பெயரை  எனக்குக்  கூறுங்கள்;

அப்பெயரை  உச்சரித்து  நான்   நன்மை  அடைகிறேன்"  என்று வேண்டினான்.

விளக்கம்;-----   1.  நரைமலர்  =  தேன்சொரியும்  மலர்.

2.  நின்னலம்  =  குறமகளே 1  உனது   அழகு  அமுதுபோன்றது; மலர்மணம் 

                                 போன்றது;  ஆயினும்  அழைக்க  ஒரு  பெயர்  வேண்டும். 

3.  தருமப் பெரியவர்  =  ஊருக்கு நன்மை   புரியும்   அறவழிச்  சான்றோர்.

                                                     4.8.மொழி    பெறாது   கூறல்.

                                                                 கொளு .

அன்னம்    போன்றோர்   அசையா    நாவால்,

மன்னன்   வருந்தி    தன்னுரை   சாற்றியது.

பொருள்;----    விடுத்த  வினாக்களுக்கு     விடையும்   பகராமல் , வேறெதுவும் 

கூறாமல்   மௌனம்   மேகொண்ட அவ்வழகுப்   பெண்களால்   மனம் 

வருந்திய  தலைவன்  மீண்டும்   பேசலுற்றான்.

                                                         பாடல்---- 56.

கலிவெண்பா    பாடியோன்     கனிவாய்   திறக்க   அருளிய,

மலைத்தணிகை,  பேசாக்     குலமான்    நிலைக்கு    நொந்ததுபோல் ,

பலகேட்டும்     பதிலுரையாப்    பாவையர்   பண்பால்    வருந்தி,

வளமுத்து       வரிசை    வாயசைப்பின்    வசையாமோ?  என்றான்.

                                                          பொருள் 

     ஐந்து  வயதுவரைப்    பிறவி  ஊமையாய்   இருந்த  குமரகுரு   தன்முன் 

நின்று    தன்னிலை  கூறமுடியாமல்   தவித்த   காலை, அவன்   வாயிலில் 

கலிவெண்பா"  என்னும்  கவிதை  மழையைப்   பொழியச்செய்த  ,

திருத்தணிகை  வேலன்   செந்த்தூரில் அருளிய  முருகவேடன் , 

    தான்    பலப்பல  கேட்டும்    பதில்  உரையாத  குறவள்ளியின்   நிலைகண்டு,

மனத்துயர்   உற்றதுபோல  ,

           பொதுவாகவும்,குறிப்பாகவும்   பலப்பல   கேட்டும்,  எவ்வித   விடையும் 

அளிக்காத  தலைவியையும்,தோழியையும்   கண்டு,  தலைவன்  வருந்தினான்.

மீண்டும்   தானே  பெண்களே!  முத்துக்களின்   வரிசை போன்ற  பற்களுடைய 

உங்களது   வாயைத்    திறந்து  பேசினால்   குற்றமாமோ?  துயருடன்  கேட்டான்.

விளக்கம்;-----  1.கலிவெண்பா =  வெண்தளை     சிதையாத  முருகன்   புகழ் 

                                                                     பாடும்  பாடல்.

2.  கனிவாய் =  காய்போல   பலனின்றிப்   பேசமுடியாத  வாய்;  அதனைக் 

                               கனியவைத்த   முருகனின்  அருள்.

3.  குலமான்  =  குறவர்  குலத்திலே  தோன்றிய  மான் மகள்   வள்ளி;

                                மான்போன்ற  வள்ளி.

                                                9. கருத்தறிவித்தல்.

                                                            கொளு 

பலபல     சொல்லியும்,  பலனிலாது    போகவே,

உளத்தொளி   கருத்தால்   பூந்தழை    அளித்தான்.

பொருள்;----     களிறு,மான்,  எனப்  பலவாறு  பேசியும்   பலன்   இல்லாது 

போகவே, மனதுள்  ஒளிந்திருந்த  கருத்தை   வெளிப்படுத்த  நறுமணமிக்க 

பூந்தழையைத்    தலைவிக்கு    அளித்தான்.

                                             பாடல்---57

தணிகைச்       சோலைத்   தளிர்மலர்த்     தழையுடை   தரித்திட 

வணியாகும்   ஏற்க !  மணிமார்பன்    வள்ளிக்    களித்ததுபோல்,

இனிமை    பகரா     நனியவர்   கனி,கரு      விடங்கள் 

குணியாக்கும்   தனித்தழை    ஆடையை  உளத்தோ   டளித்தான்.

                                           பொருள் 

  வல்லியே!  தணிகைச்சோலையிலே   மலர்ந்த  மலர்த்தழைகளால்  உருவான 

இததழையாடை  உனது  மேனிக்கு  மேலும் அழகு சேர்க்கும்   அணியாக 

விளங்கும்;   இதனை    அன்போடு   ஏற்பாய்!  என  மலைநாட்டு  வள்ளிக்கு 

மாமுருக   வேடன்   அளித்த   அன்புபோலத் 

      தலைவனும்,  தனது    வினாக்களுக்கு   விடை  ஏதும்  அளிக்காமல்  

மௌனியாக    இருக்கும்   தலைவியையும்,  தோழியையும்  பார்த்து,

"உங்களது  கனிபோன்ற முலையையும்,  கருவுருவாகும்  அல்குலையும்,

மறைத்து,  அதன் மகிமையை  மேலும்  பரப்பும்  சிறப்புமிக்க  நல்லாடை;

தனிக்கச்சோலைத்    தளிர்களாலும்,  தழைகளாலும்   உருவாக்கப்பட்ட 

இவ்வாடையை   ஏற்றுக்  கொள்வீர்களாக "  என்று  உளத்தமைந்த 

கருத்தோடு   அளித்தான்.

விளக்கம்;------   1.கனி,கரு =   மார்பகம்,மறைவிடம்.  உம்மைத்தொகை.

2,  குணியாக்கும்  =  மேலும்  சிறப்புடையதாக்கும் .அவைகளின்  உயர்ந்த 

                                         குணங்கள் {தோற்றமும், ஆற்றலும்] மேன்மை  கொள்ளும்.

3.  உளத்தோடு  =  மனத்தில்    மறைந்துள்ள காதலை  வெளிப்படுத்தும்  நிலை;

                                                   10.  இடைவினாதல் 

                                                               கொளு .

ஊரும்    வழியும்    உரையா   நிலையில் 

கார்குழல்   நேரிடை   வியந்து  மொழிதல்.

பொருள்;-----   தலைவன்   தலைவியிடமும்,  தோழியிடமும்  அவர்களது 

ஊர்,போகும் வழி   போன்றவற்றைக்  கேட்டும், விடையளிக்காத   சூழலில் 

அவர்களது   அழகை, இடையை   வியந்து கூறி   அவர்களது   அ ன்பைப்பெற 

முனைகிறான்.

                                            பாடல்--58.

திருப்பரங்     குன்றமதில்    விருப்போடு   தேவாள்,   தெய்வச் 

செருக்குடை   வள்ளியைத்   திருத்தணி      கையிலும்    போற்றியோன் 

அருளடித்       தலைவன் ,  பொருள்நிறை   பூரிப்பு   முலைகளின் 

பெருமைச்      சுமையால்  உருவிலாச்    சிற்றிடை   அழகென்றான்.

                                                  பொருள் 

     இந்திரன்   போர்ப்பரிசாக    அளித்த   அவனது   மக்கள்   தெய்வயானையை 

அளிக்க,  மணந்துகொண்ட   அவளை  விரும்பிப்   போற்றிய  முருகன்,

திருத்தணிகைக்கு   வந்த   தெய்வத்தன்மை  பெற்ற  பேரருளால்  மகிழ்ந்த 

வெள்ளியையும்  பாராட்டிப்  பேசினான்;

    அவனருள்  பெற்ற    தலைவனும்    அவனைப்போலவே   தனது  காதலியை,

பெண்ணே!    உனது   மார்பகங்கள்    அருளாலும்,பொருளாலும்  மிக நிறைந்து,

அளவுகடந்த   பூரிப்பினால்  விம்முகின்றன; பெருமை   மிக்க   அவைகளின் 

சுமையைத்     தாங்கமுடியாமல்   உனது     சிற்றிடையோ உருவிழந்து,

வலுவிழந்து  இல்லாததுபோல்   ஆகிவிட்டது; அதுவே    உன்   அழகிற்கெல்லாம் 

அழகாக    விளங்குகிறது   என்று   போற்றினான்.

விளக்கம்;---- 1. தெய்வச்செருக்கு =  குறத்தியான  வள்ளி, தெய்வாம்சத்தை

முருகனிடமிருந்து   பெற்றாள் ;  அதனால்    ஏற்பட்ட  மகிழ்ச்சி.

2.  பொருள்நிறை  =  உடற்கூறும், உயரருளும்,  உள்ளத்தில்  ஞானமும்                                                                  நிறைந்த தன்மை.

3.  உருவிலா =   இல்லாததுபோல்    தோன்றும்  உருவமற்ற  தோற்றம்.

                                            மதியுடம்படுத்தல்   முற்றிற்று.

                                    5.இருவரும்   உள்வழி    அவன்    வரவுணர்தல் 

         யானை கண்டீரா?   மானைப் பார்த்தீரா ? என   வினவும்  தலைவன் 

நிகழ்வை.  மனதுள் எண்ணி,  அவனது கருத்தை உணர்ந்துகொள்ளும்  தோழி.

இரண்டு பிரிவுகளை   உடையது.

                                             5. 1.ஐயுறுதல் .

                                                     கொளு .

பைந்தழை      கொண்டு,   பன்முறை  தொடரும் 

வைவேலன்     யாரோ?  நைந்த னள்     தோழி.

பொருள்;-----   நானும் என்  தலைவியும்    இருக்கும்    தனியிடம் 

அறிந்து, கையில்   பசுந்தழையோடு   அடிக்கடி   வரும்   இந்த   வேலன் யாரோ?

எதற்காக   இப்படிப் பலமுறை   இங்கு   சுற்றுகிறான்?  எனத்   தோழி  

ஐயுற்றாள் .

                                                     பாடல்---59.

புனத்தே    நுழைந்து,  புன்னகை   கூட்டிடும்     புதுமகன் தான்   ,

வனமகள்   வள்ளியைக்    காண  வந்தவனோ?என்றையுற்ற

புனத்துணை   போன்று  மனத்தழைக்    கையுடன்  மணமலர் 

இனவண்டு      போல்வரும்  இவனெவன்? ஐயுற்றாள்   பைந்தோழி .

                                                 பொருள் 

    வள்ளிமலைத்     தினைப்புனத்தே    நுழைந்தான்;   முகமெல்லாம்  

வசீகரிக்கும்  புன்னகை  புரிந்தபடி   புனத்திற்குள்ளேயே   வட்டம் 

இடுகிறான்;நாம்  இதுவரை   பார்த்திராத   புதியவனாக    இருக்கிறான்;

புனத்தில்   காவல்  காக்கும்  இவ்வனத்தின்  அதிசயமகள்   வள்ளியைக் 

காண   வந்திருப்பானோ?  என்று    ஐயுற்று, அவனைத்   தொடர்ந்து 

கண்காணித்த வள்ளியின்     தினைப்புனத்தோழி   போன்று,

      மனத்தின்    காதலை   வெளிப்படுத்தும், பூந்தழையைக்    கையில் 

ஏந்தியபடி, நறுமணம் மிக்க   மலரைச்    சுற்றிச்சுற்றி   வரும்  வண்டு 

போல. நமது   புனத்தையே    சுற்றிவரும்   இப்புதியவன்   யார்? எதற்காக 

இவ்வாறு   சுற்றுகிறான்?  எனத்    தோழி  ஐயம்  கொண்டாள்.

    நம்   தலைவியை   நாடி  வந்தானோ? என்ற   ஐயமும்  அவள்   மனத்தில் 

எழுந்தது.

விளக்கம்;----  1.  புதுமகன் =  இவ்வள்ளிமலையில்   நாம்   அறியாத  

 புதியவனாக   இருக்கிறான்; இவன் யார்?  என்ற   ஐயம் .

2. புனத்துணை =  தினைப்புனத்தே    துணையாக   விளங்கும்    தோழி.

3.  மணமலர்  இனவண்டு  =  நறுமணம்  மிக்க   மலர்களைச்   சுற்றிவரும் 

                                                           தேன்  வண்டுகள்.  மிகச்சிறியவை.

                                                          மணமலர் =   தலைவி .  இனவண்டு =  தலைவன்.

மெய்ப்பாடு............  மருட்கை.

           பயன் ..............    உசாவி   ஐயம்  தீர்தல் .

                                           5.2.  அறிவு   நாடல் .

                                                        கொளு .

தலைவன்     கேட்ட   வினாவின்    உட்பொருள் 

கலைமதிப்    பாங்கி   உணர்ந்தாள்   உயர்வை.

பொருள்;-----   தலைவன்   கேட்ட    வினாக்களின்   பொருளை  முறையே 

வரிசைப்படுத்திய  தோழி   தனது   அறிவுத்திறனால்    உட்பொருள்  

உணர்ந்தாள்.  அவனது  மன    எண்ணத்தைப்  புரிந்து கொண்டாள்.

                                                   பாடல்----60.

வந்தவன்      வள்ளிமுன்     வணக்கமாய்,   வேடர்முன்   வீரமாய்,

கந்தனாய்க்     காட்சி;   கருத்துள்ளே   ஞானவழித்     தோழிபோல் 

சந்தனமான்    யானை,  மென்தழை  மின்னிடை  வரிசையில் 

சந்ததப்     பொருளும் ,  சாத்திரம்  வியந்துளம்    உணர்ந்தாள்.

                                                  பொருள் 

       வள்ளிமலைத்    தினைப்புனத்தே    வந்தவன்   வள்ளிக்கு   முன்னர்  

சென்றுவிட்டால் , பவ்யமாய்ப்    பணிவாய், அடங்கி,ஒடுங்கி   நடந்து 

கொண்டான்;  அவனைத்   துரத்திவந்த    வேடர்கள் முன்னரோ  வீரம் 

வெளிப்படத்    துணிவுடன்  போர்  புரிந்தான்;  அன்பும்,   அருளும்  நிறைந்த 

வீரவெளிப்   பாட்டில்   கந்தனாய்க்   காட்சி   தந்ததை , மனத்துள்ளே 

கண்ட  தோழி  அறிவுசால்   உயர்நிலையில்  சிந்தித்து  முடிவெடுத்த  

வள்ளியின் தோழிபோல ,

மான்  யானை, வந்ததோ என்றபின்,  பூந்தழை  கொணர்தல்; மெல்லிடை 

வருணித்தல்   போன்ற   வரிசைமுறையை   ஆய்வு செய்த    தோழியும், 

அதனுள்   ஒளிந்திருந்த   உயர்பொருளும்,  அறிவுசார்ந்த   செய்திகளும்  கூறும் 

நிலையை  எண்ணிப்பார்த்தாள் .  தலைவனின்   அறிவுத்திறனை   வியந்தாள்.

ஐயம்   அகன்றது.

விளக்கம் .....   1.  வணக்கமாய்  =  காதலியின்  முன்  பவ்யமாய், மென்மையுடன்,

                                                                     நிற்றல் .

2.  கந்தனாய்  =   நன்மை,  தீமை  இல்லாத   இளம்  தலைவன்; பற்றற்ற   ஞானி;

3.  ஞானவழி =  அறிவு சார்ந்த    ஆய்வு வழி .

    மெய்ப்பாடு........பெருமிதம்.

                பயன்......... ஐயம்   தீர்தல் .

                                        6. முன்னுறவுணர்தல் .

தலைவிக்குத்    தலைவினிடத்தே  புணர்தல்   ஏற்பட்டதைத்    தோழி 

அறிதல். ஒரு துறை   கொண்டது .

                                        6.1.   வாட்டம்  வினாதல் .

                                                    கொளு .

தலைவியின்   தன்னியல்பு   தடமது     மாறிட,

அலைகுழல்    தோழி   அதனைக்      கூறியது.

பொருள்;----   தலைவியின்    இயல்பான    செயற்பாடுகள்   மாறிடக்   கண்ட 

தோழி  அதனைக்   கூறியது.

                                                     பாடல்--61.

மலைத்தணிகை       மகிழ்ந்து     மதியும் ,    நதியும்    ஆடிடக்  ,

கலையிழந்த    பாங்கு     கண்டுற்றேன்"  சிலைசொன்ன     செய்திபோல்  

நிலையிலா     நீள்சுகப்   பொலிவின்    புதுப்புனல் ஆட்டமோ?

தலைவியின்   வாட்டமோ?  முலைச்சிறை    முனகல் ;  அறிந்தேன்.

                                                பொருள் 

   தணிகைமலையான்   வள்ளிமலையில்    வேடனாக  வந்து  நிற்க,   அவனோடு 

தனிமையில்    மகிழ்ந்து, நன்மதியிரவிலும் , காடெல்லாம்   சுற்றிவந்தும்,

அருவியாடியும் ,  மகிழ்ந்தநேரம்,  அவன் பேருந்து சென்றிட,  அதனால் 

களையிழந்து  சோகத்தை  நான்   கண்டுகொண்டேன்; என 

வில்போன்ற  புருவம்  கொண்ட  வள்ளியின்  தோழி   கூறிய   செய்தி  போல,

             தலைவனோடு,  மலையெல்லாம்  சுற்றிவந்த  தலைவியின்   முகம் 

முடிவேயில்லாத  பெரும்  இன்பத்தின்  பொலிவைக்காட்டுகிறது; புதுப்புனலில் 

அவனோடு    ஆடிய   ஆட்டம் முகத்தில்   இன்பத்தைக்    கூட்டுகிறது.

இதோ    அவன்  பிரிந்து   சென்றுவிட்டான்;  அந்தோ!  அம்முகம்  வாடிவிட்டது;

சிறைபட்டிருக்கும்    மார்பகங்கள்  விம்மி விம்மி  முனகலை    அசைவினால் 

வெளிப்படுத்துகின்றன; இவைகளால்   தலைவனோடு   கூடிய   தலைவியின் 

செயற்பாடுகளை   நான்   அறிந்து கொண்டேன்"  எனத்    தோழி  கூறினாள் .

விளக்கம் ;-------  1. மலைத்தணிகை  = தணிகை   மலையில்   வீற்றிருக்கும்  

                                                                                முருகன்   ஆகிய  வேடன்.

2.  சிலை  சொன்ன =  வில்  போன்ற புருவம் கொண்ட தோழி   சொன்ன.

3. முலைச்சிறை =   கச்சினால்   கட்டப்பட்ட   மார்பகம்.

     மெய்ப்பாடு..........   மருட்கை.

                பயன் .............தலைமகட்கு   உற்ற    வாட்டம்    உணர்தல் .

                                                                      7.  குறையுற  உணர்தல் .

        தலைவன்    தோழியிடம்    தன்னுடைய   குறையை   எடுத்துக்கூற,

அக்கருத்தைத்     தோழி அறிதல்.  இது   நான்கு   துறைகள்  கொண்டது.

                                                 7.1.  குறையுற்று  நிற்றல் .

                                                              கொளு .

அறைகழல்    வீரன்   குறைதனைக்   களைய 

நிறைமகள்   முன்னம்    நலிந்து  நின்றது.

பொருள்;---   ஒலிக்கும்   வீரக்கழல்  அணிந்த   தலைவன்,   தனக்கு 

வாய்த்த  குறைகளைக் கூறி,  அதனிலிருந்து   விடுவிக்குமாறு 

தோழியை  வேண்டினான். 

                                                பாடல்----  62.

நெற்றிக்      கண்ணால்   நீடுசாப     நக்கீரன்  விட்டகன்றிடக் 

குற்றமென த்   தணிகை  யாற்றுப்படை பாடிய         போல ப் 

பற்றுடைக்     காதலியின்      பரிவுடைப்   பேரன்பு   வேண்டிக் 

கற்றவளே!   கரம்குவி,    கால்பணி   அடியான்   காக்க.

                                              பொருள். 

மதுரைத்   தமிழ்ச்சங்கத்தில்    தனது  பாடலில்   குற்றம்  கண்டுபிடித்த 

நக்கீரனைத்    தனது நெற்றிக்கண்   பொறியினால்  சுட்டு,திருப்பரங்குன்றம் 

சரவணப்பொய்கையில்    வீழ்த்தினார்    சிவபெருமான். சரவனத்தில் 

முருகனைப்போற்றித்     திருமுருகாற்றுப்படை   என்னும்  நூலைப்   பாடிய 

நக்கீரன்   தனது    சாபத்திலிருந்து  விடுவிக்கப்பெற்றார். தனது   குறையைப் 

போக்கவேண்டி   நக்கீரர்   பாடியதுபோல ,

        தலைவனும்,  தான்   அன்பு   கொண்ட   தலைவியின்  காதல்   பரிவையும்,

பேரன்பையும்  பெற்றுத்   தருமாறு. கைகள்  குவித்துக்    கால்களில் 

விழுந்து, நான்  உனக்கு   அடியவன்"  ஆதலின்   என்னைக்   காப்பாற்றுக "என த் 

தோழியிடம்   வேண்டினான்.

விளக்கம்....  1. நெற்றிக்கண்  =  அழித்து   அருள்பாலிக்கும்   சிவபெருமானின் 

மூன்றாவது   கண்; புருவநடுவில்   அமைந்திருப்பது; 

2.  ஆற்றுப்படை =  பத்துப்பாட்டில்   முதல்  பாட்டு ; முருகனின்    ஆறுபடை 

                                        வீடுகளின்   பெருமை   பேசுவது; தந்தை   அளித்த  

                                        சாப  நீக்கலுக்காக   மகனான  ஆறுமுகக்  கடவுளை 

                                        நக்கீரர்  பாடிய நூல்.

3.  அடியான் =  தோழியே!  உனக்கு   நான்   அடிமையாய்  விட்டேன்;  என்னைக் 

                               காப்பாய்! தன்னை   நாடிப்    பணிபவர்களைக்  காப்பது                                                 கடமை. அல்லவா! என்றான்   தலைவன்.

   மெய்ப்பாடு.......இளிவரல் 

              பயன்..........குறையுறுதல் .

                                                 7.2.அவன்  குறிப்பறிதல் .

                                                            கொளு .

தலைவன்   குறிப்பைத்    தோழி  உணர்தல்.

பொருள்;====   தலைவனின்   காத்தற்குறிப்பைத்    தலைவனது  

செய்கைகளால்     தோழி  கணித்தல்.

                                                         பாடல்--63.

காவடி,   கரகம்,  ஆட்டம்,  பண்ணிசை   அனைத்திலுமே,

சேவடி  தீக்கை,   சேர்ந்திணை  தணிகையான்   செயல்போல

ஆவியை      அங்குவைத்து,  தாவிடும்     வண்டு , மேவிடும்கார்,

பூவிதழ்    தாங்காத   மெல்லிடை  தாங்குவான்    தண்காதலை .

                                                பொருள் 

    திருத்தணிகையிலே    மாமுருகன்   வேண்டிய   அடியவர்கள்  அன்போடும்,

பக்தியோடும்   எடுக்கும்   காவடிகளிலும்,  பாற்குடக் கரகங்களிலும், 

 அடியவர்களின்    ஆட்ட    பாட்டங்களிலும்,  பண்ணிசைப்பாடல்களிலும் 

தானும்     ஒன்றி,அடியவர்களுக்குத்     திருவடி    தீக்கை    வழங்கி,

அவரோடு   இணைந்து  அருள்பாலிக்கும்   திருத்தணிகை  முருகனது 

செயலருள் போல,

        தனது   உயிரையே    தலைவியின்   மீது வைத்து, அவளது  மலர்க்குழலிலே 

மொய்க்கும்    வண்டுக்கூட்டங்களும்,  அவளைத்ததழுவியபடிச்    செல்லும் 

மேகத்தளிரும் , கூந்தலில்  வைக்கப்பட்டுள்ள  மெல்லிய பூக்களும்  கொண்ட 

சுமையை  அவள்  மெல்லிய இடை    எவ்வாறு   தாங்கும்?  என்றெண்ணி,

மெல்லிடையைத்    தாங்கிப்பிடிக்கும்  இத்தலைவன்   இவளது    காதலையும் 

தூங்குவான் " என்று அவனது   காதற்குறிப்பைத்    தோழி   உணர்ந்தாள்.

விளக்கம் ;----  1.சேவடி =  செம்மை வாய்ந்த  திருப்பாதங்கள் .

2. தீக்கை =  தொடுதல்.  காலால்  ஸ்பர்ச  தீக்கை. 

3.  பூவிதழ்  =  மென்மை   மலர்கள்; விரிந்த  இதழ்களைக்  கொண்ட மலர்.

                                                          7.3.  அவள்   குறிப்பறிதல் .

                                                                       கொளு .

தலைவியின்   உள்ளக   குறிப்பைத்    தோழி 

தலைவன்பால்   சார்ந்த    தன்மை   உரைத்தல்.

பொருள்;-----     தலைவனைப்    போலவே  தலைவியும்  அவன்பால் 

கொண்ட   அன்புநிலையைத்  தோழி  உணர்ந்து  உரைத்தாள் .

                                                         பாடல்----64.

வந்த   வேடன்    வாய்மைகள்  விரித்துரைப்பின்   வள்ளியவள் 

பந்தமாய்  மனமேற்கும்   பாங்கை    உணர்ந்த   இகுளைபோல் 

  கந்தமலர்   கைக்கொண்டான்  என்றவழி  கண்ணோ    காவியச் 

சந்தமாகும்  தலைவி   விந்தையுளம்    அறிந்தாள்    தோழி.

                                                 பொருள் 

  வள்ளிமலைத்    தினைப்புனச்சோலைக்கு   வந்தவனாகிய  தணிகை 

வேடனின்  உருவம்,வீரம், சிறப்பு  என்ற  பலவற்றைப்   பேசினால்  

வள்ளியானவள்  கூர்ந்து  கவனித்து, அதனோடு   தன்னை  ஈடுபடுத்திக் 

கொள்ளும்  அவளது   மனப்பாங்கை   அவளது   தோழி  இகுளை  நன்கு 

உணர்ந்தாள்;  அவளைப்போலவே 

  இங்கு   தலைவன்   நின்னைப்பார்க்க  வரும்காலை  

 நறுமணப்பூந்தழையாடை கொண்டு வந்தான்"   என்று   சொல்லின் 

தலைவியின்  கண்ணானது   ஒரு   காதல்    கவிதையே   பாடுகிறது;

இத்தலைவியின்   உள்ளம்  மிகமிக   விந்தையானது"  என்று அவளின் 

மனப்பாங்கை  நன்கு   உணர்ந்தாள்  தோழி.

விளக்கம்;-----  1. வந்த வேடன்  =  வள்ளிமலைக்கு  வந்த  தணிகை   வேடன் .

2.  இகுளை =   வள்ளியின்   வள்ளிமலைத்   தோழி.

3.  கந்தமலர் =  தலைவன்  கையில்  கொணர்ந்த   பூந்தழை    ஆடை.

                                               7.4.  இருவர் நினைவும்  ஒருவழி  உணர்தல் .

                                                                                 கொளு .

இருவர்    நோக்கிலும்      ஒருமை  கண்ணுறு 

பேரின்பத்     தோழி    பின்னரும்  மகிழ்ந்தது.

பொருள்;.....      தலைவன்   தலைவியைப்   பார்த்த  பார்வையிலும்,  தலைவி 

தலைவனை   நோக்கிய  நோக்கிலும்  அன்பின்  பரிணாம  வளச்சியைக் 

கண்டு    மிகுந்த   இன்பம் கொண்ட தோழி  அதை நினைந்து நினைந்து 

மகிழ்ந்தாள்.

                                                 பாடல்----65.

மன் தணிகை       விரும்பும்      தாமரை;    மரையைச்    சுற்றிடும் 

பொன்வண்டு;  பூரிப்பால்   பேரின்ப    வயப்பட்ட   கொடிச்சி;

கண்ணசைவில்   காவலனைக்     கொண்ட   காரிகை;  அவளின் 

முன்னசைவில்   முகமகிழ்   நன்னன்;   மூதின்பத்    தோழியே .

                                                  பொருள் 

      வள்ளிமலை   வள்ளிக்காக    வந்துநின்ற  தணிகையான்  என்ற  சூரியனை 

விரும்பி   மலரும்  தாமரை.{வள்ளி]  அந்தத்   தாமரையையே    சுற்றிச்சுற்றி 

வரும்   பொன்   வண்டான  வேடன்[தணிகையான் ]  இக்காட்சியைப்  பார்த்து,

மிகுந்த  மகிழ்வும்,  பேரின்பமும்   அடைந்து  மகிழ்ந்த  வள்ளிமலைக் 

கொடிச்சி[ வள்ளியின்   தோழி]

      தனக்கு    முன்னால்   நிற்கும்   தலைவனைத்    தனது    கண்ணால்  விழுங்கி,

மனத்தினுள்ளே  நிலைத்திருக்க வைக்கும்  தலைவி;  அவளது  முன்னழகும்,

பின்னழகும்   கண்டு,  உளமெல்லாம்   மகிழ்ச்சி  கொண்ட   தலைவன்;

இவ்விருவர்   மன   நிலை   உணர்ந்த   தோழியோ  இன்பமுதிர்நிலைக்குச் 

சென்று  மிக்க   மகிழ்வுற்றாள்.

விளக்கம்;---  இப்பாடல்    எடுத்துக்காட்டு  உவமை   அணியாகும்.

1.மன்தணிகை =  சிறப்புடைய    திருத்தணிகை   எனவும்,

                                    மன்னனாகிய   தணிகையான்    எனவும்  பொருள்  கொள்க.

2. மரையை  =  தாமரையை.   முதற்குறை .

3.நன்னன்  =    நன்னாடன் ;   மலைநாடன் ;  நல்லவன்.

                              குறையுற உணர்தல்  முற்றிற்று .

                                            8.   நாண     நாட்டம்.

தலைவி    தலைவனோடு   இன்பம்  துய்த்துவிட்டாள் "  என்பதையுணர்ந்த 

தோழி,தலைவிக்கு   நாணம்  ஏற்படுவது  போன்ற சில  சொற்களைக்  கூறி,

ஆராய்தல்;  இது   ஐந்து   துறைகளைக்  கொண்டது.

                                         8.1.  பிறை தொழுகென்றல் .

                                                      கொளு .

பிறைதொழுக!   குறைகள்  நீங்கும்;  பெண்மையின் 

நிறை தொட்டுத்    தோழி   மறைநாண்      கண்டது.

பொருள்;-------   அன்புதத்தலைவியே !  வானத்தே   அரிதாய்க்   காணப்படும் 

மூன்றாம்  பிறைநிலவைத்    தொழுக.  நமது   துயர்கள்  நீங்கும்"  எனக்கூறி,

ஆற்றமுடியாமல்    தவிக்கும்    அவளின்   நாணத்தைக்   கண்டது. கன்னியர் 

வணங்கலாம்;  தலைவனோடு   கலந்து,  கன்னித்தன்மை   இழந்துவிட்ட 

பெண்கள்   தனியே   வணங்கலாகாது"  என்னும்   பெண்மைத்தன்மை 

போற்றிய  நாணத்தை  தோழி   வியந்தாள்.

                                             பாடல்----66.

பிறைகண்டு     நாணுற்றுப்     பெரும்பேற்றுக்   கண்டிகைத்    தணிகை 

இறையோ     டிணைந்து   வழிபட்ட   குறவள்ளி  குணம்கண்ட,

நிறைதோழி      நித்திலமே !   நீள்பிறை  நீவணங்கு!   நன்மை 

நிறைந்திடும்;   நிலைகுலை  நற்றலைவி   நாணத்தை     நாடினாள் .

                                         பொருள் 

   காட்டிடையே  கையும்,மனமும்   கலந்து  சென்றபொழுது, வானத்தே   

மூன்றாம்    பிறைநிலவு   தோன்றிட,  நலம் வழங்கும்   அதனைத்  

தன்னோடு   இணைந்துவந்த   பெரும்பெற்றுக்கண்டிகை  என்ற  தலத்தில் 

வீற்றுள்ள    தணிகை   வேடனொடு  இணைந்து  வழிபட்டாள் ;  அவளின் 

உயரிய  குண  நாணத்தை  நன்கறிந்த   தோழி,

      தூய்மைவாய்ந்த    தலைவியே!  வானத்தே    தோன்றிவிட்ட   மூன்றாம் 

பிறைநிலாவை   நீ   வணங்கு. நமக்கு   நன்மை  நிறையும்"  என்றாள் .

சற்றே  தன்னிலை  இழந்த   தலைவி, பிறையை  வணங்காது,  நாணமுற்று 

நின்றாள்; தலைவியின்   நாணப்பொருளைத்    தோழியும்   உணர்ந்தாள்.

விளக்கம்;---1.  நாணுற்று  =  கன்னியாக  இருந்தால்  வணங்கலாம்;  தணிகைத் 

                                                         தலைவனோடு   கலந்தபின்   தனியே   வணங்கல் 

                                                         குற்றம்'  என   உணர்ந்ததால்  நாணம்.

2.  பெரும்பேற்றுக்கண்டிகை =  முருகன்   வீற்றருளும்   கோயில்களில்  இது 

  போற்றத்தகுந்த   தலம் . திண்டிவனத்துக்கு    அருகில்   உள்ளது.

3. நிலைகுலை  =  கன்னி  கழிந்து,தலைவனோடு  கூடிவிட்ட   தன்னை, நீ 

                                    பிறையை  வணங்கு  என்று   சொன்னதும்,  நிலை 

                                   குலைந்து   போனாள்   தலைவி. 

                                              8.2.  வேறுபடுத்திக்  கூறல்.

                                                              கொளு .

தலைவியின்   வேறுபாடு  கண்ட    தோழி,

அணங்கெனக்    கூறி   ஆய்ந்தனல்   மாற்றம்.

பொருள் ;----    தலைவனோடு  இன்பம்  துய்த்த தலைவியின்   உடல்நல 

வேறுபாடுகளை  உணர்ந்த   தோழி , மேலும்   அதுபற்றி   அறிய   அவளைத் 

தெய்வத்தோடு  ஒப்பிட்டு, உண்டாகும்    மனவேறுபாடுகளை    அறிய 

முற்பட்டாள் .


                                                         பாடல்--67.

வள்ளியை    மென்புணர்வு    வள்ளலை,  வாழ்த்தா    வசையுறு 

வில்வரி       வேடர்துயர்   மணந்துற்ற    தணிகை ச்   செய்கை 

நல்லிதயத்      தோழி,        வல்லவனின்    மெல்லியல்   நீராட்டம் 

தொல்லுடல்       அணங்காம் ;   நல்லவள்  புன்னகையே    விடையாம் .

                                                         பொருள் 

    வள்ளி,  மலையிலே  வள்ளியைச்சந்தித்துப்   பழகித்    தினைப்புனக்காவல் 

முடிந்ததால்  சிற்றூர்க்குத்    தேடிவந்த  பொழுது,  வள்ளியின்  தோழி  இகுளை 

வழிகாட்ட  உடன்போக்கு   மேற்கொண்ட  தணிகை  வேடன், ஆங்கு   ஒரு 

பொழிலில்  வள்ளியோடு  கலந்து,இன்பம்  காண்கிறான்; மறுநாள்  

 வள்ளியைத் தேடிக்கண்டுபிடித்தபின்   முருகனே   வள்ளியைக்   கவர்ந்து 

சென்றவன்"  என்பதை   அறிந்தும்,  அவனே   அவர்களது  கடவுள்   என்ற 

நிலையிலும்  வாழ்த்தி வரவேற்காது   வசை  பாடிட  முருகனும். மீண்டும் 

அவர்கள்  ஊர் வந்து  வள்ளியை   முறைப்படி   மணந்துகொண்ட நிகழ்வை,


                மனதெல்லாம்  நிறைத்துவைத்திருந்த தோழி, முதல்நாள்    இரவு 

தலைவனோடு,   தலைவி  மலையாற்றில்    நீராடச்சென்றதும்,  அங்கே 

அவர்கள்  ஆடிப்பாடிப்    புணர்வு   கொண்டதும்   அறிந்தாள் ;  அவ்வாட்டத்தால் 

அழகான,மென்மையான   தலைவியின்   மெல்லுடை   மாறியிருக்கக் கண்டு,

தெய்வம்  உன்னைப்  பற்றிக்கொண்டதோ ?  என வினவத்    தலைவி 

புன்னகை  புரிந்ததே  விடையாக   வழங்கத்    தலைவியின்  சுகானுபவத்தை 

அன்புத்தோழி   உணர்கிறாள்.

விளக்கம்....... 1.   வாழ்த்தா  வசை  ==   தமது  கடவுள்;  அருள் வழங்கும்   கடவுள்;

                                   அவரே  தம்  மகளோடு   உடன்போக்கில் ஈடுபட்டார்"  என 

                                    அறிந்தபின்னரும்   வேடர்கள்  வாழ்த்தவில்லை;           

                                      பழி  வந்தது    தன்குலத்திற்கு"  என  வருந்தினார்.

2.  வேடர்  துயர்  =    குலம் ,  பண்பு, இவைபற்றி  வருந்திய  வேடர்களின்  துயர்.

3.  நீரோட்டம்  =  மலையாற்றின்  நெடுநீர்   ஓடும்  அழகில்  அனுபவித்த  இன்பம்.

                                                 8.3.   சுனையாடல்    கூறி    நகைத்தல் .

                                                                கொளு .

சுனையாடிய   செல்வியை   நாணு   நகைகூறி 

விளையாடிய   திறனை  விளக்கியது.

பொருள்;----    நிலவுதித்த   நள்ளிரவில்   மலையாற்றில் தலைவனோடு   நன்நீராடிய  பாங்கை 

அதனால்   வந்த   நாண    நலத்தைக் கூறித்   தோழி  சிரித்தது.

                                                        பாடல்---68.

சரவணத்    துறவாடும்   குறமகள்    மேனி     முழுதும்,

திருநீறு   சந்தனக்    குங்குமம்   தணிகை,  கலந்தபோல்

அருமலை      ஆற்றில்    விளையாடிய மாலை   அந்தலைவன்  

விரும்பும்    வியத்தகு    வண்ணம்   வீசியநின்    உடலிலே .

                                                   பொருள் .

  தணிகையானோடு    திருத்தணிகைச்   சரவணப்பொய்கையில் 

நீர்விளையாட்டு  விளையாடிய   வள்ளியின்   உடல்  முழுவதும்,

தணிகையான்    அணிந்திருந்த   திருநீறும்,சந்தனமும்,  குங்குமமும்,

பூசிக்   கலந்ததுபோல் 

         தலைவனோடு   நீ [தலைவி]  மலைமீது   ஓடும்   ஆற்றின்   நீராட 

இறங்கி , நீண்டநேரம்    விளையாடினாய்; அப்பொழுது,  தலைவன் 

அணிந்திருந்த   நறுமணப்பொருட்கள்  எல்லாம்  உன்   மேனி 

முழுதும்   வண்ணக்காடாய்க்   காட்சி  அளித்தது.  தலைவனின் 

மேனி  வண்ணமும்  உன்  மேனியில்  பளிச்சிட்டது . எனக்கூறிச் 

சிரித்தாள்    தோழி.

விளக்கம்-----  1. உறவாடும் =  நீராடும்  

2. விளையாடிய  =  நீராடிய

3.  வியத்தகு  =  வியக்கவைக்கும்   நறுமணங்கள்;வண்ணங்கள்.

                                                8.4.  புணர்ச்சி உரைத்தல் .

                                                              கொளு 

குறிப்பால்    கூட்டம்    உணர்ந்த   தோழி 

நறுமணப்   புணர்ச்சி   உரைத்தது.

பொருள்;----   தலைவியின்   மேனி  வேறுபாடுகளால்  இருவர்தம் 

புணர்ச்சியை   உரைத்தாள் .

                                               பாடல்--69.

இகுளை    கண்ட   எழில் மேனி    வள்ளியின்   இயல்மாற்றம் 

வகுத்தான்    தணிகை   வாழ்வளி   புணர்ச்சி;  வழிவழியாய்;

மகுடியில்     மயங்கிடும்   நாகமாய்   மன்னவன்     மடியில்

உகுத்தனள்    தலைவி   நாணத்தை;  உய்த்தனள்   புணர்வென்றாள் . 

                                                 பொருள்.

      திருத்தணிகை    மேலவன்,   வள்ளிமலையில்  வள்ளியோடு  ஆடிப்பாடி 

இன்பப்புணர்வும்   கொண்டான்; அவன்   அவளுக்கு   வாழ்வளிக்கும் 

அந்தப்  புணர்வால்   அழகான   மேனிகொண்ட  வள்ளிக்கு ப்   பற்பல 

வேறுபாடுகளைக்   கவனித்தாள்   அவளது   தோழி   இகுளை . வழி வழியாய்த் 

தொன்றுதொட்ட   அந்த   நிகழ்வு,  

    இங்கும்  தொடர்ந்தது.  மகுடியின்    இசையில்   மயங்கும்   பாம்பு  போல,

தலைவனின்   இன்பியல்   நாடகத்திற்குத்    தலைவியும்  நாணத்தை  

 விட்டுவிட்டு  இன்பப்புணர்வில்   ஈடுபட்டாள் "உகுத்த  நாணம்  உய்த்தது 

தலைவன்  மதியின்பம்:எனத்தோழி   உரைத்தாள் .

விளக்கம்;---  1. இயல்மாற்றம்  =  கண்  சிவக்கும்;   உதடு   வெளுக்கும்  போன்ற 

                                                                    மாற்றங்கள்.

2. வாழ்வளி  புணர்ச்சி =   இல்லறவாழ்வை   அன்போடு   வழங்கக்கூடிய  

                                                      புணர்ச்சி.

3.  உகுத்தனள் =   பாம்பு  சட்டையை  உரித்து  ஒதுக்குவதுபோலத் 

                                    தலைவியும்   தன்னோடு   ஒன்றியிருந்த   நாணத்தை                                                       விட்டாள் .

இவை   நான்கும்   நாண   நாட்டம்  ஆகும்;  மெய்ப்பாடு......நகை.

பயன்..........கரவு நாடி உணர்தல்  இவை  நான்கும்   பெருந்திணையின்  பாற்படும் 

                                                8.5. மதியுடன்   படுதல்.

                                                           கொளு .

உயிரொன்றிய   தலைவன்   தலைவி;  உணர்ந்தாள் 

மயிலனையாள்    மதி யுடன்பட்டாள் .

பொருள்;----    உடலால்  வேறுபடினும்   உள்ளமும்,  உயிரும்   இருவருக்கும் 

ஒன்றேயாகும்;  என்றுணர்ந்த   தோழி   உறுதிகண்டாள் .

                                                    பாடல்-- 70.

மயில்சேவல்     மனைகாடு   மாறிய   இரண்டுமே   ஒன்றாம்;

உயிரால்    ஒன்றிய   உயர்தணிகை    உள்ளமது   போலவே,

பயிர்ப்பினள்     பண்பாளன்   பாங்குடலின்   பயிலுயிர்   ஒன்றே;

வெயில்நிலா   வேறிலை ;   கயல்விழிக்     காதலை    அறிந்தேன்.

                                         பொருள் 

   மயில்  சேவல்   என்ற   மாறுபட்ட  தோற்றத்தில்   சூரன்;   அரண்மனை,

காடு ,  என   மாறுபட்ட   திறன் வாய்ந்த   மனைவியர்;  ஆயினும்  

அவைகளோடு,  அவர்களோடு,  உயிரால்,  மனத்தால்   ஒன்றிய  

திருத்தணிகையான்     உள்ளம்   போலவே,

  அச்சம்,மதம்,நாணம்,பயிர்ப்பு  கொண்ட   தலைவியும்,  நிறைந்த 

பண்பாளனாகிய   தலைவனும், இருவேறு  உடல்கள்  உடையவர்கள்;

ஆனால்  இருவருக்கும்   உயிர்  உயிர்த்துடிப்பு   ஒன்றேயாகும்.

வெயிலன்ன   துன்பமும்,   நிலவன்ன   இன்பமும்  அவர்களுக்கு   வேறு 

இல்லை;  இரண்டும் ஒன்றே. இப்படிப்பட்ட   தலைவியின்   காதலை,

இனியபுணர்வை    நான்   நன்கறிந்தேன்"   எனத்தோழி   கூறினாள் .

விளக்கம்...... 1.மயில்சேவல்  =   மயிலும்,சேவலும்  ஆக   மாறிய   சூரன்.

2. மனை,காடு   =  அரண்மனை  வாசியான   தெய்வயானை ;காடு  

 காட்டுவாசியான   குற வள்ளி 

3. வெயில்நிலா   =  வெயில்=  துன்பம். நிலா=  இன்பம். 

-------------------------------------------------------------------------------------------------------















                               





                                                   


                                                    

                              

 







   










'

  



                                          



 


 



















1  










   


 


                                                 









                                              

                                                                    










 

 

     



                                                              


                     


 







 


                          






   

 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக