வியாழன், 3 அக்டோபர், 2024

VGP அணிந்துரை

செவாலியர்.டாக்டர். திரு.வி.ஜி.சந்தோசம் 

    வி.ஜி.பி.குழுமங்களின்  தலைவர்.

    உலகத்திருக்குறள் பேரவைத்தலைவர்.

    வி.ஜி.பி.சதுக்கம்  சைதாப்பேட்டை  சென்னை


                                            அணிந்துரை 


 நாகை மாவட்டம் கன்னியாகுடி என்னும் சிற்றூரில் பிறந்த திரு.சுவாமி.சுப்பிரமணியம் அவர்கள்  'ஆகமப் பிரவீணர்' என்னும் பட்டம் பெற்றவர். நல்ல தமிழறிஞர். வெண்பா வேந்தர் என்று கொண்டாடத்தக்கவர்! மதுரையிலுள்ள புகழ் மிக்க இரு மேல்நிலைப்பள்ளிகளில் மொத்தம் 34 ஆண்டுகள் அயராது தமிழாசிரியராகச் சேவை புரிந்து வந்துள்ளவர். வடமொழியிலும் புலமை மிக்கவர்!

இதுகாறும்  அவர் நூல்கள் பதினொன்றினைப் படைத்துள்ளார்! 'கன்னியாகுடிக் கந்தபுராண வெண்பா', 'நால்வர் வரலாறு', 'குமரக்குறல் வெண்பா' ஆகிய நூல்கள் அவற்றுள் சிலவாகும்.

அண்மையில், திரு.சுவாமி.சுப்பிரமணியன் அவர்கள் தாம் எழுதியுள்ள 'மகேந்திரப்புரப் பரணி' என்னும் நூலினை என்னிடம் தந்து. அதற்கோர் அணிந்துரை வழங்கிடுமாறு அன்புடன் வேண்டினார். இந்நூலின் இருபது, முப்பது பக்கங்களில் அடங்கியுள்ள பாடல்களை (செய்யுட்களை)ப் படித்த மாத்திரத்திலேயே, அவரது புலமை உணர்ந்து, நெகிழ்ந்தும் போனேன்! நூலின் கருப்பொருள் முருகன் தாரகாசுரனை அழித்ததும் சூரபத்மனை அழித்ததும் ஆகும். 

போர்க் காட்சிகளை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவது போல் நூலாசிரியர், அருமையான பாடல்களை இந்நூலில் இயற்றியுள்ளார். விநாயகருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு சிவபெருமானை வருணிக்கும் பாடல் எனது நெஞ்சையள்ளுகிறது!


"கடலமுதினை நிலைநினைப்பெறக் குலும் குலு மெனக் கடைத்திடுபவர்

 கொடுவிடம்வர, அருட்டுணையென அதைவிழுங்கிய ஆன்றோனே!

 கடல்நகரினை நிலைகுலைகென கரத்திறப்படை கலக்கியபோர்க் 

 கொடைமறவனை நிறைமனமுடன் வாழ்த்திடுகெனப் பணிவோமே."

 - என்பது தான் அப்பாடல்.

இன்னொரு பாடலில் போரிடச் செல்லும் முருகக் கடவுளை வாழ்த்திடுமாறு அன்னை பராசக்தியிடம் நூலாசிரியர் வேண்டுகிறார்! எப்படித் தெரியுமா? இப்படித்தான்!

"மலைதருமகள் மதிமுகமுடை மனமருள்மலர்;

             மகிடமதையே மருள்செயச்சிலை மழலையைக்கா;

மலைஅரியழி மகேஸ்வரன்மகன் மதகரி தனை

            மறுநொடியழி திருக்குமரனை வாழ்த்திடுவாய்.

                                            

தனதுயிர்த்துணை தனுடனேயிணை நடமிடுசுகம் 

            தருமமதனைக் கரம்தரிபணி தலைநிலைமகள்'

சினமுறுசெயல் புரியரக்கனைச் செயமடைவழி 

           சிவகுகமகன் செயித்திடவருள் புரிந்திடுவாய்."


அதுபோலவே, அவர் நான்முகனை வியந்து பாடும் பாடலும் நெஞ்சினைக் கவர்ந்து நிற்கிறது!

"முகம்நான்கும் முதுவேதம்;

           முதுஞானத் துணைவாணி ,

அகம்காண அணிபுகழே.

          அரும்பூவோன் அடிபணிவோம்.


குறிஞ்சிநின்று வயல்கண்டான் ;

              குணமுல்லைக் குலம்தொட்டான்;

வறியபாலை அரக்கர்க்கே,

            வாழ்நெய்தல் வாழ்கவென்றே."


மூலமுதல்வனாம் சிவனே ஓர் கடவுள்; சிவனும் சக்தியும் மட்டுமே இரு மூலாதாரத் சக்தியாக விளங்குபவர்கள்! மும்மூர்த்திகள் எனப்படுவோர் பிரமன், திருமால், உருத்திரன் ஆகியோராவர். வேதங்கள், ரிக், யஜுர், சாம, அதர்வண ஆகிய நான்காகும். ஐந்தொழில்கள் என்பவை, படைத்தலும், காத்தலும், அழித்தலும், மறைத்தலும், அருளலுமாகும். சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்யம், சௌரம் என்பவை ஆறு மதங்களாகும். கன்னியர் ஏழுபேராவர். பாலகர் எண்மராவர். இக்கருத்தினை விளக்கவரும் நூலாசிரியரின் பாடல் இது:

"ஒரேஒரிறை ஈர்சக்தி 

          மும்மூர்த்தி நான்குமறை 

ஐந்துதொழில் ஆறுமதங்கள் 

          எழுகன்னியர் எண்பாலகர்"

இவை போன்றே சூரபத்மனின் மகன் இரண்யனான அரக்கனைப் பற்றிக் கூறும் அழகே, அழகு!

"மறையாயிரம் முறையாயிரம்

            குறைமாயம், அறைவஞ்சம்

 துறைதூயவன் தலை மூன்றான்

             இறை சூர்மகன் இரணியனாம்"

நிறைந்த வேதம் கற்ற, பண்பாடு மிகுந்த, சிறிதளவு மாயம் நிறைந்த, வஞ்சகத்தன்மை கொண்ட, தூய்மையினைப் போற்றுகின்ற மூன்று தலைகள் உடைய அரக்கனானவன் இரணியன், சூரபத்மனின் மகன். 25 ஆம் பக்கத்தில் சூரனைக் கூறு போட்ட வேல் பற்றிப்பாடுகிறார்.

நூலாசிரியரின் கவித்திறனும் புராண அறிவும் நூலெங்கிலும் ஓங்கி நிற்கிறது! முனைவர் சுவாமி. சுப்பிரமணியனின் இப்படைப்பு பெருமைக்குரியது! இறையன்பவர்கள் படித்து இன்புறவேண்டிய நூல்! எழுத்துப்பணியில் சிந்தை தோய்ந்து, நல்ல உடல் நலத்துடனும் பொருள் வளத்துடனும் அவர் பல்லாண்டு இனிது வாழ வாழ்த்துகிறேன்!

                                            வாழ்க வையம்! வெல்க தமிழ்!


அன்புடன் 

டாக்டர் வி. ஜி. சந்தோசம் 

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக